செவ்வாய், 8 நவம்பர், 2016

முயல் வேடமணிந்த முதலைகள் ! ஸ்டாலின் குற்றச்சாட்டு .. மத்திய அரசின் அடியாளாக பன்னீர் +சசி ஆட்சி?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது அமைச்சரவை பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வதோடு அமைச்சரவையையும் தலைமையேற்று நடத்துகிறார். இதுவரை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த திட்டங்களை வேக வேகமாக தமிழக அரசு நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஒப்புதல் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், காட்டமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
“உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்னைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி பிரச்னையில்கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்னையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்தபோது அந்த குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடியாக நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுநர் அவர்களின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.
மேலும் நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து இலாகா பொறுப்புகளையும் வழங்கி 11.10.2016 அன்று ஆளுநர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். நிதியமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தினார். மாநில நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் கருதி ஆளுநரின் இந்த முடிவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நானே வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு இருமுறை அமைச்சரவைக் கூட்டத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். ஆனால், அந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்திக் குறிப்புகள் ஏதும் இல்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துமனையில் சேர்க்கப்படும் முன்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்த நான்கு முக்கிய பிரச்னைகளிலும் இப்போது அதிமுக அரசு மத்திய அரசின் முடிவுகளுக்கு ‘கை கட்டி’ நின்று சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு நிர்வாக ரீதியாக நெருங்கிச் செல்வது வரவேற்புக்குரியது. ஆனால் உதய் திட்டம். நீட் தேர்வு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகிய அனைத்தையும் அதிமுக அரசு, தான் முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டாமா? ‘மக்களுக்காகவே நாங்கள்’ என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட உண்மைகளை ஏன் விளக்க மறுக்கிறார்கள்? இப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க அதிமுக அரசு முன் வந்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
முதலமைச்சர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின்படி வரி விதிப்பு குறித்து விவாதிக்கும் ‘சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில்’ கூட்டத்துக்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும்கூட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது. அரசியல் சட்டப்படி அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய மிக உயர்ந்த பொறுப்புள்ள ஆளுநர் பதவிக்கு தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது? யார் ஆட்சி செய்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் தினம் தினம் எழுகிறது.
மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றுக்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது? மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.
ஆகவே, அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்னைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ஸ்டாலின்.மின்னம்பலம.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக