புதன், 19 அக்டோபர், 2016

குமரி மாவட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவில் மரங்களை வெட்டி சூழலை அழிக்கும் லார்சன் அண்ட் டூர்போரோ நிறுவனம்

thetimestamil.com :குமரி மாவட்டத்தில் எல் &; டீ நிறுவனம் சூழலியல் அழிப்பில் ஈடுப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்தக் கொள்ளைக்குத் துணைப்போகிறாரா எனவும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தன து முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளவை:
குமரி மாவட்டம் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ விரிவுபடுத்தும் வேலையில் L & T Pvt Ltd. எனும் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அதே நேரம் 180 அடி வரை அகலமுள்ள ஒரு புதிய சாலையையும் (47 B) இந்த நிறுவனம் போடுகிறது. மொத்தம் 1680 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட குமரி மாவட்டத்தின் சூழலியலை இந்தச் சாலை மிகவும் மோசமாக பாதிக்கிறது.
இந்த சாலைப் பணியில் ஏறத்தாழ இரண்டு லட்சம் தென்னை, பனை, புளி, தேக்கு போன்ற மரங்களை எந்தவிதமான மதிப்பீடும் செய்யாமல், டெண்டர் விடாமல் எல் அண்ட் டீ நிறுவனம் வெட்டி அழித்திருக்கிறது.
மரங்களை வெட்ட எந்தவிதமான அனுமதியும் கொடுக்கவில்லை என்று மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதேபோல வருவாய்த் துறை அதிகாரிகளும் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என மறுக்கின்றனர். அப்படியானால் ‘எல் & டீ’ நிறுவனம் எப்படி இவ்வளவு மரங்களை வெட்டுகிறார்கள்? வெட்டிய மரங்களை யாருக்கு விற்றார்கள்? பொதுச் சொத்தான அந்த மரங்களை விற்ற பணம் எங்கேப் போயிற்று? இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மற்றும் மத்திய போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணனின் உதவியுடன் இந்த மரக் கொள்ளை நடக்கிறதோ என்கிற ஐயம் எழுகிறதே? ‘எல் & டீ’ நிறுவனம் பல பாசனக் கிணறுகளை, கால்வாய்களையும் அனுமதியின்றி மூடியிருக்கிறது. இயற்கை ஆர்வலர் முனைவர் ஆர். எஸ். லால் மோகன் பசுமைத் தீர்ப்பாயத்தில் தடை உத்தரவு வாங்கியிருந்தாலும் (NGT Application No.104/2013 of Chennai and order dated 17.9.2016) இந்தச் சூழல் அழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி மக்கள் வளங்களைக் கொள்ளையடித்த பிறகு, கட்டுமானத்தில் கொள்ளை லாபம் அடைந்தபிறகு, சாலை போட்டதற்கு சுங்கக் கட்டணம் கட்டுங்கள் என்கிற பெயரில் அடுத்த கொள்ளைத் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி-தோப்பூர் பகுதியில் சிறிய தூர சாலை ஒன்றுக்கு ‘எல் & டீ’ நிறுவனம் ரூ. 86 சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது. எத்தனை ஆண்டுகளாக இந்தப் பகல் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது?
வருங்காலத் தலைமுறைகளின் வளங்களை, வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, கார்ப்பரேட்டுகள் பல வழிகளில் தொடர்ந்து கொள்ளை அடிப்பதும், அரசியல்வாதிகள் கமிஷன் பெறுவதும், நாம் மழையிழந்து, களையிழந்து, கண்ணியமிழந்து, நோய் நொடிகளில் வீழ்ந்து அழிவதும்தான் வளர்ச்சி, மக்களே! இந்த வளர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக