செவ்வாய், 15 நவம்பர், 2016

பாராளுமன்றத்தில்.. காங்கிரஸ், மம்தா,ஆம் ஆத்மி, லாலு ,முலாயம் இடதுசாரிகள் ,அகாலி, பகுஜன் எல்லாம் ஓரணியில் போர்க்கொடி! திமுக + அதிமுக தூக்கம்?

நாளை மறுநாளிலிருந்து பாராளுமன்றத்தில் தீபாவளி. காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரிகள், சமாஜ்வாடி, அம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தள், ஜனதா தளம் (ஒ), பகுகுண் சமாஜ் என இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாய் இந்த துக்ளக்தர்பாரையும்கறுப்புப்பணமோசடி
அராஜகத்தையும் எதிர்த்து அணி வகுத்திருக்கின்றன. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவே இந்த மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து நிற்க வைத்து கேள்விக் கேட்கிறது. மக்களிடமிருந்து வர வேண்டிய unrest எல்லா அரசியல்கட்சிகளிடமிருந்து வந்துள்ளது 
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த இந்தியப் பிரதமருக்கு எதிராக, நாடு தழுவிய எதிர்ப்பியக்கம் கட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கைகோர்க்க இருக்கின்றன. நேற்று கொல்கொத்தாவில் பேசிய மம்தா பானர்ஜி, மோடி அரசுக்கு எதிராக இடதுசாரிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்ததோடு அதற்காக பிற கட்சிகளுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதை வரவேற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடிக்கு எதிராக மம்தாவின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நவம்பர் 16 அன்று தொடங்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பிரச்சனை எழுப்பத் தீர்மானித்திருக்கின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இன்று புதுடில்லியில் சந்திக்கின்றனர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத் மற்றும் லோக்சபாவில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கீழ்அவையில் சுதீப் பந்தோபாத்யேய் அவர்களை சந்திக்கவிருக்கின்றனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் டெரிக் ஓ’பிரையனும் இக்கூட்டத்தில் பங்கெடுப்பார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஞாயிறன்று காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்னும் தன் எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் வேறுசில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னரே போராட்டம் நடத்தப்படலாம் அல்லது நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் போராட்டங்கள் வெடிக்கும்.
காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக அரசை குற்றம்சாட்டியிருக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல் அவசரமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, சராசரி மனிதனை துன்புறுத்துவதாக அமைகிறது என கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.மின்னம்பலம்.com

முகநூல் பதிவுகள் :
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று என்னிடம் செல்லும் நோட்டுக்குள் 316 ரூபாயும், செல்லாத சில ஆயிரங்களும் இருந்தன. இரண்டு நாட்களில் தான் சரியாகி விடுமே அதுவரை டெபிட் கார்டில் பார்த்துக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
மறுநாளில் இருந்து எங்கும், எப்போதும் கார்டு. பிக் பாஸ்கெட் ஆன்லைன் ஆப்பில் தான் கடந்த சில மாதங்களாக மளிகை, பழங்கள் வாங்குகிறேன். கையில் பணம் இல்லாததால் இந்த முறை காய்கறியும். ஆன்லைனில் மொத்தமாக வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக வாங்கும்போது ஒவ்வொரு முறையும் டெலிவரி சார்ஜ் தனியாகத் தந்தாக வேண்டும். கூடவே மினிமம் அளவு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகவே எனக்குத் தேவையானதைத் தவிரவும் அதிகம் வாங்க வேண்டியதாயிற்று.
இன்று மின்னுவுக்கு பள்ளியில் ‘pot painting'. ஒரு பானை வாங்குவதற்காக சனிக்கிழமை ரங்கராஜபுரத்தில் ஒரு கடைக்கு சென்றோம். பானையின் விலை எழுபது ரூபாய். என் கையில் இருக்கும் நூற்று சொச்சத்தை தர பயமாக இருந்தது. குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் கார்டு எடுத்துக் கொள்வதாக கடைக்காரர் சொன்னார். ‘’அந்த பானையில நாலு, இந்த விளக்குல இரண்டு, அந்த சட்டி என்னா விலை’’ என 590 ரூபாய்க்கு மண் பொருட்கள் வாங்கினேன்.
பானையில் அடிக்க பெயிண்ட் வாங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின் பத்து இணைந்த பாக்ஸ் 190 ரூபாய்.. ‘’மினிமம் 300 ரூபாய்க்கு வாங்கினா தான் கார்டு எடுப்போம்’’.. ‘’இரண்டு பிரஷ், ஒரு பென், ஒரு பேட்’’ என நானூறு ரூபாயை இழுத்து வைத்தேன். இதேபோல் எங்கும், எங்கும் ‘’கார்டு எடுத்துப்பீங்களா?’’ என்கிற கேள்வியோடு செலவை இழுத்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு காஃபிக்கு கார்டு எப்படி எடுத்துப்பாங்க, வயிற்றில் இடம் இருக்கோ இல்லியோ... குறைந்தது இருநூறு, முந்நூறு ரூபாய்க்கு சாப்பிடு.... இப்படியாக...
நேற்று மாலை கட்டக்கடைசியாக என்னிடம் 70 ரூபாய் மிஞ்சியிருந்தது. பிரதாப் பிளாசாவில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. ஆட்டோ டிரைவர் அறுபது ரூபாய் கேட்டார். ஒத்துக்கொண்டு ஏறி வழியெங்கும் ஏ டி எம் தேடினால் எங்கும் பணம் இல்லை. புத்தக வெளியீட்டு விழாவில் இந்த சோகக்கதையை நண்பர் வேடியப்பனிடம் சொல்ல, அவர் பணம் தருவதாக சொன்னார். எமர்ஜன்சி பீரியட்ல பணம் வாங்குறது தப்பு என்கிற உணர்வு மேலிட மறுத்தேன். அங்கே வந்திருந்த இன்னொரு நண்பர் என்னையும், மின்னுவையும் வீட்டில் விட்டு சென்றார்.
இன்று காலை பத்துரூபாயோடு விடிந்தது. மின்னுவை பள்ளியில் விட்டு விட்டு, பால் வாங்க ஸ்பென்சர் சென்றேன். 44 ரூபாய் பால் பாக்கெட்டுக்கு அவர்கள் கார்டு வாங்கிக் கொள்ள மாட்டார்கள். மறுபடியும் உடனடியாக தேவைப்படாததை வாங்க வேண்டியதாயிற்று. பேசாம பேங்க் போய் பணம் எடுத்துட்டு வந்துடலாம் என சென்றால், கூட்டம் பார்த்து தலைசுற்றியது. அத்தனை நேரம் நிற்க முடியாதவாறு முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள் மீதம் இருந்தன. வழியெங்கும் ஏடிஎம் தேடல், எங்கும் பணம் இல்லை. ’’நைட்டு பதினோறு மணிக்கு வா. பணம் போடுவானுங்க. கப்புன்னு புடிச்சிடலாம்’’ என ஒரு ஏடிஎம் செக்யூரிட்டி சொன்னார். வழிப்பறி செய்யும் உணர்வு வந்துபோனது.
நேற்றே மின்னுவுக்கு ஜலதோஷம் இருந்தது. இன்றைக்கு காய்ச்சல் தொடங்கியிருக்கிறது. டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும். அவளுக்கு வழக்கமாக பார்க்கும் மருத்துவர் கிளினிக் வைத்திருக்கிறார். அவர் கார்டு ஸ்வைப் செய்வதில்லை. சரி, இந்த ஒருமுறை அவரை மறந்து விட்டு கார்டு வாங்கும் மருத்துவமனையில் ஒரு மருத்துவரை கூட பார்த்து விடலாம். ஆட்டோவுக்கு எதைக் கொடுப்பது?????
செக்கு எண்ணெய் வாங்கித் தரும் எதிர் மளிகைக்கடைக்காரர் தேங்காய் எண்ணெய் வந்து விட்டதாக சொன்னார். '’காசு இல்லண்ணா, அப்புறம் வாங்கிக்கறேன்’’ என சொன்னேன். ‘’உங்ககிட்ட யாரு காசு கேட்டா, எடுத்துட்டுப் போங்க’’ என எடுத்துத் தந்தார். பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் ஆப்புகள் எவ்ளோ ஈசியா இருக்கு என நண்பர்களிடம் புளகாங்கிதம் அடைந்த போது இவரது வயிற்றில் தான் அடித்தேன் என நினைக்க அவமானமாக இருக்கிறது. பிக் பாஸ்கெட் 13 ரூபாய் கிலோ கோவைக்காயை 30 ரூபாய் டெலிவரி சார்ஜ் எடுத்துக் கொண்டு வந்து தருகிறான். இந்தாளு 400 ரூபாய் எண்ணெயை சும்மா எடுத்துக் கொண்டு போ என்கிறார். ;(
எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட்டும் 1000, 500 ரூபாய்களை வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த மளிகைக்கடைக்காரர் வாங்கிக் கொண்டு கோயம்பேடு மார்கெட்டில் மாற்றுவதாக இன்று சொன்னார். ஆனால் திருப்பித்தர இவரிடமும் சில்லறை இல்லை. ஆயிரம் ரூபாயையும் பொருட்களாக வாங்கிக் கழித்துக் கொள்ள வேண்டியது தான். கார்டு இருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் தானே என இங்கே திரும்பத்திரும்ப பேசப்பட்டதை பார்த்தேன். அதை வைத்தும் நான்கு நாட்களுக்கு மேல் ஒன்றையும் கிழிக்க முடியவில்லை.
புதிய ரூபாய் ஏடிஎம் மெஷினில் வராது என்கிற அறிவுகூட இல்லாமல், ஒரே ராத்திரியில் எல்லோரையும் தெருவில் அலைய விட்டவர்கள் பொருளாதார மேதைகளாம். ’’என் பணத்தை என்னாலே எடுக்க முடியலியே’’ என கலங்கி நிற்கிறவர்களைப் பார்த்து, ‘’எக்னாமிக்ஸுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு, தேசபக்தி இருக்கா உனக்கு’’ என கேள்வி கேட்பவர்கள் எல்லாம் இதயத்தை கழட்டி வைத்து விட்டு, மூளையை வேறு எங்காவது சொருகி வைத்திருக்கிறார்கள் போல... முகநூல் பதிவு பிரியா தம்பி & நாராயண் ராஜகோபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக