வெள்ளி, 9 செப்டம்பர், 2016

பழிவாங்க காத்திருக்கும் அதிகாரிகள் .. அதிகார போட்டியா? கமிஷன் போட்டியா? எது உண்மை?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் மெசேஜ் வரிசைகட்டி வந்து விழுந்தது.
"தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள்தான் ரொம்பவும் ஆடிப்போயிருக்கிறார்கள். அதிகாரிகள் வட்டாரத்தில் நினைக்காதவற்றை எல்லாம் செய்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஒருபக்கம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்... இன்னொருபக்கம் டிஜிபி விருப்ப ஓய்வு, கமிஷனர் மாற்றம் என தமிழகம் அலற ஆரம்பித்துவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்குமுன்பு, கோயம்பேடு அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 'அவங்க சொல்றதை கேட்கலைன்னு இப்படி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது எந்தவிதத்தில் சரியானது? இதுக்கு நம்ம எதிர்ப்பை பதிவுசெஞ்சே ஆகணும். ஆனால் யாரும் வாயே திறக்காமல் இருக்காங்க... போயஸ் கார்டன்ல சி.எம். பக்கத்துலயே ஒரு லேடி இருக்காங்க. அவங்கதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்.
அந்த லேடியும் ஒரு அதிகாரி என்பதை மறந்துட்டு செயல்படுறாங்க. நாளைக்கு அவங்களுக்கும் ஞானசேகரன் நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அதிகாரிகளைப் பற்றி சி.எம்.கிட்ட போட்டுக்கொடுக்குறது அந்த லேடிதான். அவங்களுக்கு எதுக்கு இந்த வேலைன்னு தெரியலை...' என்று புலம்பியிருக்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.
அதற்கு மற்றொரு அதிகாரி, 'யாரு ஆட்சிக்கு வர்றாங்களோ அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்க நம்ம ஆட்களிலும் சிலர் இருக்கத்தான் செய்யுறாங்க. ஆனாலும் நம்மையெல்லாம் உருட்டி விளையாடும் பகடைக்காயாத்தான் சி.எம். நினைக்கிறாங்கபோல இருக்கு. இதை இப்படியே விட்டுடக் கூடாது' என்று சொல்லியிருக்கிறார். இப்படியாக நீண்ட பேச்சு, இரவு 11 மணிக்குப் பிறகும் தொடர்ந்திருக்கிறது. அதன் பிறகுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கும் ஒரு எஸ்.எம்.எஸ். போயிருக்கிறது. அதில், 'அதிகாரிகளாக இருப்போம். அரசியல்வாதிகளுக்கு தலையாட்டும் பொம்மையாக மாறி, நம் தன்மானத்தை இழக்க வேண்டாம்' எனச் சொல்லப்பட்டிருந்ததாம். வரும் ஞாயிறன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்!" என்று முடிந்தது முதல் மெசேஜ்.

அடுத்த மெசேஜ், காவல்துறை அதிகாரிகளைப் பற்றியதாக இருந்தது.
"டி.ஜி.பி. அசோக்குமார் ராஜினாமா பற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. அசோக்குமார் நேரடியாக முதல்வரைச் சந்தித்ததுபற்றி நான் முன்பு சொல்லியிருந்தேன். அப்படி நடந்த சந்திப்புக்குப்பிறகு, முதல்வரின் உத்தரவுப்படிதான் அவர் ராஜினாமா செய்தார் என அதிகாரிகள் வட்டாரத்தில் உறுதியாகச் சொல்கிறார்கள்.
டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கும், சிட்டி கமிஷனராக நியமிக்கப்பட்ட ஜார்ஜுக்கும் இடையில்தான் கடுமையான போட்டி நிலவுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இருவருக்குமிடையில் நல்ல நட்புணர்வு கிடையாதாம். அதனால் ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறை வட்டத்தில் சொல்கிறார்கள். குறிப்பாக, எஸ்.ஆர்.எம். பச்சமுத்து விவாகரத்தில் இனி, பிடி இறுகும் என்று சொல்கிறார்கள். பச்சமுத்துமீது வழக்கு பதிவு செய்தது எல்லாம் சிட்டி போலீஸ் கண்ட்ரோல்தான். அதனால், அந்த வழக்குகளை தீவிரப்படுத்த சொல்லிவிட்டாராம் புதிய கமிஷனர் ஜார்ஜ். 'யாரு சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. மாணவர்கள் நலன்தான் எனக்கு முக்கியம். அதேபோல, மதன் என்ன ஆனார் என்பதும் எனக்குத் தெரியணும். அந்த வழக்கில் மதனை தேடிப்பிடிச்சு உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தணும். நீங்க இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டால் நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும். ஒரு வாரம் டைம் எடுத்துக்கோங்க... எனக்கு மதன் வேண்டும்' என்று சொல்லிவிட்டாராம் கமிஷனர் ஜார்ஜ். என்ன செய்வது எனத் தெரியாமல் விசாரணை அதிகாரிகள் ஆடிப்போயிருக்கிறார்கள்!" என்பது அடுத்த மெசேஜ் ஆக இருந்தது.

அதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.
"டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தமிழக அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர். 'டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் அதை மறைக்கத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்பதைப் பாருங்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் இங்கே டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இனி, டெங்கு வந்து யாரும் இறந்துவிடக்கூடாது. அதற்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்க...' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் அதிகாரிகளை விரட்ட ஆரம்பித்துள்ளனர்" என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.   மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக