சனி, 15 அக்டோபர், 2016

திருமாவளவன்: ஸ்டாலின் பன்னீர்செல்வம் சந்திப்பை வரவேற்கிறேன்

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது
சிறந்த அரசியல் நாகரீகமாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- நீங்கள் திடீர் என்று டெல்லி சென்றது ஏன்?
பதில்:- மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராம தாஸ் அத்வாலே ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றேன்.
தேசிய தலித் முன்னணி என்னும் அமைப்பின் சிறப்பு கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து பேசுவதற்காக சென்றேன். நான் அந்த அமைப்பின் துணை தலைவராக உள்ளேன்.
இந்த அமைப்பு கட்சிகளை கடந்து தேசிய அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

முதல் கலந்தாய்வு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ஏற்கனவே 2 கூட்டங்கள் டெல்லியில் நடந்துள்ளன. ஒரு கூட்டம் மும்பையில் நடந்தது. தற்போது நவம்பர் 12-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய அளவில் தலித் இயக்க தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
கே:- நீங்கள் பா.ஜ.க. அணி பக்கம் தாவ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறதே?
ப:- அப்பல்லோவுக்கு போனால் அ.தி.மு.க. அணிக்கு தாவப் போகிறீர்களா? என்கின்றனர். டெல்லிக்கு போனால் பா.ஜ.க. பக்கம் தாவப் போகிறீர்களா? என்கிறீர்கள். தேர்தல் அரசியலை தாண்டி சிந்திக்க முடியாதவர்கள் தான் இப்படி விமர்சிக்கிறார்கள்.
கே:- இல.கணேசனை டெல்லியில் சந்தித்ததாக சொல்கிறார்களே?
ப:- டெல்லி விமான நிலையத்தில் எதேச்சையாக சந்தித்தோம். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று சென்னைக்கு திரும்பினார். அதே விமானத்தில் நானும் பயணித்தேன். அப்போது அவருக்கு வாழ்த்து கூறினேன். இதில் என்ன அரசியல் இருக்க முடியும்.
கே:- தி.மு.க. சார்பில் நடந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்திற்கு உங்கள் கட்சிக்கு அழைப்பு இல்லையா?
ப:- எங்கள் கட்சியிலும் விவசாய அணி உள்ளது. ஏனோ எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களை அழைக்காததால் தி.மு.க. எடுத்த முயற்சியை நாங்கள் எதிராக பார்க்கவில்லை.
17, 18-ந்தேதிகளில் நடக் கும் ரெயில் மறியல் போராட் டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் ஆதரவு தெரிவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
கே:- மக்கள் நலக்கூட்டணியில் கம்யூனிஸ்டுக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருக்கிறார்களே?
ப:- அதில் ஏதும் உள் நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை. டெல்டா மாவட் டங்களில் கம்யூனிஸ்டுகளின் விவசாய சங்கம் தீவிரமாக இருப்பதால் அவர்களை மட்டும் அழைத்தால் போதும் என கருதி இருக்கலாம். மக்கள் நலக்கூட்டணியில் இதனால் எந்த குழப்பமும் நேராது.
கே:- உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் பங்கேற்று இருப்பீர்களா?
ப:- காவிரி நீர் பிரச்சினை ஒட்டு மொத்த தமிழர்களின் பிரச்சினை. அழைப்பு விடுத்து இருந்தால் விடுதலை சிறுத்தைகள் மட்டும் அல்ல. ம.தி.மு.க.வும் கலந்து இருக்கும்.
கே:- ஓ.பன்னீர்செல்வம் - மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ப:- இதனை வரவேற்கிறேன். இந்த அரசியல் அணுகுமுறை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது சிறந்த அரசியல் நாகரீகமாகும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார். மாலைமலர்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக