வெள்ளி, 28 அக்டோபர், 2016

பாஜக பொறிக்குள் சிக்கிய தமிழக அரசு ... காவிரியில் மௌனம் .. என்ன கேட்டாலும் ஒகே .. பறிபோன மாநில அதிகாரம்?

தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்…!’ -அமித் ஷாவிடம் கூறிய மோடி?

தமிழக அரசில் இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார் ஜெயலலிதா. அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 33 நாட்கள் கடந்துவிட்டன. ‘ தமிழக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் போனதற்கும் பல காரணங்கள் உள்ளன’ என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேராமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது இத்திட்டத்தில் சேர ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. அதேபோல் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டாலும், இதுகுறித்த எந்த எதிர்ப்பையும் அ.தி.மு.க நிர்வாகிகள் பதிவு செய்யவில்லை.
” மத்திய அரசுடன் இணக்கமான போக்கில் செல்வதையே, சசிகலா உள்ளிட்டவர்கள் விரும்புகின்றனர். முதல்வர் குணமாகி வரும்போது, ‘ அரசியல் சூழலை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை’ என உணரும்போது பா.ஜ.கவுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட ஆரம்பிப்பார் என நம்புகிறார் பிரதமர் மோடி. இதைப் பற்றி அமித் ஷாவிடம் விரிவாகப் பேசியிருக்கிறார்” என நம்மிடம் விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
” தமிழ்நாட்டு சூழலை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவ்வாறு செயல்பட பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. சில நாட்களுக்கு முன்பு அமித் ஷாவிடம் பேசிய பிரதமர், ‘ நாம் நினைத்திருந்தால், ‘ ஜெயலலிதா முதல்வர் அல்ல’ என்பதை அறிவித்திருக்கலாம். அவர் மக்கள் செல்வாக்குமிகுந்த பெண்மணியாக இருக்கிறார். தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் தேசிய எண்ணம் கொண்ட தலைவராக இருக்கிறார். அவரை நாம் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். இந்த விவகாரத்தில் நாம் நல்லபடியாகவே செயல்பட்டிருக்கலாம். கட்சியின் சீனியர் அவசரப்பட்டு ட்விட்டரில் தகவல் வெளியிட்டது எதிர்மறையாக மாறிவிட்டது. அதனால்தான், ‘ ஆட்சிக்கலைப்பு என்பதெல்லாம் இல்லை’ என்று தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் பேசச் சொன்னேன். நாளை அவர் குணமாகி வந்தாலும், நமக்கு உதவியாக இருப்பார். அதுவரையில் நடக்கின்ற அனைத்தையும் கவனிப்போம். அ.தி.மு.கவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. காங்கிரஸ்காரர்கள்தான், கட்சி உடையுமா எனக் காத்திருப்பார்கள்.
என்னுடைய ஆதரவு இல்லாமல், முதல்வராக அவர் தொடர முடியாது என்பதும் அங்குள்ளவர்களுக்குத் தெரியும். நாம் கைவிட்டிருந்தால், எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வருக்கும் உள்ள வித்தியாசம் வெளி உலகுக்குத் தெரிந்திருக்கும். அவருக்கு கௌரவக் குறைச்சல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தோம். இப்போது வரையில் ஜெயலலிதா உடல்நிலை சஸ்பென்சாகவே இருக்கிறது. அப்படியே அவர் குணமாகி வந்தாலும் ஆக்டிவாக செயல்பட முடியாது. அவர் முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நம்முடைய ஆதரவு அவருக்குத் தேவை. நாம் அவருக்குச் செய்த உதவியை மறக்க மாட்டார். சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், அ.தி.மு.கவில் நம்முடைய எதிரி யார்? நண்பர் யார் என்பதையே அறிந்து கொள்ள முடிந்தது’ என விரிவாகவே பேசியிருக்கிறார்” என்றவர்,
” இலாகா இல்லாத முதலமைச்சர் என்றாலும், செயல்பட முடியாத ஒருவர் முதல்வராக நீடிக்கிறார் என்றால் மத்திய அரசின் அணுகுமுறைதான் காரணம். அதனால்தான், ‘ முதல்வர் அறிவுறுத்தலின்பேரில் ஓ.பி.எஸ் வசம் இலாகா ஒப்படைக்கப்படுகிறது‘ என்றெல்லாம் ஆளுநர் அறிவித்தார். அ.தி.மு.க உள்கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார் பிரதமர் மோடி” என்றார் நிதானமாக.
– ஆ.விஜயானந்த்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக