சனி, 26 நவம்பர், 2016

பிடல் காஸ்ட்ரோ : வரலாறு என்னை விடுதலை செய்யும்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார். 

ஃபிடல் காஸ்ட்ரோ பிறப்பு:
கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். அதனால் சுகபோக வாழ்வில் ஃபிடலுக்கு குறைவேதும் இல்லை. இவர் இளைஞனாக இருந்தபோது, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார்.
அமெரிக்காவை எதிர்த்த ஃபிடல்
என்னதான்  ஃபிடல் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அமெரிக்கா கியூபா மக்களை அடிமையாக வைத்திருப்பதைக் கண்டு வெகுண்டெழுந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். ஹவானா பல்கலைகழகத்தில், ஃபிடல் படித்துக் கொண்டிருந்த சமயம் இரண்டு முக்கியக் கட்சிகள் மாணவர்களிடையே இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிசம், மற்றொன்று ஆர்த்தோடாக்ஸ் இயக்கம். கியூபா மக்களின் விடுதலைக்கு கம்யூனிசம்தான் மிகச் சரியானது என உணர்ந்த ஃபிடல், கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1952 - ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா என்பவர் கியூபாவின் ஆட்சியைப் பிடித்தார். அதனால், பாடிஸ்டா ஒரு அமெரிக்க கைக்கூலி என்பதையும் அவரின் உண்மையான முகத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்வதற்காகவும் 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார் ஃபிடல். ஃபிடலின் எண்ணம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பாடிஸ்டாவையும் கியூபாவிலிருந்து அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானப் பகைமை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
முதல் தாக்குதல் :
1953-ம் ஆண்டு மோன்காடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக இரவில், செல்லும்போது ஃபிடலின் வாகனம் பழுதாகிறது. உடன் சென்ற மற்றப் போராளிகளோ இருட்டில் வழி தவறியதால், திட்ட மிட்ட அந்தத் தாக்குதல் தோல்வியை சந்திக்கிறது. காஸ்ட்ரோ ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். பின் சிறையில் அடைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார். அப்போது நீதிமன்றத்தில், 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்று ஃபிடல் நிகழ்த்திய உரைதான் பின்நாளில் வெளிவந்த THE HISTORY WILL ABSOLVE ME என்ற புத்தகமாகும்.
'சே'வுடன் முதல் சந்திப்பும் கியூபா விடுதலையும் :
இப்படியே போராடிக்கொண்டிருந்தால் ஒருபயனும் ஏற்படாது. இனி கெரில்லா யுத்த முறைகளைக் கையாள வேண்டும் என எண்ணி, யுத்த முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார். அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஃபிடலும், சே-வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்குகிறார்கள். 1956 -ல் கியூபா புரட்சியாளர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். ஆனால் சே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ உட்பட 12 வீரர்கள் தப்பித்துச் சென்றனர். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களைத் திரட்டிக் கெரில்லா யுத்தப் படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள். 1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் ஃபிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் 'சே' என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சே'வையும்  ஃபிடலையும் இப்படிக் கூறுவார்கள்... 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்று.
அமெரிக்காவின் சதிகளை முறியடித்த ஃபிடல் :
இவர் பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல்கள் நடைபெறத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஃபிடல் வெற்றிகரமாக முறியடித்தார். இதில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா ஃபிடலை எப்படியாவது தன் பக்கம் இழுத்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது. ஆனால், அனைத்துத் திட்டங்களுமே தோல்வியாகத்தான் இருந்தது. 'கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது' என அறிவித்தார் ஃபிடல். இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்கத் தயாரானது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய சம்மதித்தது அந்த நாடு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்கா, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடலை கொல்லத் திட்டம் தீட்டியது. ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை ஃபிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.
ரசாயனக் குண்டுகள் போடுவது, சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது, துப்பாக்கியால் சுடுவது, மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது, விஷ மாத்திரைகளைக் கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி 650-க்கும் மேற்பட்ட முறை ஃபிடலைக் கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் தப்பித்துக் கொண்டே இருந்தார். கொலைத் திட்டங்களில் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருவதால் ஃபிடலைப் பற்றி மக்களிடத்தில் தவறான கருத்துகளையும் பரப்பத் தொடங்கியது அமெரிக்கா. இதனால் அடிக்கடி மக்கள் முன் தோன்றி உரையாற்ற வேண்டிய அவசியம் ஃபிடலுக்கு இருந்தது. எப்படியாவது ஃபிடலைக் கொன்று, கியூபாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரக் கவனத்தைக் காட்டி வந்தது அமெரிக்கா. ஆனால், அவர்கள் செய்த சதிகள் அனைத்தையும் தூள் தூளாக்கினார் ஃபிடல். பிடலின் இந்த வாக்கியம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மிகப் பிரசித்தி பெற்றது 'படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒலிம்பிக் போட்டி இருந்தால், கண்டிப்பாக நான்தான் தங்கப் பதக்கம் வெல்வேன்.
இப்படி ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் சதி செயல்களில் இருந்து தப்பித்து கியூபா மக்களின் நல் வாழ்வுக்காகவே வாழ்ந்து வந்தார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் அதன் பின் 1976-லிருந்து அதிபராகவும் திகழ்ந்து வந்த ஃபிடல் வயது மூப்பின் காரணமாக அதிபர் பதவியை 2008ம் ஆண்டு  தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகவே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வந்தார். இந்த நிலையில்  கியூப நேரப்படி 25-ம் தேதி இரவு பத்தரை மணி அளவில் இயற்கை மரணம் அடைந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார், என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிடலின் புகழ்மிக்க பொன்மொழிகள்:
*இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!
*நீங்கள் என்னைக் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்!
*அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
இப்போதும் கியூபாவில் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனைக் குழந்தைகளும் ஒருமித்தக் குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்!” என்பதே. ஆம்.... அந்த மாபெரும் தலைவரின் ஆத்மா கண்டிப்பாகக் காற்றில் கலந்து கியூபா மக்களை வழி நடத்திக் கொண்டே இருக்கும்!
ஜெ.அன்பரசன்  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக