ஞாயிறு, 13 நவம்பர், 2016

நிதி நெருக்கடி: ஆங்காங்கே வெடிக்கும் வன்முறைகள்! நாட்டை நாசமாக்கியே தீருவேன் என்று மோடி கும்பல் சபதம்?


‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்கள். இன்று இந்திய மக்களின் நிலை கிட்டதட்ட அதுதான். கையிலே ரூபாய் ஆயிரம் இருந்தாலும் அதைக் கொண்டு ரூபாய் பத்துக்கு இட்லி வாங்கி உண்ண முடியாத நிலை. இன்றோடு ஐந்தாவது நாளாக இந்திய மக்கள் பணத்துக்காக அல்லாடித் தவித்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் அன்றாட பணிகளை விட்டுவிட்டு பணத் தேவைக்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்து கிடக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் ஏழைகளே. பணத்துக்காக காத்திருந்து, காத்திருந்து பொறுமை இழக்கிறார்கள் மக்கள். பொறுமை இழந்த மக்கள் தன் நிலை மறந்து வன்முறையில் இறங்குவது இயல்பு. அதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த பணத்தட்டுபாடு காரணமாக ஆங்காங்கே வன்முறை வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. முதல் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கொல்லம், வவாக்கம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி திருவாங்கூர் கிளை முன் நேற்று முன்தினம் காலை ஏராளமான மக்கள் காத்திருந்தனர். வங்கி கதவு திறக்கப்பட்டதும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக்குள் பணம் பெற நுழைந்தனர். இதைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், வங்கிக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதைப் பார்த்து மிரண்டனர். இதனால், வங்கிக்குள் மேலும் யாரும் நுழையா வகையில் கதவைப் பூட்டினர். இதைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள், வெளியில் நிற்பவர்களை பொருட்படுத்தாமல் கதவைப் பூட்டிய வங்கி அதிகாரிகள் செயல்பாட்டை கண்டு கொதித்தனர். இதனால், ரகளையில் ஈடுபட்டு, வங்கியின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். அதன்பின், போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மக்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ரகளையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மூன்றாவது நாளாக ஏடிஎம்களில் பணம் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி பணத்துக்காக, வங்கியின் முன் நீண்ட வரிசையில் நின்று, பணம் பெற்றுச் செல்கின்றனர். கேரளாவில் வங்கியில் பணம் பெற வரிசையில் நின்ற இரண்டு பேர் நேற்று உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சம்பவம், மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கையில் காசு இல்லாத மக்கள் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த தகவலை போலீஸார் மறுத்துள்ளனர். சிறிய பிரச்னை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பணத்தட்டுப்பாடு காரணமல்ல என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பர்தாஹா கிராம பஞ்சாயத்தார் கூறும்போது, ‘‘ரேஷன் கடையை நிர்வகித்து வரும் லால் அஹிர்வார் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய உணவு தானியங்களை வழங்கவில்லை. கிராம மக்களும் முதல்வரின் உதவி எண்ணிலும், உள்ளூர் போலீஸாரிடமும் புகார் அளித்து பார்த்தனர். அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கம்போல நேற்று ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம் ஒரு மாதத்துக்கான உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளும்படி லால் அறிவுறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த மக்கள் நான்கு மாதத்துக்கான தானியங்களை வழங்கும்படி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாரும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்துச் செல்லவில்லை’’ என்றனர். துணை எஸ்.ஐ. ராம்கிஷோர் திவாரியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஆனால், அந்த ரேஷன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிதி நெருக்கடி நீடித்தால் வன்முறைகள் வெடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. மக்களை அந்த நெருக்கடிக்கு ஆளாக்கமால் மத்திய அரசு சுதாரித்துக் கொள்வது நல்லது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக