புதன், 26 அக்டோபர், 2016

"அண்ணா" தமிழ்நாட்டில் ஏன் மீண்டும் மீண்டும் திராவிடகட்சிகளே .. ஏன் தேசிய கட்சிகள் தேய்கின்றன? தமிழகம்தான் முன்னோடி ...

அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப்பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லாஅரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள். கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி)மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள். தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?’”


தமிழகத்துக்கு வெளியே நம்மூர் பேச்சு அடிபடும்போது இப்படி திராவிட இயக்கத்தினரின் ‘சித்தாந்த வறட்சி’யைப் போய் விவாதம் தொடுவது இயல்பானது. நான் அவர்களிடம் சொன்னது: ‘‘சாமானிய மக்கள் ஒரு அரசியல் இயக்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கையில், அதன் எதிர்காலச் சித்தாந்தங்களைப் பற்றி அல்ல; சமகாலத் தேவைகளுக்கு அது என்ன தீர்வுகளை முன்வைக்கிறது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் அதன் தேவைக்கேற்ற ஆட்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக்கொள்கிறது. திராவிட இயக்கம் தமிழ்ச் சமூகம் தன்னுடைய தேவையின் நிமித்தம் உருவாக்கிக்கொண்டது. சித்தாந்தங்கள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும் கலாச்சாரமுமே திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. மக்கள் அமைதியாக இருந்தால், அவர்களே மது ஆலைகளை நடத்துவார்கள்; மக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களே மதுவிலக்கையும் கொண்டுவருவார்கள்.

அரசு உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள், ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி கொடுக்கிறார்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களும் மடிக்கணினிகளும் கொடுக்கிறார்கள், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது, ‘ஒரே நாடு - ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு நாடு முழுக்க ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை இந்திய அரசு கொண்டுவரும்போது தமிழகம் மட்டும் அதை எதிர்க்கிறது… இப்படி இன்றைக்குத் தமிழகம் சார்ந்து பெருமிதத்தோடு பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. திராவிட அரசியலின் முதல் ஆட்சிப் பிரதிநிதி அண்ணாவினுடைய அரசியல் தொடர்ச்சி இவை. அன்றாட அரசியலில் எவ்வளவு கீழே விழுந்தாலும், சில தருணங்களில் அவர்கள் தீர்மானிக்கும் அண்ணா பாணி முடிவுகள்  அவர்களை உயிர்ப்போடு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறது. தமிழ் மக்களின் அடியாதார இயல்பிலிருந்து பெரிய அளவில் விலகிவிடாமல், காலத்தோடு ஒன்றிப் பயணிக்கும் வரையில் திராவிட இயக்கத்தினரை எவரும் அசைக்க முடியாது!”

தமிழக அரசியலில் அண்ணாவுக்கு இன்றைக்கும் மதிப்பு இருக்கிறதா என்று அவர்கள் கேட்டார்கள். அண்ணாவின் மூன்று அரசியல் முழக்கங்களுக்கு இந்திய அரசியலில் என்றைக்கும் மதிப்பிருக்கும் என்று நான் சொன்னேன். 1. தேசியம் எனும் பெயரில் இன்றளவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘இந்தி, இந்து, இந்தியா’ எனும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் வளைக்க நடக்கும் அரசியலைத் துல்லியமாக அம்பலப்படுத்தி, இந்திய ஒன்றியத்தின் உண்மையான நீட்சிக்காக அவர் இறுதிவரை குரல் கொடுத்த மாநிலங்கள் சுயாட்சி. 2.இருமொழிக் கொள்கை என்ற பெயரில், தாய்மொழியோடு அவர் துணை மொழியாக அவர் கொடுத்துச்சென்ற ஆங்கிலம். 3. வெகுஜன மயக்குத் திட்டங்கள் என்ற பெயரில் டெல்லியின் மேட்டுக்குடி வர்க்கம் திட்டமிட்டு கொச்சைப்படுத்திவரும் அவர் வழிகாட்டிய சமூகநலத் திட்டங்கள்.<//>என்னுடைய சமீபத்திய பயணம் அண்ணாவை நிறைய ஞாபகப்படுத்தியது. ஒரு முனையில் காஷ்மீர் இரு மாதங்களுக்கும் மேல் போராட்டங்களால் முற்றிலும் நிலைகுலைந்திருக்கும் நிலையில், இன்னொரு முனையில் வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி ஆட்சியாளர்கள் தம் பாதையை மாற்றிக்கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அருணாசலப்பிரதேசத்தில், முதல்வர் பேமா காண்டு 42 உறுப்பினர்கள் சூழ கூண்டோடு காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியிருப்பது அங்கு நிலவும் அவல அரசியல் சூழலுக்கு ஓர் உதாரணம். நிலையில்லா ஆட்சி. 10 உறுப்பினர்களைச் சேர்த்தால் எவரும் ஆட்சியில் கொந்தளிப்பை உண்டாக்கிவிடலாம். எங்கும் ஊழல். வீதிதோறும் இளைஞர்கள் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த பின்னரும்கூட இன்னமும் மனதளவில் பெரும்பான்மையோர் விலகியே நிற்கிறார்கள். பிரிவினைவாதச் சுவரொட்டி இல்லாத ஒரு மாநிலம் கிடையாது. இன்றைய வட கிழக்கு மாநிலங்களின் 90% வருவாய் மத்திய அரசின் நிதியிலிருந்து செல்கிறது. பிரதான சாலைகள் எங்கும் ராணுவப் படைகள் நிற்கின்றன.டெல்லியிலிருந்து வீரர்கள், நிதி விநியோகம் நிறுத்தப்பட்டால், அடுத்த நாள் என்னவாகும் என்பதை யோசிப்பதற்கான தேவையே இல்லை. சூழல் கொஞ்சம் தேவலாம் என்று கருதத்தக்க மாநிலம் திரிபுரா. தனி திரிபுரா பிரிவினைவாத கோஷம் முடக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஏற்கெனவே சின்ன மாநிலமான அதைப் பிளந்து, பழங்குடிகளுக்கு என்று தனிமாநிலம் கேட்கும் குரல்கள் வலுவடைகின்றன.

திரிபுராவில் இருந்தபோது முதல்வர் மாணிக் சர்க்காரைச் சந்தித்தேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக முழு பலத்துடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர். “மக்கள் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள். மத்திய அரசோ அதிகாரக் குவிப்பு நடத்துகிறது. நாளுக்கு நாள் மாநிலங்களிடம் உள்ள கொஞ்சநஞ்ச அதிகாரங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. தூக்கவே முடியாத சுமையைச் சுமக்க ஆசைப்படுகிறது டெல்லி. பெரிய ஆபத்து. ஆனால், இதுபற்றி தமிழகம் போன்ற சில மாநிலங்கள் தவிர, வேறு யாரும் பேசத் தயாராக இல்லை”என்றார்.

உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைத்து பிரிவினைவாதத்தை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள் என்கிற திரிபுரா அனுபவத்தை மாணிக் சர்க்காரிடம் கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. திரிபுரா அனுபவங்களை எழுதி அனுப்பிய மாணிக் சர்க்கார் அதில் குறிப்பிட்ட அடிப்படையான செய்தி, “இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. அவரவர் பிரச்சினைகளுக்கான தீர்வை அவரவர் சொந்தச் சூழலிலிருந்தே கண்டடைய முடியும்.”

நாம் மோடியைக் குற்றஞ்சாட்டுவதில் பிரயோஜனம் இல்லை. கோளாறின் வேர் உலகிலேயே பெரியதான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசு 1935-ல் கொண்டுவந்த சட்டத்தின் நீட்சியே நம்முடைய சட்டம். 1946 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளே சுதந்திர இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் சபையில் பெரும் பங்கு வகித்தவர்கள். அந்நாட்களில் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை கிடையாது. நிலவுடமையாளர்கள், ஆதிக்க சாதியினர், புதிதாக உருவாகிவந்த மேட்டுக்குடி வர்க்கம் என்று உண்மையில் ஆதிக்கச் சக்திகள் பெரும்பான்மை வகித்த சபை அது.

சுதந்திரத்துக்குப் பின் அதிகாரத்தில் உட்காரும் உத்வேகத்தில் இருந்த காங்கிரஸ் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில், யானைக்கும் பூனைக்குமான இடைவெளி பலத்தோடு சபையில் பிரமாண்டமாக உட்கார்ந்திருந்தது. 1935-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தபோது எதிர்த்த அதே சட்டத்தை இப்போது சுவீகரித்துக்கொள்வதில் அதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி சங்கடமான சுமையாக மாறியிருந்தார். “அதிகாரப் பரவலாக்கத்தில் எத்தனை பேர் உறுதியும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. மாறாக, இந்தியாவை முதல் தரமிக்க ராணுவ சக்தியாகவும், வலிமையான மத்திய அரசு; அதையொட்டியே ஏனைய அமைப்புகள் என்பதுமான அமைப்பாக்கவே பலர் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அரசியலமைப்பு சபை தொடர்பான தன்னுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினார் காந்தி.

அதிகாரக் குவிப்பைப் பெரும்பாலானோர் ஆதரித்தார்கள். “பிரிட்டிஷ் ஆட்சிக் கால 1935 இந்தியஅரசியல் சட்டத்தின் மூலம் அமைந்த மத்திய அரசைவிட, மிக வலிமையான ஒன்று அமைவதை நான் விரும்புகிறேன்” என்றார் அம்பேத்கர். நாட்டை அந்நாளில் கொந்தளிக்கவைத்த பிரிவினை கோஷங்களும் இனக் கலவரங்களும் அதிகாரக் குவிப்பு முடிவுக்கான நியாயங்களைக் கற்பித்தன.

நாட்டின் தேசிய மொழியைத் தேர்ந்தெடுக்கும் விவாதம் மோசமாகப் பெரும்பான்மைவாதத்தைப் பிரதிபலித்தது. 1946 டிசம்பர் 10 கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.வி.துலேகர், “இந்துஸ்தானி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் தங்க உரிமை இல்லை. இந்திய அரசியலமைப்பை உருவாக்க இங்கு வந்திருப்பவர்களுக்கு, இந்துஸ்தானி தெரியாது என்றால், இச்சபையில் உறுப்பினர்களாக இருப்பதற்கே அவர்களுக்குத் தகுதியில்லை” என்றார்.

தன் கையில் காங்கிரஸின் லகான் வரத் தொடங்கியது முதலாகவே மொழிவாரி மாநிலங்கள் எனும் சிந்தனையை நோக்கி அதை வழிநடத்தியவர் காந்தி. 1920 நாக்பூர் மாநாட்டுக்குப் பின் மொழிவாரி பிராந்திய கிளைகளைப் பெரிய அளவில் அமைக்கத் தொடங்கியிருந்தது காங்கிரஸ். தன்னுடைய மரணத்துக்குச் சில நாட்கள் முன்னர்கூட - 1948, ஜனவரி 25 பிரார்த்தனைக் கூட்டத்தில் - மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் காந்தி. எனினும் தேசப் பிரிவினைக்குப் பின் நேரு மற்றும் சகாக்களின் சிந்தனை மாறிவிட்டிருந்தது.

மாநிலங்களுக்கான உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விஷயத்தில் நேரு முறையாகச் செயல்படவில்லை. நேருவுக்குப் பிந்தைய காங்கிரஸின் செயல்பாடு மேலும் மோசமானது. மாநிலங்களிடையேயான சுமுக உறவுக்காக 1950-ல் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ‘மாநிலங்களிடை மன்றம்’ தனது முதல் 39 ஆண்டு வரலாற்றில் ஒருமுறைகூட கூடவில்லை என்பதும், 2016-ல் சமீபத்தில் கூடிய கூட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூடியது என்பதும் மாநிலங்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு காட்டிவரும் தொடர் அலட்சியத்துக்கு ஓர் உதாரணம். மாநிலங்களின் உரிமைகளை யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களையெல்லாம் பிரிவினைவாதிகளாகக் கட்டமைப்பதையும் அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை ஏவுவதையும் ஒருஉத்தியாகவே கையாண்டன தேசியக் கட்சிகள். பின்னாளில், தன்னுடைய ஆட்சிக்காலகட்டங்களில் 50 முறை மாநில அரசுகளின் ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி.

ஆக, இன்றைக்கு அதிகாரப் பரவலாக்கத்தை மையமாகக் கொண்ட, வலுவான மாநிலங்களுக்கு வழிவகுக்கக் கூடிய, சுதந்திர இந்தியா தன்னுடைய எல்லாத் தரப்புகளுக்கும் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கத் தக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கான குரல்கள் ஒலிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால், பலர் இதுபற்றி யோசிக்கவே பயந்த காலகட்டத்தில் உரக்கப் பேசியவர்களில் முக்கியமானவர் அண்ணா: “மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது, ‘இப்படிப் பேசுவது மத்திய அரசைக்குலைப்பதாகும், நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும்’என்று காங்கிரஸார் கூறுகின்றனர். நான்பணிவன்போடும், உறுதியோடும் கேட்பேன்: நாட்டுக்கு ஆபத்து வரும் என்று அறிந்து கூறும்,நாட்டை வலிமையுள்ளதாக்கும் உரிமையும் வழிகாட்டும் திறமையும் உங்களைத் தவிர வேறுயாருக்கும் இல்லை என்று நினைத்துப் பேசும் முழு உரிமை யாரால், எப்போது, எந்தக்காரணத்தால் உங்களுக்கு அளிக்கப்பட்டது?”

இந்தியா மாநிலங்களால் ஆளப்படுமே தவிர, மத்திய அரசால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்: “மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. அதிகாரம் தேவைக்கு அதிகமாக மைய அரசிலே குவிந்துவிட்டதால் என்ன நடக்கிறது? நான் அண்மையில் டெல்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அமைச்சர் ஷிண்டே பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டெல்லியிலிருந்து வராததால் பெருத்த நஷ்டம் உருவாகும் சூழல் உருவாகியிருப்பதை அவருக்குக் கூற முயன்றோம். கள்ளக்குறிச்சி என்ற பெயரை அவர் புரிந்துகொள்ள 15 நிமிடங்கள் ஆயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர் மீது நான் குற்றம்சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இங்கே தமிழ்நாட்டில்; அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அங்கே டெல்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்களே குற்றவாளிகள். மத்திய அரசின் வலிவு, அசாமுக்கு அச்சமூட்ட, தமிழ்நாட்டைத் தத்தளிக்கவைக்க, கேரளத்துக்குக் கலக்கமுண்டாக்கத்தான் என்றால், நமது சுதந்திரச் சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத்தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்!”

1969-ல் தன்னுடைய மரணத்துக்கு முந்தைய தொண்டர்களுக்கான கடைசிக் கடிதத்தில்கூட, “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரம் பெறத் தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்று அண்ணா எழுப்பிய குரல் தமிழ்நாட்டுக்குமட்டுமே உரித்தானது அல்ல; இந்திய மாநிலங்களின் தேசியக் குரல் அது!

1963-ல் இந்தியை ஆட்சி மொழியாக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்தபோது, அண்ணா மாநிலங்களவையில் பேசிய வார்த்தைகள் தமிழர்கானவை மட்டும் அல்ல. “நாட்டின் மக்கள்தொகையில் 42% பேர் இந்தி பேசுவதால், இந்தியைஆட்சிமொழியாக்க இங்கு பேசியவர்கள் வாதிட்டார்கள். இந்த 42% மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தால், அவர்களுடைய வாதம் சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்த 42% மக்கள் உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என அருகருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள். இதை ஒரு பெரும்பான்மை இனக் குறியீடாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தி மாநிலங்களில் இந்தியை அறிந்த மக்களுக்கு இந்தி தாய்மொழி. இந்தியே அம்மாநிலத்தின் ஆட்சிமொழி. இந்தியே பயிற்றுமொழி. அதே இந்தியே மத்திய அரசின் ஆட்சிமொழி. ஆக, இந்தி பேசும் மக்கள் பலப் பல பயன்களை அடைவார்கள். ஆனால், இந்தி பேசாத மாநிலங்கள் மீது பலப் பல சுமைகளை ஏற்றுகிறீர்கள். இந்தி ஆட்சி மொழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்!”

தமிழைக் காட்டிலும் மொழி வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டும் ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலம் வங்கம். வங்காள அகாடமியில் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைக்கு எல்லாவற்றையும் தாண்டியும் இந்தி வங்கத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது என்றார்கள். கர்நாடகத்திலும் இதே நிலைமைதான் என்கிறார் கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளரான வாஸந்தி. ஆந்திரத்தில், மஹாராஷ்டிரத்தில், குஜராத்தில் எங்கும் இதே கதை என்கிறார்கள் உள்ளூர் நண்பர்கள். பண்பாட்டிலும் இது பெரும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. சொந்த மொழியில் சினிமாவைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள். தமிழகமோ தனித்து நிற்கிறது. நேற்று எங்கள் அலுவலகம் பக்கத்திலுள்ள டீக்கடைக்காரர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார், “இந்தி தெரிஞ்சா வேலை கிடைக்கும்னா உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிஹார்லேர்ந்து இவ்ளோ பேர் ஏன்டா நம்மூருக்குக் கூலி வேலைக்கு வராய்ங்க?”

அடையாளம் மட்டும் அல்ல; மொழி பெரிய அதிகாரம். சிறுபான்மைச் சமூகங்கள் மொழிரீதியிலான ஆதிக்கத்தை அனுமதித்தால், தொடர்ந்து எல்லா ஆக்கிரமிப்புகளுக்கும் அடிமையாக வேண்டும் என்பதை அண்ணா முழுக்க உணர்ந்திருந்தார். அதனாலேயே தமிழ்ச் சமூகம் உலகோடு பேச ஆங்கிலத்தைத் துணைமொழியாக அவர் முன்மொழிந்தார். “இந்தியா முழுக்கப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்றால், பின் இந்திக்கான தேவை என்ன?” என்று கேட்டு இருமொழிக் கொள்கை மூலம் ஆங்கிலத்தை நோக்கித் திருப்பியதன் விளைவாகவே இன்றைய உலகமயச் சூழலில் தமிழ்ச் சமூகம் சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கமாகிவருகிறது.

பசியோடு இருப்பவனுக்கு மீனைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது ஒரு அணுகுமுறை. பசியில் துடித்துக்கொண்டிருப்பவனின் உடனடி உயிர்த் தேவை மீன்; அவன் உயிர்த்திருக்க ஒரு மீனையும் கூடவே தூண்டிலையும் தருவது இன்னொரு அணுகுமுறை. அண்ணாவினுடையது இரண்டாவது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி எனும் முழக்கத்தோடு ஆட்சியில் ஏறிய அவருடைய இயக்கத்தின் விளைவாகவே சமூகநீதிக்கான முன்னோடி மாநிலமாகத் தமிழகம் மாறியது. அரசியலமைப்புச் சட்டத்தையும் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களையும் ஆய்வுக்குள்ளாக்கும் ஆணையத்தை உருவாக்கியது. மாநிலச் சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

வங்கத்தைப் போலவே ஆந்திரமும் கர்நாடகமும் பஞ்சாப்பும்கூட தமிழகத்தின் செயல்பாடுகளைக் கவனித்துவருவதாக வங்கத்து நண்பர்கள் சொன்னார்கள். ஏனைய எல்லா இந்திய மாநிலங்களுக்குமே ஒருநாள் அந்தத் தேவை உருவாகும்! செப். 2016, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக