புதன், 5 அக்டோபர், 2016

நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய முடியாது:ஆணையம் மனு!

மின்னம்பலம்,காம் : தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டநிலையில், தேர்தல் அறிவிப்பாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. தனி நீதிபதி கிருபாகரனின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனால் ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் அதிருப்தி அடைந்தன. திமுக கண்டனக் குரலை எழுப்பியது. இதையடுத்து, ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக சர்ச்சை எழுந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த இந்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு ஆளுங்கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த தீர்ப்பு வந்தபோது தமிழக தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்தார். ஊடகவிலயாளர்கள் இதுபற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, “நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் அதை படித்துப் பார்த்து, அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துவிட்டு ஊடகச் சந்திப்பை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் தேர்தல் தேதி அறிவித்தபின்னர், நீதிமன்றத்தால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என்றும் மேலும் விதிகளுக்கு உட்பட்டே இட ஒதுக்கீட்டில் சுழற்சிமுறை கடைப்பிடிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று காலையே தேர்தல் ரத்துக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்தால் அப்படிச் செய்யும்போது தங்களிடம் கருத்து கேட்டபின்னர், அந்த மனுமீது முடிவை அறிவிக்க வேண்டும் என திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனிநீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவும், அந்த மனுவை கேள்விக்குள்ளாக்கநினைக்கும் திமுக-வின் கேவியட் மனுவுமாக உள்ளாட்சித் தேர்தல் வழக்கு தொடர்பாக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக