வெள்ளி, 25 நவம்பர், 2016

பாலியல் தொல்லை – பெண் காவலர் தற்கொலை முயற்சி !

உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர், நரியங்காடு குடியிருப்பில் இந்துமதி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாலமுருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்த நிலையில் இந்துமதி தனியாக வசித்து வந்தார். இவர், நேற்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால், மயங்கிய நிலையில் அவருடைய வீட்டில் கிடந்த இந்துமதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு இந்துமதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்துமதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்துமதி கூறியிருப்பதாவது: “நான் அழகாக இருப்பதுதான் பிரச்னை. என்னை வர்ணித்து உயர் அதிகாரிகள் தொல்லை தருகிறார்கள். இதனால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் எனக்கு, இது பெரிய கஷ்டத்தை தருகிறது. பணிமாற்றம் செய்யுமாறு கேட்டும் என்னை வேறு இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தாக உள்ளது. எனவே தான் தற்கொலைக்கு முயன்றேன்” என்று கூறியுள்ளார்.
இதை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இந்துமதிக்கு தொல்லை கொடுத்த உயர் அதிகாரிகள் மீது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளை துன்புறுத்துவதானால், அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வது என்பது வழக்கமாகி வருகிறது. இதற்கு முன் திருப்பூரில் ஆயுதப்படை பெண் காவலர் சுஷ்மிதா (24) என்பவர் உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக