திங்கள், 24 அக்டோபர், 2016

பிடிபட்ட ஐ.எஸ் வாக்குமூலம : பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர்

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதியான சுபஹானி ஹாஜா மொய்தீன், பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர் என விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். இவர், இராக்கில் ஐ.எஸ். போராளிகளோடு சேர்ந்து போரிட்டிருக்கிறார். மொய்தீன், ஏப்ரல் 8, 2015 சென்னையிலிருந்து இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் இருந்துவந்த ஜிகாதிகளோடு சிரியா சென்றிருக்கிறார். “துருக்கியிலிருந்து பயிற்சி பெற்று இராக் செல்லும்போது, அவருக்கு மத போதனைகளும், ஏகே-47 துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது எனவும், வெடிகுண்டு தயாரித்தல், அரிவாள்களை பயன்படுத்துதல் ஆகியவைகள் குறித்து பாடம் நடத்தப்பட்டது. பாரிஸ் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர்தான் குழுவுக்கு தலைமை தாங்கினார்
என மொய்தீன் தெரிவித்தார்” என பாதுகாப்புத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 31 வயதான மொய்தீன், இந்த மாத தொடக்கத்தில் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, பாரிஸ் தாக்குதலின் முக்கியப் புள்ளியான பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்தெல்ஹமீத் அபூத்தின் பெயரையும், அபூத்தின் இளம்பருவ நண்பர் சலாஹ் அப்தெல்சாம் மற்றும் ஒமார் இஸ்மாயில் மொஸ்தீஃபெய் ஆகியோரின் பெயர்களைக் கூறியிருக்கிறார். இதில், அப்தெல்ஹமீத் அபூத் ஃப்ரெஞ்சு காவல்துறையால் கொல்லப்பட்டார். அப்தெல்சாம் ஃப்ரெஞ்சு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். “மொய்தீன் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவனிடம் விசாரணை செய்து, அதிக தகவல்களை எடுக்க நினைக்கிறோம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். மின்னம்பலம்.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக