புதன், 30 நவம்பர், 2016

19 வயது மாணவன் அபிஷேக் கைது ! பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்தியதால் பாஜக அரசு !

abhishekமோடி அரசின் பண மதிப்பிழப்பு(demonetization) நடவடிக்கையை விமர்சித்து பதிவிட்டதற்காக மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது மத்திய பிரதேச பா.ஜ.க அரசு.  அபிஷேக் மிஸ்ரா என்ற அந்த 19 வயது மாணவர் மத்தியபிரதேச மாநிலம் சத்தர்ப்பூரைச் சேர்ந்தவர்.
அபிஷேக் மிஸ்ரா
பல சமூக பொருளாதார விசயங்களைக் குறித்து தனது வலைதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் அபிஷேக். மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் அபிஷேக். அவரது யூடியூப் தளம் சுமார் 85,000-த்திற்கும் மேற்பட்டோரால் பின் தொடரப்படுகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபிறகு மக்கள் பணமில்லாமல் தவித்தவேளையில் மத்தியபிரதேச பா.ஜ.க தலைவர் ஒருவரின் காரிலிருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியிருக்கிறது. அது குறித்து தனது கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார் மாணவர் அபிஷேக்.

இப்பின்னணியில்தான் கடந்த 11.11.2016-ம் தேதி மத்தியபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் இம்மாணவர். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 469 (நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66C  (மற்றவர்களது ஆன்லைன் அடையாளத்தை முறைகேடாக பயன்படுத்தியது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவரது சமூக வலைதள பதிவுகளை நீக்கியுள்ளது அரசு.
இக்கைது குறித்து போபால் நகர சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிகாந்த் தேகரியா கூறுகையில் “அபிஷேக் ஒரு வலைதளத்தை நடத்துகிறார். முதலமைச்சர் மற்றும் பிற முக்கியமான மரியாதைக்குரியவர்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவரை கைது செய்துள்ளதோடு அவரது வலைதளத்தை முடக்கியுள்ளோம். அவரது முகநூல் பதிவுகளையும் நீக்கியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவரின் வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா கூறுகையில், “ பா.ஜ.க தலைவர் ஒருவரின் காரிலிருந்து பணம் கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாகியிருந்த நாளிதழ் செய்தியை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் மாணவர் அபிஷேக். சம்பந்தப்பட்ட பா.ஜ.க தலைவருக்கு பதிலாக முதல்வர் சவுகானின் புகைப்படத்தை பயன்படுத்தியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்கிறார்.
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து பதிவிடுவது கிரிமினல் குற்றம் என அரசியல் சட்டம் 144-ஐ பயன்படுத்தி அறிவித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில இந்தூர் மாவட்ட ஆட்சியர். கடந்த நவமபர் 14-அன்று அவர் வெளியிட்டுள்ள அரசு குறிப்பில் “மோடி அரசின் ரூ.500,ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களிலோ, குறுஞ்செய்திகளிலோ அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பதிவிடுவது கிரிமினல் குற்றம்” என அறிவித்திருக்கிறார்.
இதுபோன்ற ஆட்சேபத்திற்குரிய பதிவுகளினால் பொதுசொத்துக்கும், உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது இவ்வறிவிப்பு. மேலும் “இது போன்ற பதிவுகளால் வரும் நாட்களில் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் இது தடைவிதிப்பது அவசியமாகிறது” என்கிறது ஆட்சியரின் உத்தரவு.
இவ்வுத்தரவு 2017-ஜனவரி வரை பொருந்தும் என்றும் இதை மீறுவோர் ஒரு மாதம் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
பால் தாக்கரேவை விமர்சனம் செய்ததற்காக மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களுக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A –ஐ செல்லாது என்று 2015-மார்ச் மாதம் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆயினும் அதற்கு பிறகும் இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதும் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து வருகிறது. தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரப்படி 2015-ம் ஆண்டு மட்டும் 4154 புதிய வழக்குகளும், 3137 கைதுகளும் இச்சட்டபடி நடந்திருக்கிறது.
தற்போதைய கைதுகளும் அறிவிப்புகளும் இ.த.ச 66A என்பதற்கு பதிலாக வேறு பெயர்களில் அதே ஆள்தூக்கி சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதைதான் காட்டுகிறது.
டி.வி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் மோடியை ஆதரிப்பதாகவும், மோடி நடத்திய கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் வரவேற்றார்கள் எனவும் பேசுகிறார்கள். அரசும் இதைதான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறது. ஆனால் இந்த அரசு மக்களை கண்டு எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இக்கைதுகளும் அறிவிப்புக்களுமே சான்று.  வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக