திங்கள், 14 நவம்பர், 2016

கறுப்புப்பணம் தங்க கட்டிகளாக மாறிவிட்டது: சீதாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று நாள் சிறப்பு மாநில மாநாடு நெல்லையில் நேற்று காலை தொடங்கியது. மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கொடியேற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எம்.பி. பேசியதாவது: “இந்தியாவில் தொழில் வர்த்தக வளர்ச்சி எதிர்மறையாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு கோடி வேலையில்லா பட்டதாரிகள் உருவாகின்றனர். பிரதமர் அறிவித்தபடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்காமல் தற்போது ரூபாய் 500, 1000 நோட்டுகளை தடை செய்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 1000 நோட்டை முடக்கிவிட்டு ரூபாய் 2000 நோட்டை சப்ளை செய்வதால் ஊழல் இரண்டு மடங்கு உயர்வதற்கு வழி ஏற்படும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அதற்காக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தன்னை முன்னிறுத்தி வருகிறது.

டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில்கூட பணம் எடுப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை உள்ளது. அங்குள்ள வங்கியில் நான் பழைய ரூபாய் நோட்டை மாற்றி புதிதாக பெற்ற ரூபாய் 2000 நோட்டை டெல்லி, சென்னை, நெல்லை என வரும் வழி எங்கும் மாற்ற முயன்றும் சில்லறை பெற முடியவில்லை. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை” என்று அவர் பேசினார்.
அதையடுத்து, இன்று காலை நெல்லையில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறிய பேட்டியில், “ரூபாய் நோட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சாமானிய மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டில் உள்ள கறுப்புப்பணம் அனைத்தும் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு விட்டது. நகை கடைகளை விடிய, விடிய திறந்து விற்பனை செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் டிசம்பர் 3௦ஆம் தேதி வரை ரூபாய் 500,1000 நோட்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக