திங்கள், 10 அக்டோபர், 2016

உபியில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி மாயாவதி அறிவிப்பு

லக்னோ உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து
போட்டியிடும் என்று மாயாவதி கூறினார். சட்டசபை தேர்தல் உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க ஆளும் சமாஜ்வாடி, பா.ஜனதா, காங்கிரஸ், முன்னாள் முதல்–மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய 4 கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராமின் 10–ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று லக்னோ நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு மாயாவதி பேசும்போது கூறியதாவது:– தனித்து போட்டி மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு, பசுவின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் வகுப்பு வாத சக்திகள் சிறுபான்மையினரையும், தலித்துகளையும் குறி வைத்து தாக்குகின்றனர்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும். இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதை மனதில் கொண்டுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பா.ஜனதா அரசு அனுமதி அளித்து உள்ளது. இதில் மோடி அரசு ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. வீணடிக்க கூடாது உத்தரபிரதேசத்தில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதற்காக தேர்தலுக்கு பின்பு, பா.ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று வதந்தி பரப்பப்படுகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. சிறுபான்மையினர், சமாஜ்வாடி கட்சிக்கோ அல்லது காங்கிரசுக்கோ வாக்களித்து தங்களுடைய ஓட்டுகளை வீணடித்து விடக்கூடாது. இந்த 2 கட்சிகளுக்கும் உத்தரபிரதேசத்தில் ஓட்டு வங்கி கிடையாது. மாறாக சண்டையிட்டு கொள்ளும் இந்த 2 கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வழி வகுத்துவிடும். எனவே உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க சிறுபான்மையினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக