ஞாயிறு, 30 அக்டோபர், 2016

திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் பதவி ? பாஜக தூண்டில்!

மின்னம்பலம்.காம்: திருமாவை பாஜக கூட்டணி பக்கம் இழுக்க, பாஜக முயன்று வருகிறது. திருமா மக்கள் நலக் கூட்டணியில் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இக்கவலை இன்று வரை அவரிடம் இருக்கும் நிலையில், கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொல்.திருமாவளவனைச் சந்தித்துப் பேசினார். சென்னை கே.கே.நகரில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது. இச்சந்திப்பின் பின்னர் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நட்பு ரீதியாக மட்டுமே திருமாவளவனைச் சந்திக்க வந்தேன்.
எங்ளுடைய நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு தமிழன் என்ற முறையிலும், சகோதரன் என்ற முறையிலும் எங்களது நட்பு நீடித்து வருகிறது. தற்போதைய இடைத்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அவர் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறார். அதுதொடர்பாக அவரது கூட்டணி கட்சியினரோடு இணைந்து அவர் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. காவிரி பிரச்சனை, ரயில் மறியல் போராட்டங்கள் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. நட்புரீதியான சந்திப்பாக மட்டுமே இது அமைந்துள்ளது” என்றார்.
ஆனால், அந்தச் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மோடியின் சார்பாகதான் திருமாவளவனைச் சந்தித்தார். எப்படியாவது திருமாவை, பாஜக கூட்டணியில் சேர்த்தால் தமிழகத்தில் உள்ள தலித் மக்களிடம் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று கருதும் மோடிதான் திருமாவிடம் பேசும்படி பொன்.ராதாவை அனுப்பியிருக்கிறார். பரவலாக தலித் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளதோடு, அரசியலில் நல்ல முகமாகவும் இருக்கும் திருமாவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘நீங்கள் விரும்பினால் உங்களை பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கவும் தயார்’ என்று தூண்டில் போட்டிருக்கிறார். இந்தச் சந்திப்பு நடந்த பின்னர் தன்னுடைய நலன் விரும்பிகளிடமும், முக்கிய நிர்வாகிகளிடமும் இது பற்றி திருமா விவாதித்திருக்கிறார். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடங்கிய நாளில் இருந்து மதவாத எதிர்ப்பை அதன் அடிப்படை அலகாக வைத்திருக்கும் திருமாவளவன், இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக