வெள்ளி, 14 அக்டோபர், 2016

மிஸ்டர் கழுகு : பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? - ‘கப்சா’ கவர்னர்

பன்னீர்செல்வம் பழைய பன்னீர்​செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்​களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே  ஆஜரானார் கழுகார் ‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர்,  இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார். ‘‘எப்படி நடந்தது இது?”
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் சர்ச்சை குறித்துப் பேசப்பட்டது. ‘அரசாங்கம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. முதல்வர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை மூத்த அமைச்சர் யாராவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை எடுத்துக்​கொள்ளுங்கள். அப்படி எடுத்துக் கொண்டால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்’ என்று வலியுறுத்தினார்.
ஆனால், அதற்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஒப்புக்​கொள்ளவில்லை. ‘அம்மா விரைவில் குணமடைந்து வந்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டனர். இதை நான் முன்பே உமக்குச் சொல்லி இருந்தேன். தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும், ‘தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. நிறைய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் முடங்கிப்போய் உள்ளது’ என்று அறிக்கைவிடுத்து கவர்னருக்கு அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்து வந்தனர். துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் என்ற கோஷங்கள் தமிழகம் முழுவதும் ஒலித்தன. தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை 11-ம் தேதி காலை வெளியானது. அன்று மாலையே கவர்னர், ஓ.பி.எஸ்-ஸிடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை ஒப்படைத்தார். இந்த ஒரு நடவடிக்கை மூலம் இரண்டு காரியங்களைச் சாதிக்கப்பட்டுள்ளன. ஒன்று தற்காலிகமாக எதிர்க் கட்சிகளின் வாயை அடைத்தது. இரண்டாவது, ஜெயலலிதா குணம் அடைந்து வீடு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.”

‘‘ம்!”

‘‘இப்படி பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க​லாம் என்று சொல்வதற்கு முதலமைச்சரின் ஒப்புதல் தேவை. ஜெயலலிதாவின் துறைகளை, பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையிலும், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு, அவர் கவனித்துவந்த துறைகளை ஓ.பன்னீர்​செல்வத்திடம் ஒப்படைக்​கிறோம்’ என்று குறிப்பிடப்​பட்டுள்ளது. இது அடுத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டது. உண்மையில் இதற்கு ஜெயலலிதா சம்மதித்தார் என்றால் அவர் யாரிடம் சொன்னார்?... எழுத்து மூலமாக அனுமதித்தாரா?... கவர்னரிடம் சொன்னாரா?... என்றெல்லாம் சர்ச்சைகள் உருவாகிவிட்டன. ‘ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்று கருணாநிதி, ராமதாஸ் போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்​துள்ளார்கள்.”

‘‘இந்த சந்தேகத்துக்கு என்ன காரணம்?”
‘‘அப்போலோ வெளியிட்டுள்ள அறிக்கைகளின்​படி இதயம், நுரையீரல் ஆகிய மிகத் தீவிர பரிசோதனைகளில் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒருவரால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க இயலுமா என்பதே இவர்களது சந்தேகம்.”

‘‘ஓஹோ!”

‘‘ஓ.பி.எஸ் நியமனம் குறித்து மற்ற அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன?”

‘‘தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க. தவிர மற்றக் கட்சிகள் இதைப் பெரிதுபடுத்த​வில்லை. ஓ.பி.எஸ் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும், எதிர்க் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். மு.க.ஸ்டாலினும் கவர்னரின் நடவடிக்கையைப் பாராட்டியதோடு, பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துச் சொன்னார். ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி அதை ரசிக்கவில்லை. ‘இதை வரவேற்று ஸ்டாலின் ஏன் அவசரப்பட்டு அறிக்கை கொடுக்க வேண்டும்?” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். அதனால்தான், மறுநாள் காலை, அவர் மற்றொரு அறிக்கையைக் கொடுத்தார். அதில், ஓ.பி.எஸ்-ஸை விட்டுவிட்டார். ஆனால், கவர்னரை வறுத்து எடுத்திருந்தார். அந்த அறிக்கையில், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவை ராகுல் காந்தி முதல் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வரை யாருமே பார்க்கவில்லை. அப்படி இருக்கும்போது, முதலமைச்சரின் ஒப்புதலோடு என்று கவர்னர் குறிப்பிட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸும், ‘கைகளை அசைக்க​முடியாத நிலையில் உள்ள ஜெயலலிதா, எப்படி கவர்னருக்கு ஒப்புதல் கொடுத்தார்’ என்பதை கவர்னர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.”

‘‘கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இதிலும் கருத்து வேறுபாடு வந்துவிட்டதா?”
‘‘அவர்கள் இருவருக்கும் எதில்தான் பிரச்னை இல்லை? தனக்கு முன்னதாக ஸ்டாலின் அறிக்கை விட்டதை கருணாநிதி விரும்பவில்லை. அதேபோல் கவர்னர் எடுத்த நிலைப்பாடு சரியானதாக இருந்தாலும் அதனை கேள்வி எழுப்பி இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். தன்னை வந்து சந்தித்த துரைமுருகன், பொன்முடி ஆகியோரிடம் பொங்கிவிட்டாராம் கருணாநிதி. ‘அப்பாவுக்கும் மகனுக்கும் சமாதானம் பண்ணுவதே நம்மோட வேலையாப் போச்சு’ என்று அவர்கள் சலித்துக்​கொண்டார்​களாம்.”

‘‘பி.ஜே.பி-யின் காற்று அப்போலோ மருத்துவ​மனையின் பக்கம் அதிகமாக இருக்கிறதே?”

‘‘ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு, பி.ஜே.பி கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது. அத்துடன், ஜனாதிபதி ஆட்சி என்ற சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் இருந்தது. அதுவும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லாத கட்சிகளே அதைக் கடுமையாக எதிர்த்தன. இங்குள்ள நிலைமையை விளக்கி, தமிழக பி.ஜே.பி தலைவர்களும், கவர்னரும் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைமைக்கு அறிக்கை அனுப்பினர். அதையடுத்துத்தான், கொஞ்சம் இறங்கிப்​போனால்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-யின் நிலை சுமூகமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, கொஞ்சம் நிலைமையை சரிசெய்ய, வெங்கய்யநாயுடு 10-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். பிறகு, அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குப் போய், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவரிடம், ‘ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சூழலில், அதில் எந்தவித அரசியல் நெருக்கடியும் கொடுக்க வேண்டாம். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதைச் செய்து கொடுங்கள். அதுதான் தற்போதைக்கு பி.ஜே.பி-யின் முடிவு’ என்பதைத் தெளிவுபடுத்தினார்.”

‘‘அப்படியா?”

‘‘கவர்னர், ‘அரசியல் ரீதியாக எனக்கு எந்த அக்கரையும் இல்லை. நான் பார்வையாளன் மட்டும்தான்’ என்று தன்னை வந்து பார்த்த அரசியல் தலைவர்களிடம் சொல்லி இருக்கிறார் கவர்னர். ‘அவர் சொல்வது கப்சா. பி.ஜே.பி. மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர் சொல்கிறார்; செய்கிறார். அவர்கள் உத்தரவிட்ட பிறகுதான் ஜெயலலிதாவை பார்க்க வந்தார். அவர்களது கட்டளைப்படிதான் ஜெயலலிதா வகித்த துறைகளை பன்னீர்செல்வத்துக்கு கை மாற்றிக் கொடுக்கவும் செய்தார்’ என்று அரசியல் வட்டாரங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளன!”

‘‘பன்னீர்செல்வம் எப்படி இருக்கிறார்?”

‘‘முதல்வரின் துறைகளை கூடுதலாகப் பெற்றுள்ள பன்னீர்செல்வத்துக்கு வழங்க​ப்பட்டுள்ளது. 11-ம் தேதி இதற்கான ஆணை கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது. 12-ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று கோட்டையே வெறிச்சோடிக் கிடந்தது. அன்று மாலை 5.00 மணியளவில் கோட்டைக்கு வந்தார் பன்னீர்செல்வம். தனது அறைக்குச் சென்றவர், முக்கிய சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார். விடுமுறை தினம் என்றாலும், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் வந்திருந்தார்கள். ஐந்து நாட்கள் விடுமுறைக்குப் பிறகு 13-ம் தேதி அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தனர். அன்று அரசு ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அதனால், துறை ரீதியாக  அனைத்து அதிகாரிகளும் வந்திருந்தனர்.”

‘‘அமைச்சர்களுமா?”

‘‘முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்டது முதல், அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வருவதே குறைந்துவிட்டது. ஆனால், கடந்த வாரம் அமைச்சர்கள் அவரவர் பணிகளைக் கவனியுங்கள் என்று அப்போலோவில் இருந்த வந்த உத்தரவுக்குப் பிறகு, அமைச்சர்களின் தலைகள் தலைமைச் செயலகம் பக்கம் தெரிந்தன. கூடுதல் பொறுப்பை ஏற்றபிறகு 13-ம் தேதி காலை 11-15 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த பன்னீர்செல்வம் நேராக தனது அறைக்கு சென்று தனது துறையில் இருந்து வந்திருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்  தலைமைச் செயலாளர்  ராமமோகன் ராவ் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் கான்ஃபரன்ஸ் அறைக்குச் சென்றார் பன்னீர்செல்வம். அங்கு முக்கியத் துறையின் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.”

‘‘பரவாயில்லையே?”
‘‘இருபது நாட்களாகப் பல்வேறு பணிகள் தேக்க நிலையில் இருந்துள்ளன. அந்தப் பணிகளின் நிலைகள் குறித்து மூத்த அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். மேலும், துறைரீதியான ஆலோசனைகளும் நடைபெற்றன என்கிறார்கள்.சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் புறப்பட்டுவிட்டார். தினந்தோறும் காலையில் பன்னீர்செல்வம் கோட்டைக்கு வரும் முன் அப்போலோவுக்குச் சென்றுவிட்டுத்தான் வருவார். ஆனால், அன்று தனது வீட்டில் இருந்து நேராக கோட்டைக்கு வந்துவிட்டார்.”

‘‘13-ம் தேதி நீர் தலைமைச்செயலகம் போனபோது பிற அமைச்சர்கள் இருந்தார்களா?”

‘‘நிதி அமைச்சர் அறையே வெறிச்சோடித் தான் இருந்தது. செல்லூர் ராஜு, காமராஜ்,  வீரமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்கள் அறைகளில் இருந்தார்கள். அதிகாரிகள் வந்திருந்தார்கள். ஆனால் விடுமுறை நாளைப் போல தலைமைச் செயலகம் வெறுச்சோடிக் கிடந்தது. ஃபைல்கள் மூவ்மென்ட் குறைந்துவிட்டதால், அதிகாரிகள் பரபரப்பின்றி இருந்தனர். ஜெயலலிதா தலைமைச்செயலகம் வரும் காலங்களில் போலீஸ் படையே நிற்கும். இப்போது விரல்விட்டு என்னும் அளவில்தான் போலீஸார் கோட்டையில் வலம் வந்தனர். அமைச்சர்கள் பலர் இல்லாததால், கட்சியினர் யாரும் தலைமைச் செயலகத்தில் தென்படவில்லை. முதல்வர் தனிப்பிரிவு எப்போதும் பிஸியாக  இருக்கும் இடம், ஆனால், இப்போது அங்கும் ஒருவர்கூட மனுக்கொடுக்க வராமல், வெறுச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் தலைகள்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தென்பட்டன” என்று நிறுத்திய கழுகாரிடம் காங்கிரஸ் மேட்டரைக் கேட்டோம்.

‘‘சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளார் திருநாவுக்கரசர். 12-ம் தேதி, காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. மொத்தமுள்ள 61 மாவட்டத் தலைவர்களில் 2 பேர் மட்டும் ஆப்சன்ட். முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் வெளியூரில் இருப்பதால் வரவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.”

‘‘என்ன பேசினார்களாம்?”

‘‘உள்ளாட்சித் தேர்தல்தான் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு என்று நிறைய இடங்களை தி.மு.க-விடம் பேசி வாங்கி இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தி.மு.க-விடம் உட்கார்ந்து பேசி சீட் பெறுவதுபோல உள்ளாட்சித் தேர்தலுக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி பேசாமல் விட்டது அடிமட்ட தொண்டர்கள் வரையில் ‘டல்’ ஆக்கியுள்ளது. அதனால் கட்சி நடத்துவது கஷ்டமாக உள்ளது. மாவட்டத் தலைவருக்குத் தெரியாமல், சின்னம் ஒதுக்கத் தரப்படும்  ‘பி ஃபார்ம்’ கொடுக்கக் கூடாது. புதியதாகப் பொறுப்பாளர்கள் போடக்கூடாது. ஏன் எனில் மாவட்டத் தலைவருக்குத்​தான், வார்டுகளில் யார் கட்சிக்கு உழைத்தார்கள் என்பது முதல் யாருக்கு சீட் கொடுத்தால் ஜெயிப்பார்கள் என்பதுவரை தெரியும் என்று மாவட்டத் தலைவர்கள் கோரஸாகப் பேசினார்​களாம். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட திருநாவுக்கரசர், ‘யோசித்து செய்கிறேன். கூட்டணி குறித்து இப்போது பேசவேண்டாம். காவிரி பிரச்னைக்காக திருச்சியில் போராட்டம் இருக்கிறது. அதுகுறித்துப் பேசுவோம். ராகுல் காந்தியிடம் கேட்டு முடிவுசெய்வோம் என்று பதிலளித்தார். அதோடு, ‘கோட்டா சிஸ்டம்’ இருக்கக் கூடாது. கட்சியில் வேலை செய்பவர்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கவேண்டும், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கணும் என்று மாவட்டச் செயலாளர்கள் சொன்னதையும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்” என்று கூறினர்.

‘‘கூட்டணி பற்றி பேசினார்களா?”

‘‘அகில இந்திய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவுசெய்யும். உங்கள் கருத்துக்களை தலைமைக்குத் தெரிவிப்பேன். ராகுலுக்குத் தெரியாமல் ஒரு குண்டூசியைக் கூட தூக்கிப்போட மாட்டேன். உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இருக்கிறது. தி.மு.க கூறுவதையெல்லாம் கேட்கமுடியாது’ என்றாராம் திருநாவுக்கரசர்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘கடந்த வாரம் நவராத்திரி நாளில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உள்ள யானையை சென்னைக்குக் கூட்டிவந்துள்ளார்கள். அன்று இரவு கார்டனில் ஆறு மணிநேரம் மிகப் பெரிய யாகம் நடைபெற்றுள்ளது. அந்த யாகம் நடைபெற்றபோது சிறிது நேரம் சசிகலாவும் அங்கிருந்துள்ளார். யாகம் முடிந்தவுடன் தீர்த்தத்தை மருத்துவமனைக்கு எடுத்துவந்து ஜெயலலிதாவின் அறையில் தெளித்துள்ளார்​களாம்” என்றபடி பறந்தார் கழுகார்.  விகடன்.காம்
படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், அட்டை ஓவியம்: ஹாசிப்கான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக