ஞாயிறு, 2 அக்டோபர், 2016

இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை


பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ள நிலையில், இந்தியத் தொலைக்காட்சி சேனல்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு சனிக்கிழமை தடை விதித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவம் முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இத்தகைய தாக்குதலை இந்திய ராணுவம் முன்னெடுத்தது. இதனால், இரு நாடுகளின் எல்லையிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், வியாழக்கிழமை தடை விதித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி சேனல்களை வரும் 15-ஆம் தேதி முதல் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்காற்று ஆணையம் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் வரும் 15-ஆம் தேதி முதல் ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை தொலைக்காட்சி சேனல்களை விநியோகிப்பவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக