வெள்ளி, 28 அக்டோபர், 2016

அபத்தம் +அயோக்கியத்தனம் = தீபாவளி ... அறிவியல் அபத்தம் தீபாவளி:

ஆதியிலே ஒரு அசுரன் பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய்
கடலுக்குள் ஒளிந்து கொண்டான். உடனே தேவர்கள் ஓடிப்போய் மகாவிஷ்னுவிடம் முறையிட அவர் பன்றி அவதாரம் எடுத்து போய் அசுரனை கொன்றுவிட்டு பூமியை எடுத்து வந்து பாயாக சுருட்டப்பட்ட பூமியை மீண்டும் விரித்துவிட்டார். பழைய நிலைக்கு திரும்பிய பூமி பன்றியோடு உறவுகொள்ள ஆசைப்பட்டது. பன்றி உருவிலிருந்த மகாவிஷ்னுவும் மனமிரங்கி பூமியோடு உறவுகொள்ள, பூமிக்கும் பன்றிக்கும் மகனாக நரகாசூரன் பிறந்தான். நரகாசூரன் வளர்ந்து தேவர்களை கடுமையாக சித்தரவதை செய்ய துவங்கினான். எப்போதும் போல நியாயவான்களான ஆரியர்கள் மீண்டும் மகாவிஷ்னுவிடம் முறையிடவே, மகாவிஷ்னு போரிட்டு நரகாசூரனை கொன்றார். அந்த நரகாசூரன் இறந்தநாளையே தீபாவளி என கொண்டாடுகின்றனர்.

இந்த கதை குறித்து வழக்கம்போலவே பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கும், பின்னாளில் வந்த முற்போக்கு சிந்தனையாளர்களின் கேள்விகளுக்கும் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பதையே இந்த ஆத்திகர்கள் பதிலாக அளித்தனர்.
பகுத்தறிவாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகள்:
1) அசுரன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்தானென்றால் எதன் மீது நின்று பூமியை சுருட்டினான்? அவன் ஒளித்துவைத்த கடல் எதில் இருந்தது.?
2) கடலுக்கடியில் வைக்கப்பட்ட பூமியை மீட்க இந்த மகாவிஷ்னு மீனாக மாறி சென்றார் என்றாலும் ஏற்கலாம். பன்றியாக அவதரித்து கடலுக்கடியில் எப்படி சென்றார்?
3) பூமி தட்டை வடிவம் என்ற நம்பிக்கை அறிவியலால் தவிடுபொடியாகிவிட்ட நிலையில், பாயாக சுருட்டியதாகவும், மீண்டும் விரித்துவிடப்பட்டதாகவும் இந்த கதையில் வருகிறதே இதையும் இந்த தீபாவளி கொண்டாடும் அறிவுசார் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
4) பூமிக்கும், பன்றிக்கும் உறவு சாத்தியமா? எப்படியோ முயற்சி செய்து பன்றி பூமியை உறவுகொண்டுவிட்டாலும் பூமி கருத்தரிப்பது சாத்தியம்தானா? அப்படியே கருத்தரித்தாலும் அங்கே பன்றியோ, பூமி போன்ற இன்னொரு கோளோ பிறக்காமல் அசுரன்தான் பிறப்பானா? இதையும் ஏற்றுக்கொண்டுதான் இங்குள்ள பேராசிரியர்களும், மருத்துவர்களும் மாமேதைகளும் தீபாவளி நியாயத்தை ஏற்கிறார்களா?
*இவன் விதண்டாவாதம் பேசுகிறான் என்ற பதிலையே வழக்கம்போல தந்துவிட்டு செல்வீர்களாக...
பண்பாட்டு துரோகம் தீபாவளி:
"""""""""""""""""""""""""""""""""""""
ஆரியர்களுக்கும் ஆரியரல்லாதோருக்குமான முரண்களையும், மோதல்களையுமே இந்து மத இதிகாசங்கள் எங்கிலும் தேவர்கள், அசுரர்களுக்கு இடையேயான யுத்தங்களாக பதிவு செய்து இருக்கிறார்கள். இதிகாசங்களில் கூறப்படும் வானுலக தேவர்கள் ஆரியர்கள் என்பதை புரிந்துகொள்ள மக்கள் தவறிவிட்டார்கள். அல்லது புரிந்துகொண்டும் ஆரிய அடிமைத்தனத்திற்கு சுயமரியாதையற்று பழகிக்கொண்டனர். பூதேவர்கள் (பூவுலக தேவர்கள்) என்பது பிராமனர்களை குறிக்கிற வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியரல்லாதோரையே சூரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் ஆரிய இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. ஆரியத்தின் எதிர் தரப்பான, ஆரியத்தால் இழிவான சித்தரிப்புக்கு உள்ளான ஆரியரல்லாதோரே திராவிடர் என்று அணிதிரட்டப்படுகிறார்கள். தமிழரல்லாத மராத்தியரான அண்ணல் அம்பேத்கரும் கூட தமிழர் என்ற சொல்லாடலே திரமிளர் என்று மருகி, திராவிடர் ஆனது என்கிறார். (திராவிடர் என்ற சொல்லை கேட்டாலே தீயை மிதித்ததை போல பதட்டமடைகிற பெயர்தாங்கி தமிழ்தேசிய காவி அடியாட்களும் கூட ஆரிய திரிபுவாதங்கள் குறித்து வாய் திறக்கமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்)
ஆக இன்று இந்தியா என்றழைக்கப்படும் பண்டைய குமரிக்கண்டம் முழுவதுமே தமிழ் வழக்கிலிருந்திருக்கும், அனைவரும் தமிழர்களாகவே இருந்திருந்திருப்பார்கள் என்பதை அண்ணலும் உறுதிப்படுத்துகிறார். இந்தியாவின் பூர்வகுடிகளான நாகர்களின் தொன்மை இன்னமும் தமிழகத்தில் இருப்பதாக அண்ணல் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது..
இதிகாசங்களில் குறிப்பிடப்படும் அசுரன், சூரன், அரக்கன், வானரம் என்பதெல்லாம் நாம்தான் என்பதையும், ஆரிய இதிகாசங்கள் கோடியவர்களாகவும், கோர வடிவம் உடையவர்களாகவும், கோமாளித்தனம் நிறைந்தவர்களாகவும் சித்தரிப்பது நம்மைதான் என்பதையும், உலகிலேயே தம் இனத்தவன் சாவை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம்தான் என்பதையும் உணர்ந்து அவமானம் கொள்வோம்..
நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத அபத்தம் தீபாவளி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மேற்கத்திய நாடு ஒன்றில் தக்காளி திருவிழா நடைபெறுகிறது. தக்காளி உற்பத்தி தன்னிறைவை அடைந்து மிதமிஞ்சிய விளைச்சல் ஏற்பட்டதும் அம்மக்கள் தக்காளியை ஒருவர் மீது வீசி அதை கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு தேசத்தில் திராட்சையை வைத்து கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இப்படியாக உலகம் முழுவதுமே உற்பத்தியை, விளைச்சலை, எழுச்சியை அடிப்டையாக வைத்தே கொண்டாட்ட நாட்கள்கள் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் தீபாவளி இந்த இனத்தின் எந்த எழுச்சியை, எந்த வளர்ச்சியை, எந்த உற்பத்தியை குறிக்கிற வகையில் கொண்டாடப்படுகிறது?
நமது உற்பத்தியை, விளைச்சலை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல்தான். பொங்கல் பண்டிகை காலகட்டத்தில்தான் நம் மக்கள் பணப்புழக்கத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பார்கள். பொங்கல் பண்டிகை காலகட்டத்தில்தான் அழகான வசந்தகால சூழல் இங்கே நிலவுகின்றது. பொங்கல்தான் நமது மண்ணின் இயல்புக்கு முரண்படாத பண்டிகை. பொங்கல்தான் அறிவியலுக்கு புறம்பல்லாத பண்டிகை. பொங்கல்தான் கட்டுக்கதைகளை காரணமாக சொல்லாத யதார்த்த பண்டிகை.
தமிழ் பொங்கலை கொண்டாடுவோம். ஆரிய தீபாவளியை புறக்கணிப்போம்..
இதையும் வெறும் பதிவாக மட்டுமே எண்ணி கடந்து செல்வீர்கள் என தெரிந்தும் இதை எழுதுகிறேன். எழாமல் கிடப்பது உம் இயல்பு, எழுச்சிப்பறை ஒலிப்பது எம் கடமை..
-மு.ரா.பேரறிவாளன் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக