திங்கள், 31 அக்டோபர், 2016

மக்கள் நலகூட்டணி வைகோவின் தன்னிச்சையான அறிவிப்புக்களால் உடைந்தது

2016 சட்டமன்றத் தேர்தலின் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது ‘மக்கள் நலக் கூட்டணி’. அதில், தானாக முன்வந்து தே.மு.தி.க-வை விஜயகாந்த் இணைத்தபோது, மக்கள் நலக் கூட்டணி அதிசயமாகப் பார்க்கப்பட்டது. கூட்டணிக்குக் கட்சிகள் இல்லாமல் களம் கண்ட தி.மு.க-வே தேர்தல் ரிசல்ட் வரும்வரைக்கும் மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆனது. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, மக்கள் நலக் கூட்டணி மீது இருந்த ஆச்சர்ய - அதிசய பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழகத்தின் தலையெழுத்து அ.தி.மு.க.; அ.தி.மு.க இல்லையென்றால், தி.மு.க என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. தே.மு.தி.க-வும், ஜி.கே.வாசனைத் தலைவராகக் கொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸும் பிரிந்துபோயின. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணி சிதறவில்லை. தேர்தல் நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியாகவும் போராட்டக் களத்தில் மக்கள் நலக் கூட்டியக்கமாகவும் செயல்படுவோம் என்று அறிவித்து தொடர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட்டனர். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும், ஒற்றுமையாகத் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டனர். ஆனால், அதன்பிறகு தொடரும் நடவடிக்கைகள் அந்தக் கூட்டணிக்குள் குழப்பம் மிகப்பெரிய அளவில் உருவாகி உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.


குழப்பங்களின் நாயகன் வைகோ!
மக்கள் நலக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு முழுமுதல் காரணம் வைகோதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, வைகோவின் அதிரடி முடிவுகள், உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகள்தான் அந்தக் கூட்டணிக்குள் எழும் சர்ச்சைகளுக்கு ஆகப்பெரிய காரணமாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, அந்தத் தேர்தல் தோல்விகள் பற்றி மக்கள் நலக் கூட்டணியில் அலசப்பட்டன. அதுபற்றி, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அந்தக் கூட்டணியின் தலைவர்கள் சில இடங்களில் பதில் அளித்தனர். அவர்களில் வைகோவைத் தவிர வேறு யாரும், மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு விஜயகாந்த்தும், ஜி.கே.வாசனும் ஒரு காரணம் என்ற கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், வைகோ பல இடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக திருமாவளவன் பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘‘மக்கள் நலக் கூட்டணிக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், தே.மு.தி.க-வும், ஜி.கே.வாசனும் இணைந்தபிறகுதான் அந்தக் கூட்டணி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது’’ என்றார். மேலும், ‘‘திருமாவளவன் அவருடைய தொகுதியில் கடைசி நேரத்தில் பிரசாரம் செய்யாததற்கு விஜயகாந்த்-தான் காரணம். விஜயகாந்த் அவருடைய தொகுதியில் பிரசாரம் செய்ய கடைசி நாளில் திருமாவளவனை அழைத்தார். அதை ஏற்று திருமாவளவன், கடைசி நாளில் தன்னுடைய தொகுதியை விட்டுவிட்டு, விஜயகாந்த் தொகுதியில் பிரசாரம் செய்தார். அதனால்தான், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோற்றுப்போனார்’’ என்றார். இதை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ரசிக்கவில்லை. ஏனென்றால், நாளைக்குக் கூட்டணி முறிந்தால், நம்மைப் பற்றியும் வைகோ இப்படித்தானே பேசுவார் என்று மற்ற கட்சி அணிகளில் அப்போதே சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக சி.பி.ஐ.எம் கட்சிக்குள் அதை மிக சீரியஸான விவகாரமாகவே பார்த்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டு... இடைத்தேர்தல் வேட்டு!
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஒற்றுமையாகத் தங்கள் போட்டியிடும் இடங்களைப் பிரித்துக்கொண்டது மக்கள் நலக் கூட்டணி. ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் அவர்களுக்குள் விரிசல்தான் உண்டானது. 3 தொகுதிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்ததும், மக்கள் நலக் கூட்டணியில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக, அதில் மாறுபட்ட கருத்தை முன்வைத்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

மக்கள் நலக் கூட்டணி பொதுச் செயலாளர் வைகோ!
‘மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வைகோ, அந்தக் கூட்டணியின் பொதுச் செயலாளர்போல் செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிர விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத வைகோ, ‘‘மக்கள் நலக் கூட்டணி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது’’ என்று தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டார். இது தஞ்சை மற்றும் மதுரைப் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் அணிகளிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியது. அத்துடன், சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் மாநிலக் குழு உறுப்பினர்களிடமும் எரிச்சலை உண்டாக்கியது. அவர்கள் மேல்மட்டத்தில் பேசியபோது, “வைகோ ம.தி.மு.க-வுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர். ஆனால், அவர் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுச் செயலாளர்போல் செயல்படுகிறார். இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை நம்முடைய கட்சிக்குள் நாம்தான் பேசி முடிவு செய்ய வேண்டும். அதை அவர் தன்னிச்சையாக முடிவு செய்யக் கூடாது” என்று வெறுப்புக் காட்டி உள்ளனர். இந்த மோதல், இப்போது அல்ல... டெல்லியில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கப்போனபோதே வெடித்துள்ளது. அங்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்துப் பேசியபோது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்தி உள்ளனர். அப்போதே கோபப்பட்ட வைகோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது வீண் வேலை என்று வீராப்புக் காட்டி வந்துவிட்டார். அதன்பிறகு, தமிழகம் வந்ததும் இந்த விவகாரத்தை வளரவிடக் கூடாது என்று நினைத்தவர், ‘மக்கள் நலக் கூட்டணி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது’ என்று அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரித்தது.

தி.மு.க-வோடு இணக்கம் காட்டும் திருமா!
இடதுசாரிகளுக்கும் வைகோவுக்குமான உறவு இப்படி அதிருப்தியாகத் தொடரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒருவகையான ஊசலாட்டத்தில் இருக்கிறார். காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தையொட்டி அது அப்பட்டமாக வெளிப்பட்டது. திருமாவளவனுக்கு மக்கள் நலக் கூட்டணியின் சில முடிவுகள் உவப்பாக இல்லை. அதை உணர்ந்துகொண்டு தி.மு.க அவரை நெருங்கிக்கொண்டிருக்கிறது. திருமாவளவனும் தனக்கு எப்போதும் அணுக்கமான தி.மு.க-வோடு லேசாக இணக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, தி.மு.க காவிரிப் பிரச்னையையொட்டி இரண்டு அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டியது. அக்டோபர் 6-ம் தேதி ஒரு கூட்டத்தை தி.மு.க கூட்டியது. அதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், அந்தத் தகவல் முறையாக திருமாவளவன் மற்றும் வைகோவுக்குச் சொல்லப்படவில்லை. அவர்களும் அதில் கலந்துகொள்ளவில்லை. அப்போது மக்கள் நலக் கூட்டணிக்குள் அதுபற்றி பிரச்னை எழுந்தபோது, “எங்கள் கட்சியில் விவசாய சங்கங்களுக்கு சில தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி அவர்கள் கலந்துகொண்டனர்” என்று சமாதானம் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்கள்.

கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு நீதி... சிறுத்தைகளுக்கு ஒரு நீதியா?

காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க கூட்டிய இரண்டாவது கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள திருமாவளவன் ஆர்வம் காட்டினார். ஆனால், இந்த முறை வைகோவும், கம்யூனிஸ்ட்களும் அதற்குச் சம்மதிக்கவில்லை. திருமாவளவன் அதுபற்றிக் கேள்வி எழுப்பியபோது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் அறிவாலயத்தில் தி.மு.க கூட்டிய கூட்டத்துக்கு நாம் போனால், அது தேவையற்ற குழப்பத்தைத் தொண்டர்கள் மத்தியில் எழுப்பும் என்றனர். அதைக் கேட்ட திருமாவளவன், “கட்சிகள் கலந்துகொள்ள வேண்டாம். அக்டோபர் 6-ம் தேதி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயச் சங்கங்கள் கலந்துகொண்டதைப்போல, இந்தக் கூட்டத்திலும் நம்முடைய விவசாயச் சங்கங்களை அனுப்பலாம்” என்று வாதாடினார். ஆனால், அதைக் கேட்டு டென்ஷனான வைகோ, “விவசாயச் சங்கங்கள் கலந்துகொண்டாலும், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதும் ஒன்றுதான்” என்றார்.
ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஒதுங்குகிறேன்! மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் இப்படி ஆளாளுக்குத் தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்ததால், நொந்துபோன வைகோ, ‘‘தான் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்று தனது கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தி உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் வைகோ எடுக்கும் இந்த முடிவு, மிகப்பெரிய விரிசலை கட்சித் தொண்டர்கள் மத்தியில் உருவாக்கும் என்று சொல்லித் தற்காலிகமாக அவரைச் சமாதானப்படுத்தி உள்ளனர். அதோடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவில், “இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட நாம் பிடிவாதமாக இருந்தால், உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து சந்திக்க முடியாது. அதனால், இதில் வைகோவின் முடிவை ஏற்றுக்கொள்வோம். இடைத்தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று முடிவெடுத்து மாவட்டக் கமிட்டிகளைச் சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ, தி.மு.க-வோடு இணக்கம் காட்டத் தொடங்கி உள்ள திருமாவளவன், வைகோ மீது கடும் அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிகள் போன்ற காரணங்களால், மக்கள் நலக் கூட்டணி எந்த நேரத்திலும் சிதறும் என்பதுதான் அரசியலாளர்களின் கணிப்பு.  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக