புதன், 30 நவம்பர், 2016

BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்

எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
S-Ve-Shekhar-postதிரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக்கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன் !! என்னை குறை சொல்வது மல்லக்காய் படுத்து எச்சல் துப்பிக் கொள்வதற்கு சமம்.”
இதை சொன்னது வேறு யாரும் அல்ல பா.ஜ.க-வின் தலைவரும் நடிகருமான எஸ்.வி சேகர்.  ஒரு பா.ஜ.க  தலைவரே மற்றொரு தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். அதன் பொருட்டு இந்த முன்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.

எஸ்.வி.சேகருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு
பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பதவியில் இருப்பவர் இந்த கே.டி.ராகவன். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். சுமந்த் சி ராமன், மாத்ருபூதம்,  பெருமாள் மணி, பானு கோம்ஸ் போன்ற அரசியல் விமர்சகர் என்ற முகமுடியுடன் வரும் அதிகாரப்பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பேச்சாளர்களுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. வின் சொந்த முகத்துடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.

சென்ற 2015-ம் ஆண்டு தாலி பற்றிய விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்து வானரங்கள் குண்டு வீசிய விவகாரத்தில் புதிய தலைமுறையின் விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற ’கொள்கை’ முடிவெடுத்திருந்தனர் தமிழக பா.ஜ.க. வினர். இந்தப் பங்காளிச் சண்டையை அடுத்து சில நாட்கள் அவர்கள் பு.தலைமுறை விவாதத்திற்கு செல்லாமல் இருந்த போது எஸ்.வி.சேகரோ அந்த முடிவை மீறி விவாதங்களில் பங்கெடுக்கிறார்.
மோடியை நேரடியாகவே சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கோடு இருக்கும் தான் கட்சி முடிவுகளை பின்பற்றத் தேவையில்லை என்ற ’தன்னடக்கம்’ தான் அவருடைய கலகத்திற்கு காரணம். மேலும் காங்கிரசு போன்று கோஷ்டி மோதலுக்கும், கோஷ்டி கழுத்தறுப்புக்கும் பா.ஜ.க-வும் பெயர் பெற்றதுதான். தமிழகத்தில் அப்படி சில பல கோஷ்டிகள் செயல்படுகின்றனர். ஃபேஸ்புக்கில் கொஞ்சம் இவர்கள் உலகில் நுழைந்து பார்த்தால் காவி வேட்டி கிழிந்து சண்டையிடும் பல்வேறு தர்ம யுத்தங்களைப் பார்க்கலாம்.
இந்த இலட்சணத்தில் அ.தி.மு.கவில் குப்பை கொட்ட முடியாமல் இங்கே நுழைகிறார் எஸ்.வி.சேகர். அவரை மற்ற கோஷ்டி தலைவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை, மரியாதை தரவில்லை என்ற குறையோடுதான் அவர் புதிய தலைமுறை விவாதத்தில் முடிவை மீறி கலந்து கொள்கிறார்.
அப்படி விவாதத்தில் கலந்து கொண்டாலும், பா.ஜ.க. வின் ‘அர்ரம் குர்ரம்’ விவாத முறைக்கும் மக்கள் விரோத கருத்துக்கும் மாறாக எதையும் பேசிவிடப் போவதில்லை என்றாலும், கட்சியின் சில தலைவர்களுக்கு எஸ்.வி.சேகரின் ’தன்னடக்கத்தால்’ எரிச்சல் ஏற்படுகிறது. கே.டி.ராகவன் போன்றோர் கட்சிக்கு ’புதிதாக’ வந்த எஸ்.வி.சேகரை விமர்சிக்கின்றனர். கட்சிக்குள் புகைச்சலும் உள்குத்து சண்டையும் ஆரம்பிக்கிறது.
இதையடுத்து சென்ற 2015, ஜூன் மாதம் பா.ஜ.க-வின் கே.டி.ராகவனுக்கும் எஸ்.வி சேகருக்கும் இடையில் நடந்த சண்டை வலுத்து எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து தான் மேற்சொன்னது. இதில் கே.டி ராகவனுடைய சகோதரர் கே.டி சீனிவாசனது ஊழலை பிட்டு வைக்கிறார் எஸ்.வி.சேகர்.
KT-Raghavan's-Reply-post
எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பதிவில் பதில் போடும் கே.டி.ராகவன்.
இதற்கு அதே பதிவில் பதிலளித்த கே.டி.ராகவன் “திரு, சேகர்.. வணக்கம். நீங்கள் பதிவிட்ட இந்த நிறுவனத்தில் என்னுடைய சகோதரர் சில இயக்குனரில் ஒரு இயக்குனராகவும் வேலை செய்தார் என்பது உண்மை… இயக்குனர் பொறுப்பிலிருந்து அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார் என்பது உண்மை.. அந்த நிறுவனம் இப்போது நீதி மன்ற உத்திரவு படி மூட பட்டிருப்பதும் உண்மை.. அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார் என்பதும் உண்மை. அது அவருடைய சொந்த நிறுவனம் அல்ல என்பதும் உண்மை. ஆனால் இதிலே என்னுடைய பெயரை இழுக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா? உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
கே.டி. ராகவனின் சகோதரர் கே.டி சீனிவாசன் இயக்குனராக இருக்கும் நிறுவனத்தின் பெயர் ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்’ (EDserve Soft systems). ஒரு நிறுவனத்தில் இயக்குனராக யார் இருப்பார்கள், இருக்க முடியும்? உதாரணமாக, தி ஹிந்து இதழின் உடைமையாளர்களான கஸ்தூரி அன் சன்சில் யார் இயக்குனராக முடியும்? திருமாவளவனோ, கிருஷ்னாசாமியோ இயக்குனராக முடியுமா? கஸ்தூரி அய்யங்காரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் தான் இயக்குனராக முடியும்.
அடுத்ததாக, ”அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார்” என்கிறார். பின்னர் ”அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார்” என்கிறார். ஒரு நிறுவனத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தவர், எப்படி அந்நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழக்க முடியும்? ராஜினாமா செய்தபின் அவருடைய ஆல்டர் பெர்சனாலிடி அந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
ராகவன் ஒரு யோக்கியராக இருந்தால் தனது சகோதரரது ஊழலைக் கண்டித்து அவரை குடும்ப நீக்கம் செய்திருக்க வேண்டும். போலீசிடமும் புகார் அளித்து ரெய்டு நடத்த உதவியிருக்க வேண்டும். அடுத்து நடிகர் சேகர் குற்றச்சாட்டு சொன்னவுடன் ஆஜராகும் அவர் தனது பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என்று சகோதரரது குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். பிறகு சகோதரர் ராஜினாமா செய்தார், கருத்து வேறுபாட்டால் நீங்கினார், நீதிமன்றத்தால் மூடப்பட்ட பிறகு வேலையிழந்தார் என்று முன்னுக்குப் பின் முரணாக ஒரு பதிவிலேயே உளறுகிறார். குற்றம் செய்பவனுக்கு குளறுபடி இல்லாமல் பேச வராது என்பது இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ராகவன் தனது சகோதரரின் அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.
ராகவன் தனது சகோதரர் கே.டி சீனாவாசனது அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.
சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராகவன், ரூ. 81 இலட்சத்தை தனது சொத்துக் கணக்காக காட்டியிருக்கிறார். எனில் இவருடைய நிரந்தர வருமானம் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் உளருவது போல உளறும் இவர் வழக்குரைஞர் தொழிலும் செய்கிறாராம். என்ன வழக்குரைஞரோ?
ராகவனது சகோதரர் சீனிவாசன் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாக அவரது தொழில்சார் சமூகவலை தளமான லின்க்ட் இன் (Linkekd in) சுயவிவரத்தில் இன்று வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு மாம்பலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக 2001-ம் ஆண்டு துவங்கப்பட்ட லேம்பெண்ட் சாஃப்ட் சிஸ்டம்ஸ் (Lambent Soft systems ), 2008-ம் ஆண்டு ஆன்லைன் கல்வி சேவையை வழங்கும் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்-ஆக மாற்றப்படுகிறது. 2007- 2008 நிதியாண்டில் 3.95 கோடி வருமானத்தை ஈட்டிய எட்செர்வ் நிறுவனம், பிப்ரவரி 2009-இல் ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,973,908 பங்குகளை ரூ. 55-லிருந்து ரூ.60-தை ஆரம்ப விலையாக நிர்ணயித்து பங்குச்சந்தையில் வெளியிட்டது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு(FII) 18,86,954 பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனமல்லா முதலீட்டாளர்களுக்கு (Non institutional Investors-NII) 5,66,086 பங்குகளையும், சாதாரண மக்களுக்கு 13,20,868 பங்குகளையும் ஒதுக்கீடு செய்திருந்தது எட்செர்வ். பங்கு வெளியிட்ட மூன்றாவது நாளே எல்லா பங்குகளும் விற்று, 1.3 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதிலும், நிறுவனமல்லா முதலீட்டாளர் பங்குகளில் 3.1 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. மேற்கு மாம்பலத்தின் அய்யங்கார் நிறுவனம் எப்போது தனது பங்குகளை சந்தையில் வெளியிடுமென்று ’சர்வதேச முதலீட்டாளர்கள்’ காத்திருந்தனர் போலும்.
srinivasan-profile
சீனிவாசன் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாக அவரது தொழில்சார் சமூகவலை தளமான லின்க்ட் இன் (Linkekd in) சுயவிவரத்தில் இன்று வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக பங்குச் சந்தைக்குச் செல்வது சாதாரண பொதுமக்களின் முதலீடுகளை பெறுவதற்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்களின் முதலீடுகளை விட கருப்புப் பண முதலைகளின் பினாமி நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இவற்றின் முதலீடுகள் தான் மிக அதிகம். அதாவது கருப்பை வெள்ளையாக்கும் நடைமுறைகளில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்றாகும்.
இதன் மூலம் பங்குச் சந்தையில் மூலம் சுமார் ரூ 23.84 கோடி அளவுக்கு நிதி திரட்டியது எட்செர்வ். இம்முதலீடுகள் யாரிடமிருந்து வந்தன என்பதை செபி, அமலாக்கப் பிரிவு என யாருக்கும் சொல்லத் தேவையில்லை. நிறுவனமல்லா முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) பதிவுசெய்திருக்க வேண்டியதில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்திருந்தாலும், அந்த நிறுவனங்களில் யார் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இப்பேற்பட்ட யோக்கியர்தான் இன்று  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்திற்கு ஆதரவாக நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறார். உண்மையில் இவர்கள் கொள்ளையடிப்பதற்கான குற்றத்திற்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமாம்.
இதன் பிறகு வரிசையாக செப். 2009-ல் 2tion.com நிறுவனத்தையும், பிப்ரவரி 2010-ல் ரூ. 4 கோடிக்கு SchoolMate, மார்ச் 2010-ல் ரூ. 4.6 கோடிக்கு SmartLearn WebTV, ரூ.1.25 கோடிக்கு Sparkling Mind, போன்ற கல்வி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியது.
2010-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத் அரசின் தொழில் முனைவு மேம்பாட்டு மையம், குஜராத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து குஜராத் இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் பெற்றது. அதாவது குஜராத்தின் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கி, அவர்களுக்கு குஜராத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேலையும் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை தான் எஸ்.வி சேகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு குஜராத் அரசு எந்த ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பையும் (Tender Invitation) வெளியிட்டதாக தெரியவில்லை. எனில், குஜராத் அரசின் ஒப்பந்தம் மேற்கு மாம்பலத்திலுள்ள ஒரு அய்யங்கார் கம்பெனிக்கு எப்படி வந்தது?
மோடி – பா.ஜ.க – ராகவன் – சீனிவாசன் – எட்செர்வ் நிறுவனம் என்ற வழித்தடமின்றி வெறென்ன இருக்கமுடியும். முன்னதாக 2009-இல் வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடமிருந்து பெற்றிருந்தது. பா.ஜ.க. வும் காங்கிரசும் தொழில் பங்காளிகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
பஞ்சாப் நேஷனல் வங்கி, இத்தாலியை சார்ந்த Banca IFIS மற்றும் இத்தாலிக்கு தெற்கிலுள்ள மால்டாவைச் சேர்ந்த கடன் நிறுவனமான – எஃப்ஐஎம் வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்தியா ஃபேக்டரிங் (India Factoring and Finance Solutions) நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் ரூ. 5 கோடியில் ரூ. 1.16 கோடியை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் மோசடி செய்தது. ரூ. 5 கோடிக்கே இத்தாலி, மால்டா ஆகிய இரு வெளிநாட்டு முதலீட்டு வங்கிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்றால் கருப்புப் பணத்தின் பாய்ச்சலை புரிந்து கொள்ளலாம்.
kdr 2
இந்த புள்ளயும் பால் குடிக்குமாங்குற மாதிரி என்னா ஒரு நடிப்பு!
இதற்காக இந்தியா ஃபேக்டரிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை மூடியும், அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து அதன் சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட செப், 2013-ல் தீர்ப்பளித்தது, உயர் நீதிமன்றம்.
இந்த நிறுவனமும் அதன் இயக்குனர்களும் செபியின் மோசடி மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தடை விதிகள் மற்றும், மூலதன மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் நெறிகளுக்கு முரணாக பெரு நிறுவனங்களுக்கிடையிலான வைப்பு திட்டங்கள் (Deposit schemes) மற்றும் பல திரைமறைவு பரிவர்த்தனைகளின் மூலம் பங்கு விற்பனை – முதலீடு திரட்டியதை செபி (SEBI) கண்டறிந்தது.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபி (SEBI) எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தையும் அதன் நிர்வாக இயக்குனர் கிரிதரன் மற்றும் மூன்று இயக்குனர்களையும் பங்கு சந்தையிலிருந்து மூன்றாண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த பங்குச் சந்தை முறைகேடுகள் நடந்தது 2009-ல் அதாவது, 2013-ல் நிறுவனம் நீதிமன்றத்தால் முடக்கப்படும் முன்னர் நடந்தது.
எட்செர்வ் தன்னுடைய சகோதரரது சொந்த நிறுவனம் அல்ல என்றும் ராகவன் தனது பதிலில் சொல்கிறார். அதாவது, அந்நிறுவனம் செய்த முறைகேடுகளுக்கு தனது சகோதரர் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது என்கிறார். இயக்குனராக இருப்பவர்கள் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களாகவும் பங்குள்ளவராகவும் தானே இருப்பார்கள்? இம்முறைகேடுகள் நடந்த போதும், அரசின் ஒப்பந்தங்களைப் பெற்ற போதும் கே.டி.ராகவனின் சகோதரர் கே.டி.சீனிவாசன் அந்நிறுவனத்தின் இயக்குனராக தான் இருந்திருக்கிறார். பின்னர் நீதிமன்றம் மூடுமாறு உத்திரவிடும் போதுதான் அவர் பதவி விலகியதாக யோக்கியர் ராகவனே கூறுகிறார்.
தன்னுடைய சகோதரருக்காக வழக்குரைஞராகி வழக்காடிய ராகவன், பிறகு, ”உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்” என்றும் கேட்கிறார். ராகவனுக்கும், சகோதரரின் தொழிலுக்கும் தொடர்பில்லை எனில் அதை முதலிலேயே சொல்லி விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே, எதற்காக அவருக்காக வாதாட வேண்டும்? இதுவே ராகவனுக்கும் சகோதரர் சீனிவாசனின் தொழிலுக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துகிறது. ராகவன் தனது சகோதரரின் அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.
kdr election
2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மாபாரும் மக்கள் ‘திரளிடையே’ பிரச்சாரம் செய்கிறார் கே.டி.ராகவன்.
வெளிவந்தது ஒரு நிறுவனமும், சிறு துளியும் தான். எஸ்.வி சேகரின் அந்தப் பதிவிலேயே சில பா.ஜ.கவினர் இரு ‘தலைவர்களுக்கும்’ சமாதானம் செய்துவைத்து தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது கட்சித் தலைகள் விட்டுவிடுவார்களா? அதுவும் இல.கணேசனின் ஆதரவு பெற்ற ஆர்.எஸ்.எஸ் அய்யங்கார் குடும்பத்தை விட்டுவிடுவார்களா? விசயம் அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.
கர்நாடகா ரெட்டி சகோதரர்கள் – எட்டியூரப்பா – லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, அதானி, அம்பானிக்கு உதவும் மோடி, வியாபம் ஊழல் புகழ் சிவராஜ் சிங் சவுகான் என்று தொடரும் வரிசையில் இன்னும் எத்தனை பா.ஜ.க. வினர் இருக்கிறார்கள் என்பதை எஸ்.வி.சேகர் போன்ற கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.
ராகவன் போன்ற இத்தகைய பா.ஜ.க கேடிகள் தான் கருப்புப் பணத்தைப் பற்றி தொலைக்காட்சி விவாதங்களில் மூச்சு முட்ட கதறுகின்றனர் என்றால், மோடியின் கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் யோக்கியதையை அறிந்து கொள்ளுங்கள்.
– வினவு புலனாய்வு செய்தியாளர் குழு.
ஆதாரங்கள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக