ஞாயிறு, 16 அக்டோபர், 2016

முதல்வரின் உடல் நிலை ... மர்மம் நீடிக்கிறது ... சிங்கப்பூர் மருத்துவ மனையில் உள்ளது இங்கில்லியா ?

மின்னம்பலம்.காம்  :முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களும், நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பேலும் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவது நாம் அறிந்ததேயாகும். 24ஆவது நாளாக அப்பல்லோவில் தொடர்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை. அவசர சிகிச்சை நிபுணரான லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவருடன் இவர்களுடன் அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் என ஒரு மருத்துவக் குழுவின் 24 மணி நேரக் கண்காணிப்பில் இருந்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. சிகிச்சையளித்துவிட்டு லண்டன் சென்ற ரிச்சர்ட் பேல் மீண்டும் சென்னை வந்துவிட்டநிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நிதிஷ் நாயக், கில்னானி, அஞ்சன் திரிகா ஆகியோருடன் இணைந்து இதுவரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையிலிருந்து இரண்டு சிறப்பு மருத்துவர்கள் வந்து சிகிச்சை குழுவில் இணைந்துள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது. அவர்கள் எந்தத் துறையின் சிறப்பு நிபுணர்கள் என்பது அப்பல்லோ நிர்வாகத்தால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லக்கூடிய அளவில் அவரது உடல்நலம் இல்லை என்ற காரணத்தால் வெளிநாட்டு மருத்துவர்களை அப்பல்லோவுக்கு அழைத்து சிகிச்சை அளிக்கலாம் என்ற திட்டம் மருத்துவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் சென்னைக்கு வந்து முதல்வருக்கு சிகிச்சையளித்தார். அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தார்கள். இப்போது, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் சிகிச்சை குழுவில் இணைந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். 24 நாட்கள் படுக்கையிலேயே இருப்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவதால் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபி சிறப்பு நிபுணர்கள், நாளை ஞாயிறு சென்னை வந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சையைத் தொடர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையின் சிறப்பு என்ன? ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது முதன்முதலில் அறிவுறுத்தப்பட்ட மருத்துவமனை சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபத். நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுக்கான சிறப்பு சிகிச்சைகள் உலகளவில் கிடைக்கும் மருத்துவமனைகளில் மவுண்ட் எலிசபத் முக்கியமானது. எல்லா மருத்துவத் துறைகளுக்குமான சிறப்பு சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. சிறுநீரகங்களில் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு வலி அதிகம் தெரியாமல் நவீன முறையில் டயாலிசிஸ் செய்யும் இயந்திரங்கள் இங்குள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்காக இங்கு தங்கி சிகிச்சை எடுத்துள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சையும் இங்குதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் இங்குதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். நடிகரும் தேமுதிக-வின் தலைவருமான விஜயகாந்த் கண் மற்றும் கல்லீரல் பிரச்னைகளுக்கு இருமுறை சிங்கப்பூர் சென்று எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கன்னட நடிகர் அம்பரீஷ் சுவாசப் பிரச்னைகளால் அவதிப்பட்டபோது, கர்நாடக அரசே முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு சிறப்பு சிகிச்சைக்காக மவுண்ட் எலிசபத் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற வைத்தது. சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங், தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இங்குதான் செய்து கொண்டார். இவ்வாறு இந்தியாவின் பிரபலங்கள் பலர் சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில்தான் சிகிச்சையை எடுத்து நலமுடன் திரும்பி வந்திருக்கின்றனர். எவ்வளவு சவாலாக நோயாளியின் உடல்நலம் இருந்தாலும், கடுமையாகப் போராடி பிரச்னைகளை தீர்ப்பதில் புகழ்பெற்றவர்கள் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவர்கள்.
மவுண்ட் எலிசபத் மருத்துவமனை 1979ஆம் ஆண்டு, பார்க்வே ஹெல்த் என்ற அமைப்பால் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. இதன் சிறப்பம்சமான துறைகளாக இதயநோய் பிரிவு, நரம்பியல் துறை, புற்றுநோய்க் கட்டிகள் சிகிச்சைப் பிரிவு ஆகியவை அறிவிக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு முதல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக புகழ்பெறத் தொடங்கியபோதுதான் உலகப்புகழை அடைந்தது. இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட முதல் தனியார் மருத்துவமனை என்ற பெயரையும் மவுண்ட் எலிசபத் பெற்றுள்ளது. கதிரியக்க சிகிச்சைப் பிரிவும் சிங்கப்பூரில் இங்குதான் முதன்முதலாக தொடங்கப்பட்டது. புரூனே அரச குடும்பத்தினர் தங்களது மருத்துவ வசதிக்காக இங்கு ஒரு ஆடம்பரமான ராயல் சூட் ஒன்றை தங்குவதற்காக கட்டினர். பின்னர், பெரும் பணக்காரர்கள் இங்கு சிகிச்சை எடுக்கவந்தபோது இந்த ராயல் சூட் ரூமில் தங்கிக் கொள்வதை பெருமையாக கருத ஆரம்பித்தனர். நவீனமயமாக்கப்பட்ட மருத்துவ வசதிகளாலும், திறமையான மருத்துவர்களாலும் விரைவில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர்கள், அரச குடும்பத்தினர், தொழிலதிபர்கள் என தீவிர சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் காரணமாக இந்த மருத்துவமனைக்கு வரத் தொடங்கினார்கள். பிரபலங்கள் வரத் தொடங்கியபிறகு மவுண்ட் எலிசபத் மருத்துவமனையின் புகழ் ஆசியாவெங்கும் பரவத் தொடங்கியது. அதற்குமுன்னர், உயர்தர சிறப்பு சிகிச்சைகள் என்றால் இங்கிலாந்துக்கோ அல்லது அமெரிக்காவுக்கோதான் செல்லவேண்டியிருந்தது. ஆனால் எலிசபத் மருத்துவமனை புகழ்பெறத் தொடங்கியதும் இந்தியாவிலுள்ள பிரபலங்கள் சிங்கப்பூருக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்தியாவிலிருந்து பயண நேரமும் குறைவு. மூன்று மணி நேரத்தில் சிங்கப்பூருக்கு சென்றுவிட முடியும். இந்தியாவைப் போலவே எல்லா வசதிகளும் சிங்கப்பூரில் கிடைக்கும். செலவும் அமெரிக்காவை ஒப்பிடும்போது குறைவுதான். உள்ளுறுப்பு மற்றும் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையிலும் எலிசபத் மருத்துவமனை தனித்து விளங்குகிறது. இங்கு சாதாரண தனிஅறைக்கு இந்திய மதிப்புப்படி 45000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 345 படுக்கையறைகளைக் கொண்டு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியுள்ள மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்துள்ளதும், 10/10/ 2016க்குப் பிறகு, அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எந்த அறிக்கையும் இன்று மாலை 6 மணி வரை வராமல் இருப்பதும் முதல்வர் உடல்நிலை குறித்த மர்மங்கள் இன்னும் விலகாமல் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக