புதன், 23 நவம்பர், 2016

சசிகலா - பிரதாப் ரெட்டி முறுகல்? ஒண்ணு கிடக்க ஒண்ணாச்சுனா அம்மாலோவை சுத்தி உள்ள ர ராக்கள் துவம்சம் பண்ணிடுவாய்ங்களே?

அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி த மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள் ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன.
அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை மையமிட்டுச் சுற்றி வந்தன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் வருகைக்குப் பின்னால், அவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருந்தன. அதன்பிறகு, காவிரிப் பிரச்னை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும், செய்தி ஊடகங்களில், அப்போலோவின் ஒளிவட்டம் கொஞ்சம் மங்கத் தொடங்கியது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, நவம்பர் 8-ம் தேதி, “500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்த பிறகு, அப்போலோ நினைவுகள் மக்களின் மனங்களைவிட்டு ஏறத்தாழ அகன்றே போனது. அப்போலோவை மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல், அங்கிருந்து கொஞ்சம் அச்சு விலகி இருக்கிறது. ஆனால், அது அப்போலோ வட்டத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடவில்லை. தமிழக அரசு அதிகாரிகளுக்கும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும், அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும் இன்றும், அப்போலோதான் குவிமையமாக இருக்கிறது.
செய்திகள் அனைத்தும் யூகங்களே!
“முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்” என்று அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, இப்போது எல்லாம் அடிக்கடி சொல்கிறார். அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஏகமனதாக அப்படித்தான் நம்புகின்றனர். ஆனால், நலமுடன் என்றால்... எந்தளவுக்கு? என்ற கேள்விக்கு அவர்களின் யாரிடமும் பதில் இல்லை. ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டுவிட்டதா, ஜெயலலிதா பேசுகிறாரா, ஜெயலலிதா எழுதுகிறாரா, சசிகலாவைத் தவிர மற்றவர்கள் இப்போதாவது ஜெயலலிதாவை பார்க்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை; அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. இந்தநொடிவரை அப்போலோவைச் சுற்றி இரும்புத்திரை போடப்பட்டுள்ளது. அதனால், இரண்டு மாதங்கள் கடந்தபிறகும்கூட, ஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்போலோவில் இருந்து வெளிவரும் செய்திகள் எல்லாம் யூகங்களாகவே இருக்கின்றன.
ஜெயலலிதா ‘வார்டு’ மாற்றப்பட்டாரா?
முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்ற செய்தி, தற்போது தமிழகத்தைச் சுற்றி வருகிறது. இந்தத் தகவலை, அப்போலோ குழுமம் அறிவிக்கவில்லை; எந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலும் பிரதாப் ரெட்டி அப்படிச் சொல்லவில்லை; அப்போலோ மருத்துவமனை லெட்டர்பேடில், தமிழக அரசாங்கம் வெளியிட்டுக் கொண்டிருந்த, செய்திக்குறிப்புகளில் அப்படிக் குறிக்கப்படவில்லை; அரசாங்கம் வெளிப்படையாகத் தெரிவிக்கவும் இல்லை. அ.தி.மு.க தரப்பில், சி.ஆர்.சரஸ்வதியும், பொன்னையனும் சொல்கின்றனர். அதைப் பேட்டிகளாகக் கொடுக்கின்றனர். அ.தி.மு.கவினர் அதைக் கொண்டாடுகின்றனர். பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.
சி.சி.யூ-வில் இருந்து ஐ.சி.யூ
முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை வைக்கப்பட்டு இருந்தது ‘கிரிட்டிகல் கேர் யூனிட்’ என்ற அதிதீவிர சிகிச்சைப் பிரிவு. தற்போது அவர் மாற்றப்பட்டு உள்ளது ‘ஐ.சி.யூ’ என்கிற தீவிர சிகிச்சைப் பிரிவு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 90 சதவிகித மருத்துவ உபகரணங்கள் இங்கும் இருக்கும். இங்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியநிலையில்தான் உள்ளார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் நுரையீரல் தொற்று மட்டும் தற்போது குணமடைந்து உள்ளது. ஆனால், கிட்னி, இருதயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் முன்பிருந்தது போலவே, இன்னும் இருக்கிறது. அதனால்தான், ஜெயலலிதா மருத்துவமனையில் இன்னும் இருக்கிறார் என்கின்றன மருத்துவ வட்டாரங்கள்.
முன்னுக்குப்பின் முரணான பிரதாப் ரெட்டியின் பேட்டிகள்!
அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, நவம்பர் 3-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிரதாப் ரெட்டி பத்திரிகையாளர்களை முதன்முறையாகச் சந்தித்தது அன்றுதான். அப்போது, “ஜெயலலிதா உடல்நிலை தேறிவிட்டது. ஆனால், அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். அதன்பிறகு, நவம்பர் 12-ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பிரதாப் ரெட்டி. அப்போதும் அவர் முன்பு சொன்னதையே சொன்னார். ஆனால், மூன்றாவது முறையாக கடந்த 18-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதாப் ரெட்டி, முன்பு சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கினார். “ஜெயலலிதா உடல்நிலை தேறிவிட்டார். ஆனால், அவர் முழுமையாக குணமடைய இன்னும் 6 முதல் 7 வாரங்கள் ஆகும். அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதாப் ரெட்டியின் 3 பத்திரிகையாளர் சந்திப்பும் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. ஆனால், தெளிவாக திட்டமிடப்பட்டவை. அவற்றில் முதல் இரண்டுமுறை பிரதாப் ரெட்டி சொன்னது வேறு. மூன்றாவது முறை பிரதாப் ரெட்டி சொன்னது வேறு. காரணம் என்ன?
அப்போலோ - அ.தி.மு.க பனிப்போர்!
அ.தி.மு.க-அப்போலோ மருத்துவமனைக்கு இடையில், ஜெயலலிதா உடல்நிலையை வைத்து கடும் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை நிர்வாகத்துக்கு அ.தி.மு.க-வில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது. அதன்விளைவாகத்தான் பிரதாப் ரெட்டி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார். அப்போலோ மருத்துவமனை முன்பு குவிந்து இருக்கும் அ.தி.மு.கவினர், கடுமையான போலீஸ் கெடுபிடிகளால், அப்போலோவுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைந்துவிட்டது. வெளிநாட்டு நோயாளிகளின் அறுவைசிகிச்சைக்காக குறிக்கப்பட்ட தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி அப்போலோவின் போட்டி மருத்துவமனைகள், வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக அப்போலோவுக்கு வருபவர்களை அள்ளிக் கொண்டு போய்விடுகின்றன. அதனால், பிரதாப் ரெட்டியின் ‘பிசினஸ்’க்கு கடந்த 2 மாதங்களாக கடும் வீழ்ச்சி. இதுமட்டுமல்ல காரணம். இதையும்தாண்டி, ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் எவ்வளவு சிகிச்சை அளிக்க முடியுமோ அவ்வளவும் அளித்தாகிவிட்டது. இனிமேல், அவரை அங்கு தங்கவைத்து சிகிச்சை அளிக்க புதிதாக ஒன்றும் இல்லை. இந்நிலையில், அவரை மருத்துவமனையில் இருந்து மாற்றிவிடுவதுதான் மருத்துவமனையின் பெயருக்கு நல்லது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகளுக்கும் நல்லது என்று பிரதாப் ரெட்டி நினைக்கிறார். ஆனால், அதற்கு சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போடுகிறது. அதைத் தகர்க்கும் எண்ணத்தில்தான், எதிர்பாராதவிதமாக பத்திரிகையாளர்களைச் சந்திப்பதுபோல் அடிக்கடி சந்திக்கிறார் பிரதாப்ரெட்டி. அந்தச் சந்திப்புகளில் “ஜெயலலிதா குணமடைந்துவிட்டார். ஆனால், அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று திரும்பத் திரும்ப, அழுத்தி அழுத்திச் சொல்கிறார்.
சசிகலா தயக்கம் - 1
அ.தி.மு.க-வையும், அரசாங்கத்தையும் தற்போதைக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சசிகலா, “ஜெயலலிதா வீடு திரும்புவதை இப்போதைக்கு விரும்பவில்லை” என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அதற்கு சசிகலாவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. “என்னதான் ஜெயலலிதா உடல்நிலை தேறியதாகச் சொன்னாலும் முன்புபோல், அவரால் ‘ஆக்டிவ்’ ஆக இருக்க வாய்ப்பே இல்லை. அதோடு ஜெயலலிதாவுக்கு இப்போதும் செயற்கை சுவாசம் அவ்வப்போது கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுபோய், அங்குவைத்து ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், மொத்தப் பழியும் தன்மீது விழுந்துவிடும்” என்று சசிகலா தரப்பு அஞ்சுகிறது. அப்படி ஒரு பழியை சசிகலா மீது சுமத்த, அ.தி.மு.க-வில் ஆட்கள் இல்லாமல் இல்லை. அவர்களின் எண்ணம் ஈடேறிவிட்டால், தொண்டர்கள் மத்தியில் தனக்கு எதிராக எழப்போகும் கொந்தளிப்பை சசிகலாவால் நிச்சயம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அதனால்தான், பிரதாப் ரெட்டி, “முதலமைச்சர் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னாலும், சசிகலா தரப்பு ஜெயலலிதாவை வீட்டுக்கு கொண்டுசெல்லாமல் காலம் கடத்துகிறது. ஆனால், அதே சமயம், ‘ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்’ என்ற விஷயத்தில் பிரதாப் ரெட்டியோடு முழுமையாக ஒத்துப்போகிறது சசிகலா தரப்பு. அதற்கும் காரணங்கள் இருக்கிறது.
சசிகலா தயக்கம் - 2
மூன்று தொகுதி இடைத் தேர்தல் வருவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாக, “நான் நலமுடன் இருக்கிறேன்” என்று ஜெயலலிதாவே சொன்னதாக ஒரு அறிக்கை வெளியானது. அதில், ‘இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்’ என்பது மட்டும்தான் ஜெயலலிதாவின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆக, அந்த அறிக்கை இடைத் தேர்தலுக்காக சசிகலா தரப்பால் அடிக்கப்பட்ட ‘ஸ்டண்ட்’ என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து வேறு எந்த அறிக்கையும் வெளியாகவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது தேர்தலே முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும், வீடு திரும்புவது பற்றி எந்த அறிவிப்பும் ஜெயலலிதா தரப்பில் இருந்து வரவில்லை. இதற்குக் காரணம், அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு எதிர்தரப்பு ஒன்று ரகசிய வேலைகளை கச்சிதமாக அரங்கேற்றி வைத்துள்ளது. இந்த விஷயத்தை, போலீஸ் மற்றும் சில அதிகாரிகள், அமைச்சர்கள் மூலம் சசிகலாவும் அறிந்து வைத்துள்ளார். அ.தி.மு.க-வில் தனக்கு எதிரான வேலையில் ஈடுபட்டுள்ள கும்பல், எந்த நேரம் வேண்டுமானாலும் தனக்கு எதிராக வலுவாகத் திரளலாம் என்று சசிகலா தரப்பு கொஞ்சம் அஞ்சுகிறது. அதைச் சமாளிக்கவே, “முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்” என்று அ.தி.மு.க-வினர் வாயாலேயே சொல்லவைக்கிறது சசிகலா தரப்பு. இதன்மூலம், தற்காலிகமாக, தங்களுக்கு எதிராக அ.தி.மு.க-வில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது சசிகலா தரப்பு.
சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி!
ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்புவதுதான் அப்போலோவுக்கு நல்லது என்று முட்டிமோதிக் கொண்டிருக்கிறார் பிரதாப் ரெட்டி. ஜெயலலிதா மருத்துவமனையிலேயே இருப்பதுதான் தங்களுக்கு நல்லது என்று காலம்கடத்திக் கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு. இந்தச் சூழலை உடைக்கத்தான், “ஜெயலலிதா விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்” என்று பத்திரிகையாளர்களிடம் அடிக்கடி ரெட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ரெட்டியை தட்டி வைக்க நினைத்த சசிகலா, அவருக்கு கொடுக்க வேண்டியவிதத்தில் அழுத்தம் கொடுத்தார். வேறுவழியில்லாமல் தற்காலிகமாக, பின்வாங்கிய ரெட்டி, “இன்னும் 7 வாரங்கள் முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பார்” என்று அறிவித்து உள்ளார். இப்போதைக்கு அதன்மூலம் சசிகலா வெற்றிபெற்றுள்ளார். ஆனால், ‘பிசினஸ்’ நெருக்கடியை கடுமையாக உணர்ந்துள்ள பிரதாப் ரெட்டி, “எப்போது வேண்டுமானாலும் கலவரம் செய்ய காய் நகர்த்தலாம்” என்கின்றனர் அப்போலோ நிலவரம் அறிந்தவர்கள்.
- ஜோ.ஸ்டாலின் விகடன்.காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக