வியாழன், 17 நவம்பர், 2016

வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

அதானியின் துறைமுக கட்டுமானம், ஜிவிகே நிறுவனத்தின் ஆற்றல் துறை முதலீடு,கட்டுமானத் துறை முதலீடு, ரிலைன்சு நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, சாலைகள், ஆற்றல், நிதி சேவை போன்ற துறைகளில் முதலீடு செய்தது. உள்நாட்டு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுடனான போட்டிக்கும்,உள்கட்டுமான துறைககளில் முதலீடு செய்யவும்இந்திய வங்கிகள், இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு கடனை வாரிவழங்கின. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்,இந்தக் கடன் வீதம் நானூறு மடங்கிற்கு அதிகரித்துள்ளது
அருண் நெடுஞ்செழியன்< 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது.
நெருக்கடியின் முதல் சுற்றானது, வளர்ந்த தொழில்மய நாடுகளில் துவங்கி அதன் இரண்டாம் சுற்று எம்ர்ஜிங் எகனாமி என சொல்லப்படுகிற ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை முகாமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமானது 3.5 விழுக்காடு அளவிற்கு மந்தமாக உள்ள சூழலில், விலக்காக சீனாவும் இந்தியாவும் 7 விழுகாட்டு அளவிற்கு வளர்ச்சி பெற்றுவருகிற நிலையில் நமது வாதம் முரண்பாடாகத் தெரிவது இயல்பே! இதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

2008 ஆம் ஆண்டுகால பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் அமெரிக்கப் பொருளாதாரம் இவ்வகையான அதிக வளர்ச்சி வீதத்திலேயே வளர்ந்து, திடுமென பாதாளத்தில் வீழ்ந்தன என்ற விவரத்தை கருத்தில் கொண்டால், பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய கட்டத்தில்(Pre-Crisis) வளர்ச்சிவீதம், செங்குத்தான ஏறு முகத்திலும், நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில் (Post Crisis) செங்குத்தான இறங்குமுகத்திலும் இருப்பதும் தெளிவாகும்.
2007 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தின் GDP +3.6 விழுக்காடாக ஆக இருந்தது, ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே 2008 ஆம் ஆண்டில் திடீரென -1.8 விழுக்காட்டிற்கு சரிந்தன.
இன்னும் சரியாக சொல்வதென்றால் உடனடியான, வேகமான வளர்ச்சி வீதத்தைவிட நிதானமான, மிதமான, பொறுமையான வளர்ச்சி வீதத்தில், மட்டுமே ஆபத்தும் சவாலும் குறைவு. அதிக வளர்ச்சி வீதம் என்பது ஏதோ ஒரு புறக்காரணியால் வேகமாக முடிக்கிவிடப் பட்டிருக்கலாம், ஆனால் அது நீண்டகால வளர்ச்சிக்கு உதவாது. உதாரணமாக அமெரிக்காவில் வீட்டு மனை சந்தை மதிப்பு குறைய, அதன்மீதான முதலீடுகள் அதிகரித்தன. வங்கிகள் கடனை வாரி வழங்கின. இறுதியில் லே மென் வங்கி திவாலாக, அரசு வங்கியை மீட்கிற நிலைக்குத் தள்ளியது.
2008 ஆம் ஆண்டுகால,பொருளாதார மந்த கட்டத்திற்கு பிந்தைய சூழலில், இந்தியாவில் வேறு விதமான பொருளாதாரப் பண்பு மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஏகாதிபத்திய மூலதன ஊடுருவல், கடந்த பத்து ஆண்டுகளில் வேகமான அளவில் இந்தியாவில் அதிகரித்தன. மறுமுனையில், வளர்ந்து முதலாளிய நாடுகளின் சந்தையிலோ மற்ற ஆசிய சந்தையிலோ இந்திய மூலதனப் பரவல் அதிகரிக்கவில்லை. சுருங்கச் சொல்லின், இந்தியாவின் ஏற்றுமதி மூலதனத்தை விட ஏகாதிபத்திய மூலதனத்தின் இறக்குமதி மூலதனம் அதிகரித்தன.
உள்நாட்டு பெரு முதலாளிகள் உலகச் சந்தையில் போட்டி போடுகிறவகையில் உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்துவது, தொழில்துறையில் முதலீடு செய்வது குறித்து சிந்திக்காமல் உடனடி லாபம் வழங்குகிற உள்கட்டுமானத் துறையிலும் தொழிற்துறை அல்லாத காப்பீடு, நிதி சேவைத் துறையிலும் அதிக முதலீடு செய்தனர். இந்த முதலீடுகளுக்கு அதிகளவில் இந்திய அரசு கடன் வழங்கியது.
அதானியின் துறைமுக கட்டுமானம், ஜிவிகே நிறுவனத்தின் ஆற்றல் துறை முதலீடு,கட்டுமானத் துறை முதலீடு, ரிலைன்சு நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, சாலைகள், ஆற்றல், நிதி சேவை போன்ற துறைகளில் முதலீடு செய்தது. உள்நாட்டு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுடனான போட்டிக்கும்,உள்கட்டுமான துறைககளில் முதலீடு செய்யவும்இந்திய வங்கிகள், இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு கடனை வாரிவழங்கின.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்,இந்தக் கடன் வீதம் நானூறு மடங்கிற்கு அதிகரித்துள்ளது. இந்த வாராக் கடனின் ஒட்டுமொத்த அளவு தற்போது 8 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடன் வழங்கிய அளவிற்கு,வேலைவாய்ப்புகளோ, ஏற்றுமதியோ அதிகரிக்கக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் இந்த வாராக் கடன் அளவு, இந்திய வங்கிகளின் திவால் நிலைக்கு இட்டுச்சென்றது.
இதன் காரணமாகவே,2008 ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆண்டுகளில் மூலதன ஏற்றுமதியின் பரவலாக்கம் அதாவது நிதி மூலதனத்தை திறமையாக கையாளவேண்டும் என்ற அக்கறை பன்னாட்டு நிதியகத்திற்கு அதிகரித்தது. வளர்ந்து வருகிற நாடுகளின் வங்கிகளில் திரட்டப்பட்டுள்ள நிதி மூலதன இருப்பை கண்காணித்து ஒழுங்குபடுத்த ஆர்வம் செலுத்தியது.அதன் வெளிபாடுதான் Basel II மற்றும் Basel III போன்ற IMF வழிகாட்டுதல்கள்.
ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் மந்த போக்கினில், எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற முன்னெச்சரிக்கை யோசனையின் அடிப்படையில், இந்திய வங்கிகளின் நிதி இருப்பை பலப்படுத்தி, சிக்கலில் இருந்து தற்காத்துக் கொள்கிற தற்காப்பு உத்தியை முன்னால் ரிசர்வ் வங்கி இயக்குனர் ராஜன் எடுக்கத்தொடங்கினார். வாராக் கடனை வசூலிப்பதற்கு அவர் காட்டிய அதீத ஆர்வத்தை இந்தப் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
தொகுத்துக் கூறின், தாராளமயக் கட்டத்தில், வளர்ந்த தொழில்மய நாடுகளின் நாடுகளின் உபரிநிதி மூலதனம், ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பாய்ந்து உழைப்பையும் இயற்கை வளத்தையும் சுரண்டிக் கொழுத்தது. தனது நிதி மூலதனத்தை பெருக்கிக்கொண்டது. மூன்றாம் உலக நாடுகளின் சந்தையும் உபரி மூலதனப் பெருக்கத்திற்கு ஆதரவாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், உள்நாட்டு சந்தையை ஏகாதிபத்திய மூலதன ஊடுருவலுக்கு அனுமதித்தாலும், உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு வழங்கிய கடன்கள், பெரு முதலாளிய வர்க்கங்களின் தவறான முதலீடுகள், இந்த அரசுகளின் வங்கிகளின் நிதிமூலதன இருப்பிற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
ரகுராம் ராஜனின் ஆர்வத்திற்கு இந்திய ஆளும்வர்க்கம் தற்காலிக தடை போட்டுள்ளது, அது ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் ஊடாக தலைகீழாக்கப்பட்ட ரபீன் ஹூட் வேலையைப் பார்த்து வங்கிகளின் நிதிமூலதன இருப்பை பெருக்கியுள்ளது. இந்தியப் பெருமுதலாளிகளை தற்காலிகமாக மோசடி மோடி காத்துள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் வேலையில்லா பட்டாளம் நகரில் குவிய உள்ளது, ஏகாதிபத்திய மூலதன ஊடருவல் இந்திய ரயில்வே துறை,மின்சாரத் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடக் காத்து நிற்கின்றன. இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனப் பண்பால் எதிர்கால சவாலை துணிந்து எதிர்கொள்ள வாய்ப்பில்லை. இந்திய அரசு, பொறிக்குள் சிக்கிய எலியாகியுள்ளது..!
அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக