புதன், 9 நவம்பர், 2016

நோட்டு செல்லாது:தலைவர்கள் கண்டனம்!


மின்னம்பலம்.காம்  நேற்று நள்ளிரவோடு 500.1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து விட்டது மத்திய அரசு. இது மக்களின் இயல்பு வாழ்வை பாதித்துள்ள நிலையில்,இந்தியா முழுக்க உள்ள அரசியல் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தின் அரசியல் களத்திலும் இது கடுமையான பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் நிலையில், தலைவர்களின் கருத்துக்களைத் தொகுத்து அளிக்கிறோம்!
கருணாநிதி
‘இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி, நாள் ஊதியம் பெறும் ஏழை,எளிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளன என்பதை மறுக்க இயலாது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்குக்கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது? நான் கூறிய அந்த ஏழை,எளிய உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும் நடுத்தர குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது. வங்கிகளிலே கோடிக்கணக்கில், இலட்சக்கணக்கில் பணம் வைத்திருப்போர் - சேர்த்துவைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பதுபோக, தங்களிடம் எஞ்சியுள்ள ஒருசில கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி வருகிறது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால் வரவேற்கலாம். எனினும், பெரிய பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதைவிட சாதாரண, நடுத்தர ஏழை,எளிய மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கறுப்புப் பணத்தை ஒழித்திடும் நோக்கில், 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனதா ஆட்சிக் காலத்தின்போது 1000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக, எந்தளவுக்கு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து, இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி
“கறுப்புப் பணத்தை பதுக்கி, வெளிநாடுகளில் குவித்துள்ள உண்மையான குற்றவாளிகள் பாதுகாப்பாக, இறுக்கமாக அமர்ந்திருக்க ஏழை,எளிய விவசாயிகள், மக்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டு மனைவிகள் பெரும் குழப்பத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாமானிய மக்கள்மீது தனக்கு எவ்வளவு ‘அக்கறை’ உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை மோடி காட்டியுள்ளார். பிரதமருக்கு ஒரு கேள்வி: 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி கறுப்புப் பண பதுக்கலை கடினமாக்கும்?’’ என்று, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிதம்பரம்
”தற்போது நாட்டின் உற்பத்தி மதிப்பில் 12% அளவுக்கு பணப் புழக்கம் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், அரசின் 4% அளவுக்கு பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறிதான். 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அரசின் நடவடிக்கையால் ரூ.15 கோடியில் எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கும் என்பதே கேள்வி. ஏனெனில், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு மட்டுமே அரசுக்கு 15,000 முதல் 20,000 கோடி வரை செலவாகும். 500, 1000 ரூபா நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் 20,000 கோடி ரூபாய்க்குமேல் லாபம் கிடைக்குமா? 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விடுவதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இதற்குமுன்னர், இதுபோன்று எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 40 ஆண்டுகளுக்குமுன்பு 500 ரூபாய் நோட்டு உயர்மதிப்பு பணமாக இருந்தது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என 1978இல் அரசு அறிவித்தபோது அதற்கு எந்தப் பயனும் கிட்டவில்லை. அதோடு மட்டுமல்லாமல், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதியதாக மாற்றித்தரும் பணிகள் விரைவாக நடைபெறுமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.
திருமாவளவன்
‘நள்ளிரவு 12 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்-கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்கிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஏழை,எளிய மக்கள் தமது கையிலிருக்கும் ஒன்றிரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போய்விட்டன என்பதையறிந்து, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்கும் பயன்படும் என மோடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று என்பதைத்தவிர வேறல்ல. கணக்கில் வராத பணமே கறுப்புப் பணம். அதை வைத்திருப்பவர்கள் காகிதப் பணமாக அதை மூட்டைகட்டி வைத்திருப்பதில்லை.
“நான் பிரதமரானால் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவந்து இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வேன்” என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து ஜம்பமடித்த மோடி, அதைச் செய்யமுடியாத தனது தோல்வியை மறைப்பதற்காக ஆடுகிற கேலிக்கூத்துதான் இது.
மோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஏழை,எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள்’’, “வங்கிகளுக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள்” என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகின்றனர். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்ட அதே வார்த்தைகளை இப்போது நாம் மீண்டும் கேட்கிறோம். இது “ பொருளாதார அவசரநிலை” இதைத்தொடர்ந்து எந்த நேரத்திலும் “அரசியல் அவசரநிலை” அறிவிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மோடியின் இந்த ‘துக்ளக் தர்பாரை’ கண்டுகொள்ளாமல்விட்டால் அடுத்து மிகப்பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துசேரும். இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலையை’ எதிர்த்து முறியடிக்க ஒன்றுதிரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
வெள்ளையன்
‘கள்ளநோட்டு பரவலைத் தடுக்கமுடியாத தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக ஒரு அதிரடி நடவடிக்கை எடுப்பது போன்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றியிருக்கிறது.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கைப்பற்ற முடியாத மத்திய அரசு, வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளவர்கள், சொத்து மதிப்பை குறைத்துக்காட்டி இந்தியாவுக்குள்ளேயே கறுப்புப் பணத்தை முதலீடு செய்திருப்பவர்களையும் ஊழல் பணத்தை கண்டுபிடிக்காமல், முடங்கிக் கிடக்கும் அதிகார மையத்தை இயக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை.
அதேபோல், அந்நிய முதலீடு என்றபெயரில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்படும் உள்நாட்டு கறுப்புப் பண முதலைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், மொத்தத்தில் ஊழல் பணத்தையும் கறுப்புப் பணத்தையும் கண்டுபிடிக்கமுடியாத மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கை என்று எமது பேரவை குற்றம்சாட்டுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவு, சாமானிய மக்களையும் உள்நாட்டு சில்லறை வணிகத்தையும் கடுமையாகப் பாதிக்கும். சாமானிய மக்களுக்கும் சில்லறை வணிகர்களுக்கும் எதிரான இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி:
இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.16,000 கோடியைத் தவிர வேறு பணம் எதுவும் வரவில்லை. மேலும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை 30ஆம் தேதிக்குள் வெளியே கொண்டுவந்தால் அரசாங்கத்துக்கு 30% அபராதம் செலுத்திவிட்டு வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக, சுமார் 40 கோடி ருபாய் வரை இந்தியாவில் கணக்கு காட்டப்பட்டது. இப்போது, 500 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பாட்டாளி மக்களிடமும் விவசாயிகளிடமும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த ருபாய் நோட்டுப் புழக்கம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் வரி கட்டாதவர்களிடம் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, இப்படி ஒட்டுமொத்த மக்களையும் தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு நூறு பண முதலைகள் செய்கிற தவறுக்கு இந்திய நாட்டின் மொத்த மக்களும் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக