புதன், 12 அக்டோபர், 2016

திருநாவுகரசு: கருணாநிதிக்கு நாதசுரம் வாசிக்க முடியாது!.... தமிழக காங்கிரஸ் டமால்!


மின்னம்பலம்.காம் : தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருநாவுக்கரசர் தலைமையில் இன்று மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கூட்டத்தில், திருநாவுக்கரசரை தலைவர் ஆக்கிய தேசிய தலைமைக்கு நன்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்குக்கு கண்டனம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தின் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் உள்ளே நடந்த தகவல்கள்தான் முக்கியமானவை.
திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அனைத்து மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்ட நினைத்து 61 மாவட்டத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பினார். ஆனால் 57 மாவட்டத் தலைவர்களே இன்றைய கூட்டத்துக்கு வந்தனர். கூட்டம் ஆரம்பிக்கும்முன்பே திமுக கூட்டணி பற்றி காரசாரமான விவாதங்கள் இக்கூட்டத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் மாவட்டத் தலைவர்கள் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் தொடங்கிய உடன் திருநாவுக்கரசர் கூட்டணி பற்றியெல்லாம் இங்கே பேச வேண்டாம். கட்சியின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசுவோம் என்று கூறினார். ஆனால் வந்திருந்த மாவட்டத் தலைவர்களுள் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக முறையாக சீட்டுகளை ஒதுக்காததால் தமக்கும் தம்முடைய ஆட்களுக்கும் சீட் கிடைக்கவில்லை என்ற பொருமலில் இருந்தவர்கள் திமுக பற்றிய பேச்சை எடுத்தார்கள் “திமுக உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு ஒழுங்காக சீட் ஒதுக்கவில்லை” என்று பேச, காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் இளங்கோவன் எழுந்து “திமுக கூட்டணிதான் நமக்கு பொருத்தமான கூட்டணி” என்று பேசினார். முன்னாள் தலைவர் தங்கபாலு பேசும்போதும் “திமுக கூட்டணிதான் வேண்டும்” என்று பேச, கடைசியாகப் பேசவந்த திருநாவுக்கரசர் “சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் படத்தையாவது வெளியிடுங்கள் என்று கருணாநிதி சொன்னார். நான் படம் வெளியிடவேண்டிய அவசியம் இல்லை என்றேன். துணைமுதல்வர், பொறுப்பு முதல்வர் வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னார். நான் அது தேவையில்லை என்று சொன்னேன். அது அவர்கள் கருத்து. அதை நாம் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. எதற்கெடுத்தாலும் கருணாநிதிக்கும், திமுக-வுக்கும் நாம் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டோ, ஒத்து ஊதிக்கொண்டோ இருக்க முடியாது” என்றார் திருநாவுக்கரசர். இதைக்கேட்ட சில மாவட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் முடிந்து வெளியில்வந்த சிலர் “ஏற்கனவே இதேபோன்று ஈ.வி.கே.எஸ். தலைவராக இருந்தபோது நாதஸ்வரம் ஊத முடியாது என்று திமுக தலைவரைச் சொல்ல அதை நேரடியாக சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்று. பின்னர் ஈ.வி.கே.எஸ். மன்னிப்புக் கேட்ட பின்னர்தான் நிலைமை சுமூகமானது. கடந்தகால அனுபவங்கள் இப்படியிருக்க. பதவிக்கு வந்து ஒரு மாதம் ஆகவே இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும்நிலையில், திருநாவுக்கரசர் இப்படிப் பேசுவது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை” என்று புலம்பியபடியே கிளம்பினார்கள் சில மாவட்டத் தலைவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக