ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நீ சொல்லும் பொய் என்னைக் காப்பாற்றும்' பெண் கான்ஸ்டபிளிடம் கெஞ்சிய எஸ்.ஐ.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது மனதை மாற்ற எஸ்.ஐ அருமைநாயகம் போனில் கெஞ்சியுள்ளார். அந்த போன் உரையாடல் வைரலாக வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் ராமு. இவர் கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார். ராமுவின் தற்கொலைக்கு காரணம் போலீஸ் எஸ்.ஐ. அருமைநாயகம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அருமைநாயகத்தை கைது செய்யும்வரை ராமுவின் உடலை வாங்கமாட்டோம் என்று உறுதியாக உள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அருமைநாயகம் மீது ஏற்கனவே அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு நடவடிக்கை எடுத்து இருந்தால் ராமு, தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்கிறார்கள் அவரது உறவினர்கள்.
ராமுவும், அருமைநாயகமும் பேசிய ஆடியோக்கள் போலீஸிடம் உள்ளது. அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ போலீஸார் அமைதியாக இருக்கிறார்கள். ராமு, தற்கொலை செய்தபிறகாவது அவரை கைது செய்திருந்தால் கூட இந்த பிரச்னைக்கு போலீஸார் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதையும் போலீஸார் செய்யவில்லை. இதனால் ராமு விவகாரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது. தற்போது ராமு தற்கொலை செய்து விட்டார். ராமுவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல அமைப்புகள் போராடிய பிறகு அருமைநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பு அருமைநாயகம் அவரிடம் போனில் பேசி இருக்கிறார். 16 நிமிடங்கள் அவர்களது உரையாடலில் நடக்கும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடலில் அருமைநாயகம், ராமுவிடம் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்.
அந்த உரையாடல் இதுதான்..,
ராமு: நான் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை
அருமைநாயகம்: நீ இப்படி பேசி, ஸ்டெடியாக பேசிய இவ்வளவு பிரச்னை வளர்ந்து விட்டது. இன்றாவது ஒரு நாள் எனக்காக பேசு. என்னை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒருவார்த்தை எனக்காக பேசு. என்னை இன்று வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். இன்று கூட என்னை அரஸ்ட் செய்யலாம். என்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா உனக்கு. மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அதை போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ராமு: அப்படிஎன்றால் எதற்காக புகார் கொடுத்தாய் என்று என்னிடம் போலீஸ் அதிகாரிகள் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
அருமைநாயகம்: இன்று ஒரு நாள் என்னை காப்பாற்ற உனக்கு வழி இருக்கிறது. அதைவிட்டுவிட்டால் யார் நினைத்தாலும் என்னை காப்பாற்ற முடியாது. கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. இரவு முழுவதும் தூங்காமல் சட்டபுத்தகத்தைப் படித்துள்ளேன். நாங்கள் இருவரும் சாதாரணமாக பேசிப்பழகினோம். அது கற்பழிப்பு குற்றமாகுமோ என்று நினைத்து விட்டேன் என்று நீ சொல்லு. நான் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் செல்கிறேன். அம்மா செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். புகாரில் நான், உன் வீட்டுக்கு வந்திருப்பதாக சொல்லி இருக்கிறாயா, ராஜபாளையத்துக்கு சென்றதை எழுதி இருக்கிறாயா?
ராமு: ஆமாம்.
அருமைநாயகம்: வீட்டுக்கு வந்ததை புக் வாங்க வந்ததாக சொல். ராஜபாளையத்துக்கு சென்றது கோயிலுக்கு சாமி கும்பிட சென்றோம் என்று சொல். அங்கு குளித்து விட்டு உடை மாற்ற லாட்ஜிக்கு சென்றோம் என்று சொல். மெமரி கார்டு இருப்பதாக புகாரில் எழுதி இருக்கிறாயா
ராமு: அதை எழுதவில்லை.
அருமைநாயகம்: வேறு என்ன எழுதி இருக்கிறாய்
ராமு: அகஸ்தியர் அருவிக்கு அழைத்து சென்றதாக சொல்லி இருக்கிறேன். அங்கு கோயிலில் என்னை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தார் என்று புகாரில் எழுதி இருக்கிறேன்.
அருமைநாயகம்: இன்றோடு என் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைக்கிறேன். கற்பழிப்பு குற்றத்தை மட்டும் சொல்லாதே. நான் உன் மீது நல்லப்படியாக சொல்வேன். உனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் நீ பெண்.
ராமு: அந்த சம்பவம் உண்மை தானே
அருமைநாயகம்: திருவள்ளூவர் கூட நன்மைக்காக பொய் சொல்லலாம் என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய ஐ.பி.சி கூட சொல்லி இருக்கிறது.
ராமு: நான் இல்லை என்று சொன்னால் என்ன நம்பிக்கையில் இருக்க முடியும்.
அருமைநாயகம்: உன்னை எந்தக்காலத்திலும் கைவிடமாட்டேன். எனக்கு உதவி செய்த உன்னை மறக்க மாட்டேன். என்மீது உள்ள நம்பிக்கையில் சொல். உனக்குத் தான் மெமரி கார்டு இருக்கிறதே. நான் கைவிட்டுவிட்டால் நீதிமன்றம் மூலம் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். நீ நல்லா இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இப்போது இரண்டு பேரும் சமாதானமாக சென்று விட்டோம். நீ சொல்லும் ஒரு பொய்யால் என்னுடைய வாழ்க்கை எங்கயோ போய்விடும். இல்லைஎன்றால் பாதாளத்துக்கு போய்விடும்.
ராமு: நான் மீண்டும் புகார் கொடுக்க முடியுமா
அருமைநாயகம்: முருகன் சாரே எல்லாம் சொல்லிவிட்டார். கற்பழிப்பு குற்றம் நடைபெறவில்லை என்று மட்டும் சொல்லுடா. இன்று மட்டும் எனக்காக பொய் பேசு.
ராமு: பேசுரேன்.
அருமைநாயகம்: எனக்காக சொல்லுவியா.... எமர்ஜென்ஸி என்றால் அந்த செல்போன் நம்பரில் பேசு. ராமு நல்ல பெண் என்று நான் சொல்கிறேன். நீ கொடுக்கும் ஸ்டேட்மெண்டும், நான் கொடுக்கும் ஸ்டேட்மெண்டும் ஒன்று போல இருந்தால் எந்த பிரச்னையும் இருக்காது.
ராமு: மேல்நடவடிக்கை தேவையில்லை என்ற வார்த்தை மட்டும் போதாது.
அருமைநாயகம்: என் மீது மூன்று வகையான நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். டிஸ்மிஸ் வரை போய்விடும்.
ராமு: என் மீதும் நடவடிக்கை எடுப்பார்களே
அருமைநாயகம்: உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
ராமு: ம்..ம்...
அருமைநாயகம்: நான் என்ன காரணத்துக்காகவும் மாற மாட்டேன். கரெட்டா சொல்லு. உன்மை நம்பிதான் இருக்கேன் என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால் மனம் உடைந்த பெண் காவலர் ராமு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்.பி., எஸ்.மகேஷ்  vikatan,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக