சனி, 15 அக்டோபர், 2016

நலம் பெற்று வாருங்கள் முதல்வரே..வாழ்த்துக்கள்.!

மிகப்பெரிய குடும்பம், தாத்தா, அரச குடும்பத்தில் ஒரு நீதிமன்ற மருத்துவர்,
மேல்கோட்டே "ஆர்த்தடாக்ஸ்" அய்யங்கார் குடும்பத்தில் செழிப்போடும், செல்லமாகவும் தான் வாழ்க்கையைத் துவக்கியவர் "கோமளவல்லி" என்கிற ஜெயலலிதா. கோமளவல்லி என்பது குடும்ப வழக்கமாக அவருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர். அம்மு என்று தாயாரால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராமன் இரண்டு வயதிலேயே இறந்து போக வேதவள்ளி அம்மாவின<அரவணைப்பில், செல்லப் பிள்ளையாக பெங்களூரில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கே திரும்பினார். சிறப்புக் கல்வி, கலை, இசை என்று இளம் வயதில் ஆகச் சிறந்த மாணவி, பிஷப் காட்டன், சர்ச் பார்க் என்று அவர் படித்த பள்ளிகளில் எல்லாம் அவரது அறிவுக் கூர்மையும், சிறப்பிடங்களும் இன்னும் நிலைத்திருக்கிறது. பள்ளிக் கல்வியை முடித்த பிறகு ஒரு வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. ஸ்டெல்லா மேரீசில் இன்னமும் அவருக்கான இருக்கை நிரப்பப்படாமலேயே இருக்கிறது.


தெரிந்தோ தெரியாமலோ சின்னம்மா அம்புஜவல்லியோடு சென்னைக்கு வந்தார். தாயைப் பிரிந்து பரிதவித்த ஒரு சின்னஞ்சிறு பெண்ணாக கண்ணீரோடு தான் சென்னையில் காலம் கழித்தார். காலம் வெவ்வேறு கணக்குகளைப் போட்டபடி அவரை திரைத் துறைக்குள் தள்ளிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு வயதில் தந்தையை இழந்தார், பிறகு பிரியமான தாயோடு வாழும் நிலையை இழந்தவர்.

திரைத்துறையில் தனித்த ஒரு பெண்ணாக வெற்றி பெறுவது அத்தனை எளிதான நிகழ்வாக இல்லாத சூழலில் திரைத்துறையில் வெற்றியும் பெற்றுப் பின்னர் அரசியலுக்குள் நுழைந்து ஆணாதிக்க உலகில் அவர் இன்று அடைந்திருக்கும் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும், வாசிப்பும், தன்னம்பிக்கையும் இருக்கிறது. ஆகச் சிறந்த ஆண் ஆளுமைகளான பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் என்ற வரிசையில் ஜெயலலிதா பிடித்த இடம் மகத்தானது.

ஜெயலலிதாவின் அரசியல் பிழைகள், ஊழல்கள், அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் உருவாக்கிய அடிமைகளின் அரசியல் என்று எல்லாவற்றையும் தாண்டி அவர் மீது அதிமுகவின் கடைசித் தொண்டன் காட்டுகிற பரிவும், அன்பும் உண்மையில் வியப்புக்குரியது. அவருடைய ஆட்சியில் ஊழல் எல்லா மட்டங்களிலும் அதிகாரப் பூர்வமாகவே நடைபெற்றது என்பதற்குக் கடைசியாகப் பிடிபட்ட நத்தம் விஸ்வநாதனின் கொள்ளைகள் சான்று.

அவர் செய்தாரோ அவர் சார்ந்த மன்னார்குடிக் குடும்பம் செய்ததோ, மொத்தத்தில் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது, இரண்டாம் நிலைத் தலைவர்களோ, முறையான கட்டுமானப் படிகளோ இல்லாத அ.தி.மு.க வை விரும்பியே உருவாக்கினார் ஜெயலலிதா. உணர்ச்சிகரமான அரசியலுக்கே பழக்கப்பட்ட தமிழக மக்கள், குறிப்பாகக் பெண்கள் அவரைத் தங்களின் மீட்பராக நம்பினார்கள். இன்னுமும் நம்புகிறார்கள்.

அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிற எந்தப் பெண்ணும் ஜெயலலிதாவின் ஆளுமைகளில் சிலவற்றை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம், அவரது வாசிப்பு, அவரது பன்மொழித் திறன், அவரது தன்னம்பிக்கை, அவரது விடாமுயற்சி, சளைக்காத உழைப்பு என்று பலவற்றை நேர்மறையாக எடுத்துக் கொண்டாலும் அவரது வாழ்க்கையில் எதிர்மறைக் குறிப்புகள் மிக அதிகம்.

இந்திய சமூகத்தின் நிலைத்த குடும்ப வாழ்க்கை குறித்த ஏக்கம் அவருக்குள் எப்போதும் உண்டு, வளர்ப்பு மகன் திருமணம் என்பது மற்றவர்களால் ஒரு ஆடம்பர பகட்டு விழாவாகவும், அதிகார வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டாலும், அது அவரது ஆழ்மன வேட்கை, ஒரு குடும்ப நிகழ்வைத் தன்னளவில் நிகழ்த்தத் துடித்த ஒரு தாயின் மனப்படிமம் அது என்றுதான் இன்றுவரை நான் நம்புகிறேன்.

கடைசியாக அவர் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்திய ஒரு சொற்றொடர் அவரது உறவுகள் அற்ற தனிமையை சொல்லாமல் சொல்லியது. "எனக்கென்று யார் இருக்கிறார்? ஆகவே நான் உங்களுக்காகவே உழைப்பேன்." இந்தச் சொற்கள் வெறும் தேர்தல் பரப்புரைச் சொற்கள் என்று என்னால் நம்ப முடியாது, அது உறவுகள் மற்றும் இழப்புகள் குறித்த ஈரம் தோய்ந்த ஏக்கப் பெருமூச்சு.

இதோ அநேகமாகப் பதினைந்து நாட்கள், சிக்கலான சூழலில், என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாத நிலையில், நெருங்கிய உறவுகள் யாருமற்ற இருட்டறையில் தமிழகத்தின் அரசியல் வரலாற்றைக் கடந்த 10 ஆண்டுகளில் மூர்க்கமாகச் செலுத்திய ஒரு ஆளுமை உறங்கிக் கிடக்கிறது, அவர் சுய நினைவோடும், சிக்கலற்ற உடல்நிலையோடும் இருப்பாரேயானால், அதிமுகவின் கடைசித் தொண்டர்களில் மனநிலையை இந்த அளவுக்கு குழப்பம் உருவாக்க அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

இந்துத்துவத் தீவிரவாதிகளான பாரதீய ஜனதாவின் கோர அரசியல் தீங்குகள் கொடுந்தீயைப் போல தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் பறிக்க நினைக்கிற ஒரு இக்கட்டான காலச் சூழலில், ஜெயலலிதாவின் தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவரோடு துணையிருக்கும் சசிகலாவோ, மன்னார்குடிக் குடும்ப உறுப்பினர்களோ தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

அவரது உடல்நிலை குறித்தும், எதிர்காலம் குறித்தும் உண்மையிலேயே சசிகலா & கோவுக்கு அக்கறை இருந்தால் ஊடகத்திடமோ, அதிமுகவின் மூத்த அரசியல் தலைவர்களுடனோ ஜெயலலிதா குறித்த உண்மைத் தகவல்களைப் பகிர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.

காய்ச்சல், நீர்க்கோர்ப்பு என்று அனுமதிக்கப்பட்டு வெறும் அனுமானங்களால் வழிநடத்தப்பட்ட பத்து நாட்களுக்கும் மேலாக ICU வில் ஒரு மாநிலத்தின் முதல்வர் வைக்கப்பட்டிருக்கிறார், ஆட்சியும், கட்சியும் நிற்கதியாக நின்று கொண்டிருக்கும் இந்தச் சூழல் தொடருமேயானால் சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் மட்டுமில்லாது, அவர் வளர்த்து வைத்திருக்கிற அடிமைகளாலேயே கலவரங்கள் நிகழும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று வரவேண்டும் என்பதே நமது இதயப் பூர்வமான ஆசை. அவர் கோட்பாட்டு எதிரியாகட்டும், ஊழல் பெருச்சாளியாகட்டும், குற்றவாளியாகக் கூட இருக்கட்டும், மானுட உடல் மீதான மதிப்பை பெரியாரின் பேரன்களான நாம் அவருக்கும் காட்டுவோம்.

நலம் பெற்று வாருங்கள் முதல்வரே..வாழ்த்துக்கள்.!  முகநூல் பதிவு ஜெயா பெயில்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக