வினவு : மே.வங்கத்தின் சிங்கூரில் டாடாவின் நானோ கார்
திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை 12
வாரங்களுக்குள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஆகஸ்டு
31-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு
தீர்ப்பளித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சிங்கூர் விவசாயிகளிடமிருந்து
பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளபோதிலும், நாடு
தழுவிய அளவில் முக்கியத்துவம் பெற்ற சிங்கூர் விவசாயிகளின் போராட்டம்
எழுப்பிய மையமான கேள்விக்கு நீதித்துறை இதுவரை விடையளிக்கவில்லை. சிங்கூர்
விவசாயிகளின் போராட்டமானது தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற
முடியாமல்போயுள்ளதோடு, அப்போராட்டத்தைச் சட்டவாதத்தில் மூழ்கடிப்பதுதான்
இப்போது நடந்துள்ளது.
< நிலப்பறிப்புக்கு எதிராக சிங்கூர் விவசாயிகளின் போராட்டம். (கோப்புப்படம்)
சிங்கூர் நிலப்பறிப்புக்கு எதிரான வழக்கானது இரண்டு முக்கிய
விவகாரங்களைக் கொண்டதாகும். ஒன்று, போலி கம்யூனிச இடதுசாரி அரசாங்கம்
டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்ததைப்
பற்றியது. இரண்டாவது, விவசாயிகளின் போராட்டத்தைத் தனது அரசியல்
ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டு 2011-இல் ஆட்சிக்கு வந்த மம்தா
பானர்ஜி தலைமையிலான அரசாங்கம், சிங்கூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி
அளிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து டாடா நிறுவனம்
தொடுத்துள்ள வழக்கு பற்றியது. முந்தைய ‘இடதுசாரி ‘அரசுடன் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலமானது தனக்குச் சொந்தமானது
என்றும், மம்தா அரசின் சட்டமானது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் டாடா
நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளது.< நிலப்பறிப்புக்கு எதிராக சிங்கூர் விவசாயிகளின் போராட்டம். (கோப்புப்படம்)
தற்போது, சிங்கூரில் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதைப் பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா, அருண் மிஸ்ராஆகியோர் வெவ்வேறு காரணங்களைக் கூறி தனித்தனியாகத் தங்கள் தீர்ப்பை எழுதியுள்ளனர். நீதிபதி கோபால கவுடா, “1894 -ஆம் ஆண்டின் சட்டத்தில் பிரிவு 3 (எஃப்) இல் குறிப்பிட்டுள்ள ‘பொது நோக்கத்திற்காக’ (Public Purpose) என்கிற விதி சிங்கூரில் நிலம் கையப்படுத்தப்பட்டதற்குப் பொருந்தாது. ஏனெனில், இந்த நிலம் ஒரு தனியார்முதலாளி தொழில் தொடங்குவதற்காகத் தரப்பட்டுள்ளதால் இதில் ‘பொதுநோக்கம்’ என்பது அறவே இல்லை”என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி அருண் மிஸ்ரா, “ஒரு தனியார் முதலாளித்துவ நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தி அளிப்பது என்பதில் ‘பொதுநோக்கம்’அடங்கி இருக்கிறது. ஒரு முதலாளி தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொருளுற்பத்தியும் பெருகி நாட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் பொதுப் பயன்பாடு பற்றி முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், 1894-ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி 7-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிலம் கையகப்படுத்தப்பட்டபோது சரியாகப் பின்பற்றப்படாததால் சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று இத்தீர்ப்பை அளித்துள்ளனர். மற்றபடி, சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய ”எது பொதுப்பயன்பாடு?” என்ற மையமான கேள்விக்கு நீதித்துறை இன்றுவரை விடையளிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது.
1894-ஆம் ஆண்டின் காலனிய காலத்து நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” எந்த நிலத்தையும் அரசாங்கம் கட்டாயமாக அபகரித்துக் கொள்ளலாம். அன்று ரயில்வே துறைக்காக நிலங்களைக் கையகப்படுத்த வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்தச் சட்டத்தைக் கொண்டுதான், போலி சுதந்திரத்துக்குப் பின்னர் ரயில்வே, அணைகள், சுரங்கங்கள், மின் நிலையங்கள் முதலான அரசுத்துறை நிறுவனங்களை அமைக்க இந்திய ஆட்சியாளர்கள் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினர். பொதுப் பயன்பாட்டுக்கானது, நாட்டின் வளர்ச்சிக்கானது என்ற நோக்கில்தான் தங்கள் நிலங்களை விவசாயிகளும் கொடுத்தனர். தோற்றத்திலாவது பொதுப் பயன்பாடாக இருந்த நிலை தனியார்மய – தாராளமயத்துக்குப் பிறகு இப்போது அடியோடு மாறிவிட்டது. தொழில் வளர்ச்சியைச் சாதித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, தனியார் முதலாளிகளுக்கு அளிப்பதில் தவறில்லை – இதுதான் ”பொதுப்பயன்பாடு” என்று அரசு இப்போது விளக்கமளிக்கிறது. பொதுப்பயன்பாடு என்ற பெயரில் நடக்கும் இந்தக் கார்ப்பரேட் கொள்ளையும் அடக்குமுறையும்தான் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் எதிர்த்துப் போராட வேண்டிய மையமான விசயமாக உள்ளது.
சிங்கூர், நந்திகிராமம், கலிங்காநகர் – என நாடெங்கும் தொடர்ந்த விவசாயிகளின் போராட்டத்தால் பொதுக் கருத்து வலுப்பட்டு, முதலாளித்துவ ஊடகங்களே ”பொதுப்பயன்பாடு” என்ற பெயரில் அரசாங்கமானது பெருமுதலாளிகளுக்கு விளைநிலங்களைப் பிடுங்கிக் கொடுக்கும் அடியாள் வேலை செய்வதை அம்பலப்படுத்தின. நாடெங்கும் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் வீரியமான போராட்டத்தின் காரணமாகவே அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு 2013-ஆம் ஆண்டு “நிலம் கையப்படுத்தல், மறுகுடியமர்த்தம், மறுவாழ்வு, சட்டத்தை (LARRA-2013) நிறைவேற்றியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணியை வீழ்த்தி பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூரிலிருந்து வெளியேறிய டாடா நிறுவனத்தை அழைத்து நானோ கார் தொழிற்சாலை தொடங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அன்றைய குஜராத் முதலமைச்சரான மோடி, இப்போது பிரதமராகியுள்ளார். இப்பேர்பட்ட மோடி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நூறு பொலிவுறு நகரங்கள் (Smart Cities) அமைக்கப் போவதாக அறிவித்தார். மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த 2013-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 3 (இசட்-ஏ) விதிகள், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கத் தடையாக இருப்பதால், அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து முந்தைய காலனிய காலச் சட்டத்தையே நிலைநாட்டும் வகையில் புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றத் துடித்தார். அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை, இதற்கெதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் மோடி கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டத்தின் சாரம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம் எனும் கொடிய பாசிச சட்டமானது விவசாயிகளின் தலைக்குமேல் கத்தியாக இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டாடா நிறுவனமோ, சிங்கூரில் 900 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குப் பெற்று ‘இடதுசாரி’ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதையும், அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறும் வழக்கு தொடுத்திருக்கிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, குத்தகை ஒப்பந்தம் சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இன்னுமொரு அமர்வு தீர்ப்பளித்தால் என்னவாகும்? நீண்ட போராட்டத்தின் மூலம் சிங்கூர் விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தாலும், வேறொரு தீர்ப்பின் மூலம் அந்த நிலங்கள் பறிக்கப்படலாம். இந்த அபாயத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதன் மூலம் முறியடிக்க முடியாது. மோடி அரசின் கொள்கையை நாடாளுமன்றத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ தடுத்து நிறுத்திடவும் முடியாது.
இந்நிலையில், ”பொதுப் பயன்பாடு” என்ற பெயரில் விளைநிலங்களையும் கனிம வளங்களையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்று அவசர அவசியக் கடமையாக முன்நிற்கிறது.
– தனபால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக