வெள்ளி, 4 நவம்பர், 2016

வேலூர் காட்பாடி 2 ரெயில்களில் கத்தி முனையில் கொள்ளை .. 5 பேரிடம் 15 பவுன் நகை பறிப்பு... சிக்னலை உடைத்து ரெயிலை நிறுத்தி ...

காட்பாடி அருகே ரெயில்களை நிறுத்தி ஒரே நாளில் 2 ரெயில்களில்,
பயணிகளிடம் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிக்னலை உடைத்து ரெயிலை நிறுத்தி மர்ம கும்பல் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது.  கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாப்ராபேட்டை வெங்கடேசபுரம் என்ற இடத்தில் சிக்னல் கிடைக்காததால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது  அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெயில் பெட்டியின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகளிடம் ஒரு கும்பல் ஜன்னல் வழியாக நகையை பறித்து சென்றுள்ளது. 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் 13 பவுன் நகையை பறித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் தில்லை நகரை சேர்ந்த ஸ்ரீகாந்திடம் 4 பவுன் நகை, சுப்பிரமணியிடம் 3 பவுன் நகை, குரோம்பேட்டையை சேர்ந்த கீதாவிடம் 4 பவுன் நகை, மற்றும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த அருணாதேவியிடம் 2 பவுன் நகை என மொத்தம் 13 பவுன் நகையை கொள்ளை கும்பல் பறித்து சென்றனர்.

மற்றொரு ரெயிலில்...

அதேபோன்று மைசூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த சிறப்பு ரெயிலில் பயணம் செய்த மயிலாப்பூரை சேர்ந்த ஹரிணி என்ற பெண்ணிடம் காட்பாடி அருகே ரெயில் நின்றபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை கொள்ளை கும்பல் பறித்து சென்றுள்ளது.

கொள்ளையர்கள் நகையை பறித்ததும் நகையை பறிகொடுத்தவர்கள் கூச்சல் போட்டனர். அதற்குள் கொள்ளைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அதன் பின்னர் ரெயில்கள் புறப்பட்டு சென்றது.

போலீசில் புகார்

நகையை பறிகொடுத்த அனைவரும் சென்னை சென்டிரல் சென்றடைந்ததும் இதுபற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து கோட்ட ரெயில்வே முதுநிலை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரப் கொள்ளை நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

சிக்னல் போர்டு உடைப்பு

கொள்ளை நடந்த இடத்திற்கு முன்பு சிறிது தூரத்தில் உள்ள சிக்னல் போர்டு உடைக்கப்பட்டுள்ளது. எனவே, கொள்ளையர்கள் சிக்னல் போர்டை உடைத்து விட்டு ரெயில் என்ஜின் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி ரெயிலை நிறுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.தினத்தந்தி,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக