சனி, 1 அக்டோபர், 2016

France தமிழச்சி மீது முதல்வர் வதந்தி வழக்கு.. ராம்குமார் , சுவாதி கொலையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்தவர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில்
தவறான கருத்துகளைப் பதிவு செய்த பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெண் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா குணம் பெற்று வருவதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தொடர் செய்திக்குறிப்புகளில்  தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை   பிரான்சில் வாழும் தமிழச்சி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர் ஏற்கனவே சுவாதி, ராம்குமார் விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு கருத்துக்களை பதிவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் உடல்நிலை குறித்து அவர் பதிவு செய்திருந்த கருத்துக்கள் வேகமாய் பரவியது. இதன் அடிப்படையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழச்சியின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை காவல்துறையினர் தன மீது பதிவு செய்துள்ள வழக்கை வரவேற்பதாக தமிழச்சி முகநூலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 'சென்னை காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை  வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் காவல்துறையினர் மேற்கொள்ள உள்ள விசாரணைக்கு காத்திருப்பேன். தகுந்த உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே  இந்த சந்தர்பத்தை கருதுகிறேன்'ம் என்று பதிவு செய்துள்ளார்.  தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக