சனி, 15 அக்டோபர், 2016

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி பிரபலமான ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என ராமர் பிள்ளை என்பவர் கூறினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கு ஏஜென்சிகளை வழங்குவதற்காக பல்வேறு நபர்களிடமிருந்து ராமர் பிள்ளை பணத்தை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. ராமர்பிள்ளை மீது தொடர்ந்த வழக்கு சென்னை கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி முன்பாக நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராமர் பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் தலா ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

1999 - 2000வது ஆண்டுகளில் ராமர் பிள்ளை, பெட்ரோலியப் பொருட்களான டொலுவீன், நாஃப்தா ஆகியவற்றைக் கலந்து "ராமர் பெட்ரோல்" அல்லது "ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள்" என்ற பெயரில் விற்றுவந்தார் என்றும் ஆனால், இம்மாதிரி பெட்ரோலியப் பொருட்களை கலந்து விற்பனை செய்வது மோட்டார் எரிபொருள் வாகனச் சட்டப்படி குற்றம் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
தவிர, இந்தப் பொருட்களை விற்பனை செய்ய முகவர்களை நியமித்ததில் 2.27 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டது என்றும் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக