ஞாயிறு, 6 நவம்பர், 2016

ராஜீவ் கூறியதை புலிகள் ஏற்கவில்லை .அழித்தார்கள் ... அழிந்தார்கள் ... பாண்டியனுக்கு பதில் சொல்ல கலைஞர் தேவையில்லை பதில் எல்லோரும் அறிந்ததுதான் .

25 ஆண்டு கால குழப்பத்தைத் தீர்ப்பாரா கருணாநிதி? – எதிர்பார்ப்பில் தா.பாண்டியன்
 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனிடம், ‘இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் இணைப்பு பற்றி’ கேட்டபோது, ‘கட்டாயம் இணைய வேண்டும். இணையவில்லை என்றால் எதிர்காலம் இல்லை’ என்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் பதில் அளித்துள்ளார். மேலும், ‘விடுதலைப்புலிகள் செய்த தவறுகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில் நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள், விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், “ஒன்றை அழுத்தமாகச் சொல்லி விடுகிறேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான். கலைஞர், முரசொலி மாறன், நான். இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘முரசொலி’யில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தன்னையும் முரசொலி மாறனையும் கடைசி கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, ‘விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத் தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது’ என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார். அது உண்மைதான்.
ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம். முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்து கொண்டவர். ‘கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா? அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?’ என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டு காலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும். ஆனால், அவர் சொல்லத் தயங்குகிறார். இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும், உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார். ‘பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்’ என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார். ஆனால், அவர் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக