வெள்ளி, 25 நவம்பர், 2016

எதிர்க்கட்சிகள் கூட்டம்: அதிமுக - திமுக பங்கேற்பு!


பிரதமர் மோடி, ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக இன்று (25/11/2016) காலை 10 மணிக்கு டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து அதிமுக-வும், திமுக-வும் பங்கேற்றன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரும் 28ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன நாள் அனுசரிக்கப்படும் என்று நேற்று முன்தினம் (23/11/2016) முடிவெடுத்தன. தொடர்ந்து, நேற்றும் (24/11/2016) எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி அவைக்கு வராமல் விவாதம் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு அதே போன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் 28ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற உள்ள கண்டன நாள் அனுசரிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அதிமுக-வும் எதிர்க்கட்சியான திமுக-வும் பங்கேற்றன. இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தின.
ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரும் வரை ரூபாய் நோட்டு பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக முடிவு செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக