சனி, 22 அக்டோபர், 2016

சேலம் உருக்காலை- நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் (ஜிண்டால்) முட்டாள்களா?

thetimestamil.com : சந்திர மோகன் சந்திர மோகன்4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும்.
1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். “இரும்பாலை வருகிறது , வேலை கிடைக்கும், வாழ்க்கை வளமாகும் ” என ஏழை விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.3000, 5000 எனக் கொடுத்து உருவான நிறுவனம். ஒருங்கிணைந்த உருக்காலையாக (Integarated Steeel Plant) உருவாகாமல் இருந்த போதும், 1980 லிருந்து 2010 வரைக்கும், உருட்டாலையாக இலாபகரமான நிலையில் தான் செயல்பட்டு வந்தது.

ஜிண்டால் எழுச்சி!
இந் நிலைமையில்,  ஜிண்டால் குழுமம் எஃகு உற்பத்தியில் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உருவெடுத்தது. சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. மேட்டூர் அருகே பொட்டனேரியில் செயல்பட்ட LMW நிறுவனத்தின் இரும்பாலையை வாங்கியது. சேலம் உருக்காலையை கபளீகரம் செய்வதற்கு தொடர் முயற்சி செய்தது. சேலம் உருக்காலை என்பது உருவாகக் காரணமாக இருந்த இரும்புத் தாது வளம் மிக்க கஞ்சமலையை வளைத்து போட தமிழக அரசாங்கம் மூலம் , TIMCO என்ற பெயரில் மறைமுகமாக முயற்சித்தது. விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கியது.
இருந்த போதிலும், 2009 ல், பிரதமர் அலுவலகம் வாயிலாக, நலிவுற்ற ஆலை என முத்திரைக் குத்தி தனியாருக்கு விற்க ஒப்பந்தப் புள்ளி கோரிய பொழுது, ஜிந்தால் முன்னிலையில் இருந்தது.
தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசாங்கம், SAIL பின்வாங்கியது. மீண்டும் மோடி அரசாங்கம் வந்த பிறகு, 2016 ல், பிரதமர் அலுவலகத்தில் விற்பதற்கான சதித் திட்டம் போடப்பட்டு விட்டது. 2010 ல் விரிவாக்கம் செய்வதற்கு தரப்பட்ட ரூ.2300 கோடி முதலீட்டிற்கான வட்டிப் பிரச்சினையை காரணம் காட்டி விற்பனை செய்வதற்கான காரணத்தை சொல்கிறது. வெறும் 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து விட்டது. இலட்சம் இலட்சம் கோடி ரூபாய்களை வங்கிகளின் Non performing Assets களாக, பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் வைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் தான் ரூ.2300 கோடி கடன், வட்டி பிரச்சினை என்று விற்பதற்கான காரணம் சொல்கிறது.
நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?
மோடியின் அலுவலகம் பொய் சொல்ல…. பல கணக்குகள் ஜிந்தால் குழுமம் போட்டுக் கொண்டு இருக்கிறது. எல்லாம் அருமையான லாபக் கணக்கு. அயோக்கியத்தனமான ஊழல்படிந்த செயில் உயர் அதிகாரிகள், மற்றும் பாரதிய ஜனதா/ மோடி அரசாங்கத்திற்கும் தெரிந்த கணக்கு தான்.
1)உருக்காலையில் பயன்படுத்தப்படாத நிலம் 2500 ஏக்கரை விற்றாலே ரூ.10,000 கோடி வரை கிடைக்கும். ஆலையின் உள்ளே
நூற்றுக்கணக்கான ஏக்கரில் வளர்ந்துள்ள அரிய மரங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்கின்றனர்.
2)புதிதாக 2010 ல், போடப்பட்ட சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள Steel Smelting Shop, Annealing & Pickling Plant போன்றவற்றை அருகாமையில் உள்ள அவர்களது, பொட்டனேரி JSW இரும்பாலைக்கு கொண்டு சென்று விடலாம்.
3) “சேலம் ஸ்டெயின்லெஸ்” என்ற பிராண்டை ஒழித்துக் கட்டி, எல்லாம் “ஜிண்டால்” Jindal என எஃகு சந்தையில் கொடிக் கட்டிப் பறக்கலாம்.
4)ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் இரும்பு கனிமங்கள் கொண்ட “கஞ்ச மலை” யை மீண்டும் கைப்பற்றி விடலாம்.
5) கையிலிருந்து பணம் ஜிந்தால் தர வேண்டியதில்லை. இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளிடம் மொத்த பணத்தையும் கடனாகவே வாங்கிக் கொடுத்து விடலாம்.
ஒருவேளை தற்போதைய நிறுவனத்திற்கு போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை எனில்…
கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு ஓடிவிடலாம்.
சேலம் உருக்காலையைப் பாதுகாக்க என்ன செய்திருக்க வேண்டும்?
1)ஆலையின் வளாகத்திற்குள், புதிய தொழிற்சாலைகள் வேண்டும். 2008 ல் அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பரப்பளவில் SEZ சிறப்பு பொருளாதார மண்டலம், ரெயில்வே வேகன் தொழிற்சாலை, மின் நிலையம் Captive Power Plant ஏன் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
எஃகு தகடுகளை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஏன் திட்டமிடப்படவில்லை.
2) சேலம் உருக்காலைத் தயாரித்த தகடுகளை கூடுதலாக விற்பதற்கான உத்தரவாதமானச் சந்தையை ஏன் உருவாக்கவில்லை ?
3) உலக இரும்பு சந்தை தேக்கத்தில் இருக்கும் பொழுது, ஜப்பான், தெ.கொரியா, சீனாவில் இருந்து எதற்கு கிட்டத்தட்ட 55 % இறக்குமதி? இறக்குமதியாகும் இரும்புக்கு வரிகளைக் கூட்டலாமே!
4)சேலம் இரும்பாலைக்கு வாங்கும் கச்சாப் பொருட்கள், விற்பனை செய்யப்படும் எஃகு தகடுகளுக்கு விதிக்கப்படும் வரிகளை கணிசமாகக் குறைக்கலாமே!
தேவை என்ன?
மாநில அரசு அரசியல் உறுதியுடன் தலையிட வேண்டும்!
நிதியுதவி தர வேண்டும்!
புதிய தொழிற்பேட்டைகளுக்கு திட்டங்கள் தீட்ட வேண்டும்.
மக்கள் கடமை :
முன் எப்போதையும் விட, அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்ட களத்தில் ஒற்றுமையுடன் குதித்துள்ளன. டிசம்பர் 20 சேலம் தர்ணா போராட்டம் தொழிலாளர்களின் எழுச்சியைக் காண்பித்தது. போராட்டம் விரிவாக வேண்டும். போராட்ட தயாரிப்புகளுக்கான தோழர்களின் கடமை அதிகரிக்கிறது.
சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக