வியாழன், 24 நவம்பர், 2016

Dr.Manmohan Sing:வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் இடி முழக்கம்


ராஜ்யசபாவில் இன்று செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் நிர்வாக கோளாறுகளை கடுமையாக சாடினார். அவருடைய பேச்சின் தமிழாக்கத்தை கீழே அளித்திருக்கிறோம்.
“ரூபாய்நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அணுகுமுறையை கடுமையாக எதிர்க்கிறோம். இதை நடைமுறைபடுத்துவதில் வரலாறு காணாத  நிர்வாக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாத சூழலில், மக்கள் கடும் அவஸ்தையில் இருப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு 50 நாட்களுக்கு இன்னல் தொடரும் என்று அரசே கூறியுள்ளது.  50 நாள் தடை என்பது ஏழை, பின் தங்கிய மக்களுக்கு மிகப்பெரும் பேரழிவையே ஏற்படுத்தும்.
எந்த நாட்டிலாவது,  50 நாட்களாக பணம் எடுக்க மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 
வங்கிகளில், மக்கள் இருப்பு வைத்துள்ள தங்களது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் திணறுவது எந்த நாட்டிலும் நடைபெற்றதாக எனக்குத் தெரியவில்லை. இது ஒன்றே போதும், அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதற்கு.
இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மூலம், இந்திய  ரூபாய் மீதும், நாணய அமைப்பு மீதும், இந்திய வங்கிகளின் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
செல்லாத நோட்டுக்கள் நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட முறை காரணமாக, விவசாயம், சிறு தொழில், முறை சாரா தொழில்கள் என்று அனைத்து துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏழை மக்களின் தினசரி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை. மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை  நீண்ட கால அளவில் நன்மை விளைவிக்கும் என சிலர் கூறி வருகின்றனர். அந்த நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அதற்குள் நாம் இறந்திருபோம்.
விளைவுகளை குறைத்து மதிப்பிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. அரசின் நடவடிக்கையால் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், தற்போது வரை 60-65 பேர் இறந்துள்ளனர்.  மக்கள் படும் இன்னல்களுக்கு பிரதமர் உரிய நிவாரணம் வழங்குவார் என்றும் சாத்தியமான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக