வியாழன், 13 அக்டோபர், 2016

காவிரி நதி நீர்ப் பிரச்சினை - திமுக கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

நக்கீரன்.இன்  :காவிரி நதி நீர்ப் பிரச்சினை குறித்து "விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் 13-10-2016 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி., தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., பவுன்குமார் (காங்கிரஸ்), உ. பலராமன் (காங்கிரஸ்), சண்முகம் (சி.பி.எம்.), துரை மாணிக்கம் (சி.பி.ஐ), குணசேகரன் (சி.பி.ஐ), கு.செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாய சங்கம்),தெய்வசிகாமணி (விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள்),அய்யாக்கண்ணு (விவசாய கூட்டு இயக்கம்),பாலு தீட்சிதர் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்),ஹேமநாதன் (ஐக்கிய ஜனதாதள விவசாயிகள் பிரிவு), தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், கரூர் சின்னசாமி, தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் உ.மதிவாணன், எம்.எல்.ஏ., ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் : 1 காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி ஆகஸ்ட் 2016 வரையிலான காலத்தில் கர்நாடக அரசு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 94 டி.எம்.எசி என்ற நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது.
இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவைச் சாகுபடியையும், முதல் முறையாகச் சம்பா சாகுபடியையும் இழந்து மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வறுமையிலும், கடன் தொல்லைகளாலும் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 26 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படுவதோடு, விவசாயத் தொழிலாளர்கள் பல இலட்சம் பேர் வாழ்விழந்து வேறிடம் பெயர்ந்து செல்லக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் தொடர்ந்து மீறி வருகிறது. அதன் காரணமாகத் தொடர்ந்து இழப்புக்கு ஆளாகும் தமிழக விவசாயிகளின் துன்ப நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாமல் அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், சட்டமன்றச் சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றி அரசியல் சட்ட நெருக்கடியையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. கூட்டாட்சி முறைக்குக் குந்தகம் விளைவிக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்திட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களான ஆனந்த குமார், சதானந்த கவுடா போன்றவர்களும், இந்தப் பிரச்சினையில் தலையிட்டு கர்நாடக அரசின் போக்கை கண்டிக்க வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு, அதனடிப்படையில் கருத்துக்களை வெளிப்படுத்துவது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் துரோகம் விளைவிப்பதாக உள்ளது.

எனவே, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை மத்திய அரசுக்குத் தெளிவாக உணர்த்தவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக முன்வந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் - தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்த பிரச்சினை குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும் - அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரநிதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 2
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 27.9.2016 அன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. கூட்டாட்சித் தத்துவத்தைக் கடைபிடிக்கும் நம் நாட்டில், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் சுமூகமாகத்தான் பேசித் தீர்க்க வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு முக்கியம். தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களை மத்திய அரசு அழைத்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக தாம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டில் ஒரு உறுதியற்ற போக்கை கடைப்பிடித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட மத்திய அரசு, ஒரே வாரத்தில் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு உச்ச நீதிமன்றதுக்கு இந்தப் பிரச்சினையில் தலையிட சட்டப்படி உரிமை இல்லை என்று கூறியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956 (Inter State Water Disputes Act 1956) மத்திய அரசின் அதிகாரத்தை மிகத் தெளிவாக வரைவிட்டுக் காட்டியுள்ளது.

 இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்படும் நடுவர் மன்றங்களின் உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானதாகும் என்றும், நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் பதிவிட்ட உடனேயே அதனை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவ்வாரியம் குறித்த அறிவிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அச்சட்டம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. எனவே, நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956ன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

 எனவே, சட்டத்துக்குப் புறம்பாக ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போட்டு, தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசின் நிலைப்பாட்டையும் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் பேராபத்திலிருந்து அவர்களைக் காக்கவும், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு (Cauvery Water Distribution Regulatory Committee) அமைத்து, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக