செவ்வாய், 25 அக்டோபர், 2016

500 கொடுத்து பால்குடம் காவடி அலகு.. கிராமம் கிராமமாக ஜெயாவின் ஆரோக்கியத்துக்காக மக்களை பலிகொடுக்கும் அதிமுக மாபியா .. மூதாட்டி மரணம் .. விஜயகாந்த் அதிரடி

தமிழக முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்வருக்காக அலகு குத்துதல், மண்சோறு உண்ணுதல், விளக்கு பூஜை நடத்துதல், பால் குடம் எடுத்தல் என பிரார்த்தனைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலையில் பால்குடம் எடுக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பெண்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதைக் கண்டிக்கும்விதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நலம் பெற வேண்டி அதிமுக சார்பாக நடத்தப்படும் பால் குட ஊர்வலங்கள் சிறு பிள்ளைகளுக்கு அலகு குத்துதல், காவடி தூக்குதல், பச்சை குத்துதல் போன்ற தொடர்ந்த நிகழ்வுகளாக நடந்துவருகின்றன.
நேற்று திருவண்ணாமலையில் பெண்கள் பால்குடம் எடுக்கவந்த கூட்டத்தில் சிக்கி கமலாம்மாள் என்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்துவிட்டார் என்றும், 17 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்ற செய்தி வேதனை தரக்கூடிய ஒன்று. அதிமுக-வில் இதுபோன்ற செயல்பாடுகள் மனித உரிமை மீறல்களாக நடந்து வருகின்றன. தேர்தல் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் தருவதும், பால்குடம் எடுக்கவரும் பெண்களுக்கு 500 ரூபாயும், குடம், புடவை போன்ற பொருட்களை இலவசமாக வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி, கிராமம் கிராமமாகச் சென்று லாரிகளிலும், பஸ்களிலும், வேன்களிலும் மக்களை ஏற்றிவருவதும், அதனால் பலபேர் இறப்பதும், மயக்கமடைவதும் தமிழகத்தில் வாடிக்கையாக நடந்துகொண்டிருக்கிறது என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அதிமுக அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக மக்கள் பிரச்னைகளிலும் நாட்டின் முக்கியப் பணிகளிலும் கவனம் செலுத்துவதை விட்டு, மூடநம்பிக்கையை வளர்க்கும் கூடாரமாகச் செயல்பட்டு வருவது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. வரப்போகும் மழைக்காலத்துக்கு முன்பே, தமிழக நீர்நிலைகளைத் தூர்வாரியும் விவசாயிகளின் பிரச்னைக்கு உண்மையான தீர்வுகாண காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை ஆட்சிசெய்த கட்சிகளும், தமிழகத்தை இதுவரை ஆட்சிசெய்த கட்சிகளும் அரசியல் ஆக்காமல், அண்டை மாநிலங்களை குற்றம்சாட்டியும் இனிவரும் காலங்களை வீணடிக்காமல் தமிழக நதிகளை இணைத்து, வரும் மழைநீரை கடலில் கலக்கவிடாமல் சேமித்துவைப்பது போன்ற ஆக்கபூர்வ பணிகளைச் செயல்படுத்த வேண்டும். நேற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்துள்ளநிலையில் இன்று முதல் அரசு அதிகாரிகளை நியமித்துள்ளீர்கள். லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்காமல் மக்கள் தேவைகளை தங்கு தடையின்றி நடத்திட இந்த அரசு முழுவேகத்துடன் செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், தங்கள் சுய விளம்பரத்துக்காக மக்களை பகடைக்காய்களாக நடத்தும் இந்த அரசின் செயல்களை நீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் தலையிட்டு இதுபோன்று திருவண்ணாமலையில் நடந்த சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுத்திட வேண்டும். பகுத்தறிவை வளர்க்கவேண்டி தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடிய தமிழகத்தில், அவர்கள் வழியில் வந்த கட்சி மக்களை மூடர்களாக, முட்டாள்களாக மாற்றிவருவது வேதனையளிக்கிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக