சனி, 8 அக்டோபர், 2016

தறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் !

குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் விளக்கப்படம்நான் ஏழு வயசுல நெசவு தொழிலுக்கு வந்தேன். இந்த ஊருக்குள்ள தொழில்ல என்ன அடிச்சுக்க யாராலும் முடியாது. நூலுக்கு பாவு போட்றதுல இருந்து தறியில உள்ள ஆசாரி வேலை மொதக்கொண்டு நானே பாத்துருவேன். தறி சத்தத்த கேட்டே எந்த எடத்துல பிரச்சனையின்னு சொல்லிருவேன். இருந்தாலும் இந்த தொழில நம்பி நிதமும் வயிறார சாப்பிட முடியுமான்னா முடியாது. பல நாள் பட்டினி கெடந்த அனுபவமெல்லாம் உண்டு. சொந்தமா தறி வச்சுருக்கேன். ஆனா சக்திக்கு மீறி கடனாளியா இருக்கேன்.”
இரண்டு தலைமுறை நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் 32 வயதான குமார். பல வருடங்கள் கூலி நெசவுக்கு போனவர் தற்போது சொந்த தறியில் நெய்கிறார். கூட்டுறவு சங்கதில் உறுப்பினராக இல்லையென்றாலும் அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்காக நெசவு நெய்கிறார். ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் தறியே பெரும் இடத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. தறி ஓசையை தாலாட்டாக கேட்டு வளரும் குழந்தைகளுக்கு படுக்குமிடமே அறையின் பாதையாக இருக்கும் இடம்தான்.
“இது போல எத்தன நாளைக்கி பட்டினி கெடக்க முடியும். பல பேர் நெசவ விட்டுட்டு சமையல் மாஸ்டர், சப்ளையருன்னு வேற வேலைக்கி போறாங்க. எத்தன கஸ்டம் வந்தாலும் என்னால போக முடியல. இந்த தொழில  நேசிக்கிறேன். புடவை நெய்யும் பேது ஒரு புள்ளி மாத்தி வந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது அம்மா.”

குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் – மாதிரிப் படம்
“மனைவி உழைப்பையும் சேத்துதான் என்னால இந்த தொழில உயிரோட வச்சுருக்க முடியுது. மத்த வேலைகளப் போல இல்ல நெசவு. தறி குழிக்குள்ள எறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும். ஒரு நூல் இழை மாறாம கண்ணு பாக்கணும். தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும். குழந்தையப் போல தறியில கையி துறுதுறுன்னு விளையாடணும். நெய்யும் போது மேல் வேலைக்கி உதவியாளர வாய் கூப்பிட்டுட்டே இருக்கனும். தறியின் வாசத்தை மூக்கு சுவாசிச்சுட்டே இருக்கனும். இது மட்டும் இருந்தா பத்தாது கலை ரசனையும் வேணும்.”
“தறி நெய்றத விட அதுக்கு மேல் வேலைதான் அதிகம் செய்யனும். என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் தறியில ஒரு நூல் அறுந்துட்டா ஒடனே ஓடி வந்து எடுத்து தருவா என் மனைவி. இருந்தும் என் முன் கோபத்துல எத்தனையோ தடவ அவள நான் திட்டியிருக்கேன்.”
இடையில் புகுந்தார் மனைவி அஞ்சலி. “நூல் பாவு போட மேல் ஆள் வச்சுக்க முடியாம நாங்க ரெண்டே பேருதான் போடுவோம். எத்தன தடவ சொல்லிக் கொடுத்தாலும் ஏதாவது தவறு செஞ்சுருவேன். கூடவே வேலை பளு கடன் சுமை அதனால கொஞ்சம் கத்துவாரு. ஒரு பட்டுப் புடவை உருவாகனுன்னா மொத்த குடும்பமும் பாடுபடனும். என்னால முடிஞ்சத செய்வேன்.”
“எங்க வீட்டுக்காரரு தறி அறுக்கும் போது கொஞ்சம் குடிப்பாரு. மத்தபடி எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இருந்தும் எங்களால கடன் இல்லாம இருக்க முடியல. சாண் ஏறுனா முழம் சறுக்குது. மழை காலத்துல நூல் இழையெல்லாம் ஈரப்பதமாயி தறி ஓடாது. வேலையும் சில நேரம் இருக்காது. வேலையை சேத்து செஞ்சு விட்ட இடத்தை நெரப்ப முடியாது. அதுக்கு உண்டான நேரத்த குடுத்து ஒவ்வொரு இழையாதான் பாத்து பாத்து நெஞ்சாகனும். அதுக்குள்ள வட்டியே கடன் தொகையை தாண்டிரும். சொந்த தறியில விடியவிடிய கூட நெய்யலாம். கூலிக்கு போறவங்க பாடு ரொம்ப மொசம்.”
பல ஆயிரங்களில் மின்னும் பட்டாடை
பல ஆயிரங்களில் மின்னும் பட்டாடை
“எங்க அப்பா நூல் தறி கைலி, பாய் நெய்வாரு. இவருதான் பட்டுத்தறி நெய்றவரு மாப்பிள்ளையின்னதும் பட்டு புடவை அவர் கையால நெஞ்சு தருவாறுன்னு எதிர்பாத்தேன். 5000 ரூபாய்க்கு வாங்கிதான் கொடுத்தாங்க. இனியாவது தருவாரான்னுஆசையா இருக்கு.” என்றார் ஏக்கம் கலந்த காதலுடன் தன் கணவனை பார்த்தபடி.
“எனக்கும் ஆசைதான். ஆனால் சத்தியமா என்னால முடியாது” என்றார் குமார்.
“என்னோட அஞ்சு வயசு பொண்ணுக்கு ஒரு பட்டு பாவாடை நெஞ்சு குடுக்கனுன்னு ஆசை. ஆனா கொழந்தை ஆசையா கேக்குற தீனியையே வாங்கி கொடுக்க முடியல. பட்டுல பாவாடையோ, சேலையோ நெய்ய அதுக்கான பொருள் வாங்க ஆயிரக் கணக்குல மொத்தமா அத்தன பணத்துக்கு நான் எங்க போக. சொன்னா நம்ப மாட்டிங்க. எங்க கல்யாணத்துக்கு எடுத்த அந்த ஒரு பட்டுப் புடவையையும் தாங்காத வறுமைக்கி வித்து சாப்பிட்டோம்.”
“இந்த வருசம் (2016) வந்த மழை வெள்ளத்துக்கு யார் வீட்டுலயும் தறி ஓடல. ரெண்டு மாசம் முடங்கி போச்சு. பத்து வருசமா வேலை செஞ்ச முதலாளிக்கிட்ட போயி குடும்பமே பசி பட்டினியா இருக்குது ஏதாவது உதவி செய்ங்கன்னு கேட்டதுக்கு ஏங்கிட்டயா நீ வேலை செய்றன்னு அவமான படுத்திட்டு 500 பணம் கொடுத்தாரு. எங்க கஷ்ட காலம் வாங்கிக்க வேண்டிய நெலமை.”
“சொந்தமா தறி வச்சுருந்தாலும் கூலிக்கு வேலைக்கி போனாலும் தறியில உக்கார்ர எங்க வீட்டு அடுப்பு பல நாள் அணைஞ்சுரும். ஆனா அதை விக்கிற முதலாளிங்க கார், பங்களான்னு பளபளப்பா இருக்கானுங்க. அவனோட பந்தாவுக்கும் பவுசுக்கும் நாமதான் காரணம்னு தெரியுது. என்ன செய்ய முடியும். காசு அவங்கிட்டதானே இருக்கு கை நீட்டி கடன் வாங்கிதான் ஆகனும். அவன் சொல்றத கேட்டு அடிமையா வேலை செஞ்சுதான் ஆகனும்.”
“கூட்டுறவு சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விசைத் தறி மோட்டார் கொடுக்குறாதா சொல்றாங்க. நெசவாளர் குடும்பத்துக்கு 200 யூனிட் கரண்ட் இலவசம்னாங்க. கரண்டாபீசுக்கும் வீட்டுக்கும் அலஞ்சு பாத்துட்டேன் கெடைக்க மாட்டேங்குது. எதுவும் ஒழுங்கா உரியவனுக்கு போய் சேர்ரது இல்ல.”
“அவ்வளவு ஏன்! இந்த மாசம் தேசிய கைத்தறி நெசவாளர் சிறப்பு விருது கொடுத்தானுங்க. அங்கையும் அரசியலுதான். ஆளுங்கச்சிய சேந்த கட்சிக்காரங்க அவங்களுக்கு வேண்டிய கூட்டுறவு சங்கத்த சேந்த அம்மாவுக்கு மோடி கையால விருது வாங்கி கொடுத்தானுங்க. அந்தம்மா என்னமோ தறி குழிக்குள்ள உக்காந்து நெஞ்சாமாதிரி. அதுக்கு ஒரு பாராட்டு விழா காஞ்சிபுரத்துல வச்சானுங்க. எவ்வளோ ஏக்கத்தோட போனோம் தெரியுமா? நமக்கு பரிசு குடுக்க வேண்டாம். ஒரு துண்டு போட்டு பாராட்டி ஊக்குவிக்கலாம்.” என்றார்.
அடுத்து, சோமசேகரன் என்ற 70 வயது நூல் தறி நெசவாளரை பார்க்க அவர் வீட்டுக்கு போனோம். தறியும் நடைபாதையும் கொண்ட சின்ன அறையில் கையை தூக்கினாலே இடிக்கும் அஸ்பெட்டாஸ் கூறைக்கு கீழே கைலி நெய்து கொண்டிருந்தார் அந்த பெரியவர். தறிக்குள் போகவோ வெளியே வரவோ முடியாத இட நெருக்கடிக்குள் இருந்தது அறையின் அமைப்பு. அவரை நெருங்கி பேசலாம் என அருகில் போன நான் அதிர்ந்து விட்டேன்.
லுங்கி நெசவுத் தொழிலாளி விளக்கப்படம்
லுங்கி நெய்யும் நெசவுத் தொழிலாளி – மாதிரிப்படம்
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது. முறையாக வேலை இருந்தால் ஒரு நாளைக்கி 80, 100 ரூபாய் கூலி கிடைக்குமாம். இத்தனை வயது உழைப்பில் பிள்ளைகளுக்கு உரிய வயதில் முறையான திருமணம் கூட செய்து கொடுக்க முடியாதவராய் வயித்து பாட்டுக்கு தறி தொழிலோடு போராடுகிறார்.
“ஒரு கைலி நெய்ய மூனு நாள் ஆகும். வீட்டம்மா பரூடத்துல நூல் ஏத்தி திரிச்சு தருவாங்க. நெய்ய தேவையான பொருள் செலவு போக ஒரு கைலிக்கி 250, 300 கெடைக்கும். கைலியின் அளவை பொருத்து 400 முதல் 600 வரை குடுப்போம். தறி தொழிலே அழிஞ்சு போச்சு. இந்த வயசுல வேற வேலைக்கு போக முடியாது. என்ன செய்றதுன்னு தெரியல போயிட்டு இருக்கு பொழப்பு.”
“அச்சு மரம் பிடித்த கை இன்னைக்கி சாம்பார் வாளி பிடிக்குது” என்றார் நெசவுத் தொழிலைக் கைவிட்ட மூர்த்தி.
“எந்தங்கச்சி தறி மிதிப்பா, நூல் இழைப்பா, நெசவுல எல்லா வேலையும் தெரியும். நொடிஞ்சுப் போன இந்த தொழிலாலும், குடிகார புருசனாலும் பிள்ளைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு ஒழுங்க போட முடியல. தறி நூலைக் கூட அடகு வச்சுட்டு குடிக்கிறான் அவ புருசன். இப்ப ஓட்டல்ல பாத்திரம் கழுவுற வேலைக்கி போறா. எந்த நேரமும் தண்ணியில ஊறி கையும், காலும் பொணம் போல இருக்கு. கால் நரம்பு சுருட்டு நோய் எந்தங்கச்சி உட்பட பல பெண்களுக்கு தொழில் சார்ந்த நோயாவே இருக்கு.”
“முக்கியமா மூகூர்த்த வேலைக்கி நெசவாளிங்க போறதே வயிரற சாப்பிட்டு மிச்சம் மீதி இருந்தா வீட்டுக்கு பொண்டாட்டி பிள்ளைக்கி எடுத்துட்டு வரலான்னுதான். கல்யாண வீட்டுல போட்ற பலகாரமெல்லாம் இந்த வீட்டு பிள்ளைங்க கண்ணுல கூட பாத்துருக்காது. புதையல் வருமான்னு எதிர் பார்க்கும் மன நிலையில குழந்தைங்க பெத்தவங்கள பலகாரத்துக்காக எதிர் பார்ப்பாங்க. எல்லாத்த விட கொடுமையான விசயம் அன்னதான சாப்பாட்டுக்கு கோயில்ல காத்துருப்பதும், வயசானவங்க கடைத்தெருவுல செலவுக்கு கை நீட்டுறதும் பாக்க முடியலிங்க.”
உழைக்கிற வரைக்கும் கூடவே இருந்த தன்மானம் உழைப்பை பிடுங்கிய பிறகு பறி போய் விட்டது. மன்னர் காலம் முதல் முதலாளி காலம் வரை கௌரவத்தின் அடையாளமாக பட்டு நெய்து கொடுத்த நெசவாளர்களின் வாழ்க்கை நைந்து போன கந்தல் துணியாக உள்ளது.
பட்டுக்கு பெயர் போன காஞ்சியில் தான் பல்லவர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் உள்ளன. கோயில் கட்டுமானமும், கலை நுட்பமும் நம் கண்ணை கவரும் நேரம், அதில் ஈடுபட்டோரின் உழைப்பின் வலியும் உயிர் பலியும் நாம் அறியோம். அப்படிதான் பளபளக்கும் பட்டுக்கு பின்னே நைந்து கிடக்கிறது நெசவாளர்களின் வாழ்க்கை.
குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாக திரிந்த மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் உடையும் முக்கியமானது. அதனால்தான் உழவும், நெசவும் எல்லா நாடுகளிலும் அந்தக் காலத்தில் முக்கியமான தொழில்களாக இருந்தன. உழவன் ஏர் பிடித்தான். நெசவாளன் தறி பிடித்தான். ஆண்டிகளின் கோவணமானாலும், அரசனின் பட்டாடையானாலும் அடிப்படையில் மனிதனின் மானம் காக்கும் மகத்தான தொழிலாக நெசவு இருக்கிறது. இன்றைக்கு நெசவை பெரும் எந்திரங்களும், ஆலைகளும் செய்து வந்தாலும் கையால் நெய்யப்படும் தறிகளே அவற்றின் தோற்றம். அந்த நெசவாளர்களோடு ஒரு நாள் செலவழித்த போது உடைகளின் கதை புரிந்தது. நெய்பவர்களின் வியர்வை தெரிந்தது.
தமிழகத்தில் மற்ற பகுதி மக்களை விட பொருளாதாரத்தில் இத்தகைய கைத்தறி நெசவாளர்கள் மிகவும் வறிய நிலையில் காலம் தள்ளுகிறார்கள். சோத்துக் கஞ்சியே அவர்களது வீட்டில் ஆடம்பர உணவு. கோழித் தலையும், காலும் அவர்களுக்கு அசைவ விருந்து. தி நகர் கடைகளில் பட்டுச் சேலைகளை விதவிதமான தேடி எடுக்கும் கைகள் அந்த பட்டின் பின்னே வழியும் ரத்தத்தை ஒரு போதும் அறியாது.
பட்டு நெய்யும் தொழிலாளிகளுக்கு நைந்து போன கைலிதான் உடை! இத்தகைய சர்வ வறுமை வாழ்க்கை இல்லாமல் சர்வ இலட்சணப் பட்டு இல்லை!
– சரசம்மா   வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக