ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஜெ,..மோடி..ஜெத்மலானி... எவரையும் விட்டுவைத்ததில்லை கரண் தபார்..!.. டிவி விவாதங்களின் அதிரடி முன்னோடி

"நான் ஆக்ஸ்போர்டில் தத்துவத்தில் பட்டயப்பயிற்சி முடித்த நிலையில் பத்திரிகைத் துறையில் எனக்குப் பணியாற்ற ஆர்வமிருக்கிறது என ஆறு ஆங்கில நாளேடுகளுக்குக் கடிதம் அனுப்பினேன். நான்கு பத்திரிகைகள் அதற்குப் பதிலளிக்கவில்லை, ஒரு பத்திரிகை என்னை ஏளனம் செய்து கடிதம் அனுப்பியது. ஒருவர் மட்டும்தான் இப்படியொரு கடிதத்தை நான் பார்த்ததே இல்லை என்று பதிலளித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். அவர்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைவர் ஹ்யூம். பத்திரிகைத் துறை பற்றி ஒன்றுமே அறிந்திராத என்னை நைஜீரியாவுக்கு அனுப்பி செய்திகள் சேகரிக்கச் சொன்னார். அவர்தான் பத்திரிக்கை உலகில் எனது குருவும் கூட. அன்று அப்படியொரு கடிதம் எனக்கு வந்திருக்காவிட்டால் நான் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்திருப்பேன்”,
"நீங்கள் பத்திரிகைத்துறையில் சேர்ந்திருக்காவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்?" என அவுட்லுக் இதழ் கேட்ட கேள்விக்கு கரண் தபார் அளித்த பதில் இது.

செய்திகளுக்கு என்றே ஐம்பதுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கும் காலகட்டம் இது. இந்தியச் செய்தித் தொலைகாட்சிகள் என்றாலே  தூர்தர்ஷன் மட்டுமே செய்திகளுக்கான ஒரே ஊடகமாக இருந்த 90-களின் தொடக்கத்தில்  அன்றைய நிலையில் பிர்லா குழுமத்தின் 'ஹிந்துஸ்தான் தொலைகாட்சி நிறுவனம்' செய்தி மற்றும் அரசியல் நிகழ்வுகளை தூர்தர்ஷன் வழியாக ஒளிபரப்பத் தொடங்கி இருந்தபோது அதன் தூணாக இருந்து அதனுடன் வளர்ந்தவர் கரண் தபார். செய்திச் சேனல்கள் உருவாக அடித்தளமாக இருந்தது இவர்கள் ஒளிபரப்பிய செய்தி நிகழ்வுகள்தான்.
அரசியல்வாதிகளுடனான நேர்முகப்பேட்டி  என்றாலே ஊடகவியலாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள் என்று இன்றைக்கு உருவாகி இருக்கும் அடையாளத்துக்கு கரண் தபார்  ஒரு முன்னோடி எனலாம். இத்தனைக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு அவர்  பி.பி.சி மற்றும் லண்டன் வீகெண்ட் ஆகிய இரு பெரும் நிறுவனங்களில் பணியாற்றியவர். அவருக்கு அங்கே பத்து வருட காலப் பணி அனுபவமும் இருந்தது. ஆனால் இந்தியா ஊடகங்களின் வழியாக அரசியல்வாதிகளை நேர்காணல் செய்யத் தொடங்கியதில் இருந்துதான் அவரது அடையாளமும் வளர்ந்தது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, மறைந்த ஜனாதிபதி வெங்கடராமன், சிவசேனா தலைவர்  பால் தாக்ரே பேட்டி என அவர் நேர்காணல் காணாத அன்றைய தலைவர்களே இல்லை எனலாம்.
ஆப்கானிஸ்தான் போர் நிலவரங்களை நேரலையில் ஒளிபரப்பியது, தான் பிறந்து வளர்ந்த மாநிலமான காஷ்மீர் பற்றிய பிரச்னைகளின் மீதான ஆழ்ந்த விசாரணை அணுகுமுறைகள் குறித்த செய்தித் தொகுப்புகளை எடுத்து ஒளிபரப்பினார். பின்னாளில் சி.என்.என், சி.என்.பி.சி, பி.பி.சி, இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியபோது மோடி, ஜெயலலிதா, ராம் ஜெத்மலானி உள்ளிட்டவர்களை பேட்டி எடுத்தபோது அவர்கள் பேட்டியிலிருந்து பாதியிலேயே எழுந்து செல்லும் நிலைக்கு ஒரு வித வீச்சுடன் கேள்விகளைத் தொடுத்தவர் கரண் தபார். அவரின் பாணியே பிற்காலத்தில் செய்தி ஊடகத்துறையில் பலர் பின்பற்றிய அடையாளமாகவும் இருந்தது.
கரணும் நிஷாவும்!
அவரது பெரும்பாலான பேட்டிகள் பாதியில் நின்று போனது போலவே, அவரது வாழ்வின் வசந்த காலமும் பாதியிலேயே முடிந்தது. 80-களில் லண்டனில் தங்கி இருந்தபோது, அங்கு வங்கி ஊழியராக வேலைபார்த்த நிஷாவை காதலித்தார் கரண். இரு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள்,  பிறகு கிறிஸ்தவ முறைப்படி அங்கேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை பத்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. 91-ல் ’என்செபாலிடிஸ்’ எனப்படும் மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் இறந்து போனார் நிஷா. கரண் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப நிஷாவின் இறப்பும் ஒருகாரணம்.
பெனாசிர் உடனான நட்பு
கரண் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு படித்து வந்த காலத்தில் கேம்பிரிட்ஜின் ஆசிய கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருந்தவர் பெனாசிர். அப்போது தொடங்கி பெனாசிருடன் கரண் நல்ல நண்பராக இருந்தார். கரணின் மனைவி நிஷா இறக்கும் தருவாயில் கரணுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அழைப்பு விடுத்து நிஷாவின் நிலைமை பற்றி கேட்டுவிட்டு கரணுக்கு மன தைரியம் அளித்துவந்திருக்கிறார். பெனாசிர் கொலை செய்யப்பட்டு இறக்கும் தருவாய் வரை அவர்களது நட்பு நீடித்தது.“பிழைப்பின் அடிப்படையில் நாம் இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்றாலும். தனிப்பட்ட முறையில் நாம் நல்ல நண்பர்கள்” என்று பலமுறை கரணிடம் கூறிவந்திருக்கிறார் பெனாசிர், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான தேசிய அரசியலில் பல முரண்கள் இருந்தாலும் இருநாட்டு மக்களிடையே இழையோடும் மெல்லிய நட்பைப் போன்று இவர்களது இழையோடி இருந்திருக்கிறது.
கரண் மீது எழுந்த விமர்சனங்கள்!
தனி மனித அடையாளங்களைத் தொடர்ந்து எழும் விமர்சனங்கள் என்றுமே தவிர்க்க முடியாதது. அந்த வகையில் கரண்தபார் மீதும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. தபாரின் தந்தை எல்லையில் ராணுவ வீரராக இருந்தவர். கூடவே காங்கிரஸ் ஆதரவாளரும்கூட அதனால் கரணும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்கிற பிம்பம் எழுந்தது. மேலும் பேட்டிகளின்போதே தலைவர்கள் அவர் மீது தீவிர விமர்சனங்களை முன்வைத்தார்கள்.  பால்தாக்ரே தனது ஒரு பேட்டியில் "நீங்கள் எதிரில் இருப்பவரை வில்லனாகச் சித்தரிக்கத் தெரிந்தவர் என்றார். ராம் ஜெத்மலானி "நீங்கள் என்றுமே திருந்தப் போவதில்லை" என்று காட்டமாக விமர்சனம் செய்துவிட்டு தன் வீடு என்பதுகூட நினைவில் இல்லாமல் பேட்டி அறையை விட்டு வெளியேறினார். "உங்களைச் சந்திப்பது என்றுமே எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று கூறிவிட்டு வேகமாக தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறினார் ஜெயலலிதா. இப்போது, இன்போடைன்மெண்ட் என்னும் தன்னுடைய நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வழியாக தான் வேலைபார்த்த அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறார்.
வெறுத்தாலும் புகழ்ந்தாலும் அரசியல்வாதிகளால் தவிர்க்க முடியாத,  ஊடகம் தாண்டிய ஒரு தனி நபர்தான் கரண் தபார்.  விகடன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக