வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஆறுமுக நாவலரின் வெள்ளாள வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை

thetimestamil.com  : எல்.ஆர். ஜெகதீசன் : ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ
சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை. அது வரலாற்றின் நீட்சி. இயல்பான பரிணாம வளர்ச்சி. பெரியாரின் வாரிசுகள் முப்பதாண்டு காலம் முட்டாள்களாக இருந்ததற்கு நாவலரோ அவர் தம் கொள்கை வழுவா வாரிசுகளோ எப்படி பொறுப்பாவார்கள்? அனானப்பட்ட வள்ளலாரின் அருட்பாவையே மருட்பா என்று மறுதலித்த பாரம்பரியம், இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு மாநிலமான மஹாராஷ்ட்ரத்தில் பிழைக்கப்போன தமிழ்நாட்டுத்தமிழனை விரட்டியடிக்கவே உருவான சிவசேனையை அரசியல் ஆதர்ஷமாக கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பல லட்சம் மலையகத்தமிழனின் பிரஜா உரிமையை பறித்து இலங்கையைவிட்டு தமிழ்நாட்டுக்கு கப்பலேற்றுவதை ஆதரித்து வாக்களித்தது முதல் யாழ்ப்பாண முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தது வரை சிவ சேனைக்கும் சிவ சேனாவுக்கும் வரலாறு நெடுக இயல்பான ஒற்றுமைகள் ஏராளம் உண்டு.

“தொப்புள்கொடி” பாசத்தில் பெரியாரின் வாரிசுகள் அடிப்படை முரண்களை பார்க்க மறந்ததற்கும் மறுத்ததற்கும் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. தமிழ்நாட்டுத் தமிழ்தேசியமும் சரி யாழ்ப்பாண தமிழ்தேசியமும் சரி சமூகதளத்திலும் அரசியல் களத்திலும் திராவிட இயக்கத்துக்கு நேர் எதிரானவை. அடிப்படை முரண்கள் கொண்டவை. ஜாதிக்கும் அதன் ஆதிக்கத்துக்கும் எதிரான, மதம் உள்ளிட்ட எல்லாவிதமான மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான ஒரு இயக்கம், அவை இரண்டையும் தன் அடிப்படை அரசியல் மற்றும் சமூக மூலதனமாக கொண்ட ஒரு இயக்கத்தோடு எப்படி இணைந்து பயணிக்க முடியும்? பணி செய்யமுடியும்?

இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் எண்பதுகளில் தீவிரமடைந்த “பரஸ்பர 
அரசியல் தேவை/பயன்பாடு கருதி அமைத்துக்கொண்ட தற்காலிக கூட்டணி ஏற்பாடு” 
தவளைக்கும் பருந்துக்குமான முரண்கூட்டணி. அந்த முரண் கூட்டணியும் கூட 
கட்சிசாரா தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை 1991 இராஜீவ் கொலையோடு 
முடிந்துபோனது. முறிந்தும் போனது. அதையும் தாண்டி மிஞ்சிய “முறிந்தபனை”யின்
 மிச்ச சொச்சங்கள் 2009 முள்ளிவாய்க்காலில் மூழ்கிப்போயின.
இனி இவை இரண்டும் ஒட்டவும் உறவாடவும் மிச்சம் மீதி காரணங்களோ தேவைகளோ இரு தரப்புக்கும் இருப்பதாக தெரியவில்லை. அதன் இறுதி எச்சரிக்கையே “சிவ சேனை”.
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்கிற யதார்த்தத்தை இனியேனும் இருதரப்பும் ஏற்கும் என்று எதிர்பார்க்கலாம். அவரவர் பசிக்கு அவரவரே சாப்பிட வேண்டும். அவரவர் சிலுவையை அவரவரே சுமக்க வேண்டும்.
பின்குறிப்பு: இது முழுக்க முழுக்க அரசியல் பதிவு. இலக்கியம் உள்ளிட்ட வேறு அனைத்துவிதமான “தொப்புள் கொடி வர்த்தக கூட்டணி”களுக்கு இந்த அளவுகோல்கள் பொருந்தாது.
எல். ஆர். ஜெகதீசன், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக