வியாழன், 10 நவம்பர், 2016

புதிய ரூபாய் தாள்களில் இந்தி திணிப்பா? - தமிழ் அமைப்பு ஆவேசம் !

more hindhi words dumb on put in new currencyசென்னை: இந்தியா இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் எனில் மற்ற மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவிக்கிறதா என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் பல மாற்றங்களை செய்துள்ளது . இதுவரை இல்லாதவாறு இந்த ரூபாய் தாள்களில் இந்தி (தேவநாகிரி) எண்களை புகுத்தி உள்ளது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் செய்தியையும் இந்தியில் மட்டுமே அச்சிட்டுள்ளது. இதற்கு எந்த ஆங்கில மொழிப் பெயர்ப்பையும் அச்சிடவில்லை. இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்பு.
இந்தியாவிற்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட தேசிய மொழியும் இல்லை. அலுவல் மொழிகளாக மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் உள்ளது. இருப்பினும் ரூபாய் தாள்களில் சர்வதேச வழக்கத்தில் உள்ள எண்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் சாசன சட்ட விதி 343 சொல்கிறது. விதி 343 பிரிவு 1-ல் அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம்கூட (Constitutional Amendment) செய்யாமல் புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் தாள்களில் இந்தி தேவநாகரி எண்ணை பயன்படுத்தியிருப்பது திணிப்பு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும்.
ரூபாய் தாள்களில் இந்தி எண்களை இந்திய அரசு பயன்படுத்துமே எனில் தமிழ் எண்களையும் இந்திய அரசு பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழி இந்திக்கும் மூத்த மொழியாக விளங்குவது மட்டுமல்லாது பல இந்திய மொழிகளுக்கு தாய் மொழியாகவும் விளங்குகிறது. தமிழ் மொழிக்கு வழங்கப்படாத சிறப்பு இந்தி மொழிக்கு மட்டும் ஏன் வழங்கப்பட வேண்டும்? இந்தியா இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் எனில் மற்ற மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாகவும் மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவும் இந்திய அரசு பாவிக்கிறது என்பதாகவே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை கடைப்பிடிக்க வேண்டிய இந்திய அரசு இத்தகைய பக்க சார்பான நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதிய ரூபாய் தாள்களில் இந்திய அரசு இப்படியான இந்தித் திணிப்பை உடனே நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க முடியாதென்றால் தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளின் எண்களையும் ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டும். 'தூய்மை இந்தியா ' திட்டத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எல்லா உள்நாட்டு வெளிநாட்டு மக்களும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக