ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம்

டில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கோரும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக டில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி அனில் ஆர் தவே வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானம் உடைய பெற்றோரை பராமரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கிறது. இது சட்டபூர்வமான கடமையாகவும் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் திருமணம் முடிந்ததும் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோருக்கும் மகனுக்கும் தொடர்பில்லாத கலாச்சாரம் நிலவி வருகிறது.
ஆனால் இந்தியாவில் இந்து சமுகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரிந்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானது. பணம் சம்பாதிக்க முடியாத அல்லது குறைவாக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெற்றோர் அவர்களது மகனின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களை பிரிப்பது சரியான செயல் அல்ல. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடம் இருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் '' என கூறப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மாமியார்-மருமகள் சண்டையால் பல கூட்டு குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனமாக வாழும் குடும்பங்கள் அதிகமாகி வருகிறது. இது இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு குடும்பங்கள் மற்றும் உறவுகள் மீதுள்ள பாசம் பற்றிய புரிதல் இல்லாமலேயே போய் விட கூடிய நிலை ஏற்படும் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்து குடும்பநல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக