புதன், 5 அக்டோபர், 2016

முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது முழுமையில்லாத அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் சென்று பார்த்த நிலையில் அவர்களும் முழுமையாக தகவல்களை வெளியிடவில்லை.

மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் பல்வேறு இடங்களில் கடையடைப்பும் நடத்தப்படுகிறது. முதலமைச்சரின் புகைப்படங்களை வெளியிட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து கொண்டே பணிகளை கவனிப்பதாகக் கூறப்பட்டாலும் அது தொடர்பான உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

காவிரி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் யார் முடிவெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இது தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு டிராபிக் ராமசாமி இன்று மீண்டும் முறையீடு செய்தார்.

வழக்கு பட்டியலிட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறிய நீதிபதிகள், மனு மீது தமிழக அரசு கருத்துத் தெரிவிக்காமல் எப்படி விசாரணை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர். எனவே, மனு மீது தமிழக அரசு கருத்துத் தெரிவித்த பிறகு, நாளை மறுநாள் பரிசீலித்து, மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்யப்படும் என்றனர். மேலும், அரசு அதிகாரிகளின் கருத்தை அறிந்து தெரிவிக்க அரசு வழக்கறிஞரிடம் கூறினர்.

தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. இருந்தாலும் அரசின் நிர்வாகத்தை கவனித்து வரும் அவரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக