திங்கள், 5 செப்டம்பர், 2016

சிறப்புக் கட்டுரை:ஜியோ விளம்பரத்தில் பிரதமர்!


மின்னம்பலம்.காம் :கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தின் மேல்பகுதியில் ‘ஜியோ டிஜிட்டல் லைஃப்’ என்றும் அதற்குக்கீழே ‘இந்தியாவுக்கு சமர்ப்பணம், இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் குடிமகன்களுக்கு சமர்ப்பணம்’ என்றும் வாசகம் இருந்தது. இந்த வாசகத்துக்குக்கீழ் இந்தியாவின் பிரதமர் நரேந்திர, மோடி நீலநிற உடை அணிந்தவாறு ஒரு புகைப்படம் இருந்தது. (ரிலையன்ஸ் ஜியோவின் லோகோவும் நீலநிறம் என்பது குறிப்பிடத்தக்கது.)
மோடியின் புகைப்படத்துக்குக்கீழ், ‘நமது பயணத்தில், வாழ்வை மாற்றும் தருணங்கள் சில வரும். அதுபோன்ற ஒரு தருணம்தான் நமது நாட்டின் மதிப்புக்குரிய பிரதமரின் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டம். டிஜிட்டல் இந்தியா திட்டம்மூலம் நாட்டின் 1.2 பில்லியன் மக்களை இணைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் திட்டத்தை உணர்ந்து, அத்திட்டத்துக்கு ஜியோ சேவை சமர்ப்பிக்கப்படுகிறது.
ஜியோ டிஜிட்டல் லைஃப், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கனவை நிறைவேற்றவும், இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சக்தியாக உருவாக்கவும் உதவும்’ என்று ஒரு பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தைப் பார்த்தவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, எப்படி இந்திய நாட்டின் பிரதமர் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் இடம்பெற முடியும் என்ற கோபமும் எழுந்தது. சமூக வலைதளங்களில் இந்த விளம்பரத்துக்கு பல மாறுபட்ட கருத்துகளும் கடுமையான கண்டனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் பிரதமர் வெளிப்படையாக ரிலையன்ஸ் குழுமத்துக்கு விளம்பரம் செய்கிறார் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் ‘அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா?’ என்று கேள்வியெழுப்பினார்.
காலை செய்தித்தாள்களில் ஜியோ விளம்பரம் வெளியிடப்பட்டதை அடுத்து, அன்று மாலையே பல முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. 90 வினாடிகள் ஓடக்கூடிய அந்த விளம்பர காணொலியில், முதலில் இந்தியாவின் மிகவும் பிரபலமான சின்னங்களான சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னை தெரசாவின் படங்கள் இடம்பெற்றன. பின்னர், மத்திய அரசின் ’டிஜிட்டல் இந்தியா திட்டம்’ நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்று, இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் பேசிய பிரதமர் மோடியின் உரையின் ஒரு பகுதி இந்த விளம்பரத்தில் இடம்பெற்றது. பின்னர், இந்த காணொலியின் இறுதியில், ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வாய்ஸ் கால்கள் எப்படி இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் மக்களை இணைக்கும் என்பதை விளக்கும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

(கெஜ்ரிவாலின் ட்வீட்)
இந்த விளம்பரத்தைப் பற்றி, இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனத்தின் அதிகாரி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவர், ‘இந்த விளம்பரங்களில் குறிப்பாக தொலைக்காட்சி விளம்பரம் மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் எந்த இடத்திலும் தங்களது பொருட்கள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் குறிப்பாக, இந்த விளம்பரத்தை டிஜிட்டல் இந்தியாவுக்கு சமர்ப்பிப்பதாக காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் உண்மை இருக்குமா என்பது தெரியாதநிலையிலும் இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
சந்தேகங்களும் விவாதங்களும்
இந்த விளம்பரத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் பதிவுசெய்யப்பட்டாலும், இந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தைப் பயன்படுத்தியது சட்டத்துக்கு உட்பட்டதா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இதுதொடர்பான பல விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
விளம்பரம், அஞ்சலி அல்லது அர்ப்பணிப்பு பிரச்சாரங்களில் பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி தேவையா? என்பது குறித்து முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்குமுறை தடுப்பு) சட்டம் 1950 விளக்கியுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, எழுத்துபூர்வமான அனுமதி பெற்றபிறகு ஒருவரது பெயரையோ அல்லது முத்திரையையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், புனேவைச் சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ‘மேப்பில் குரூப்ஸ்’ தங்களின் விளம்பரத்தில் பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸின் புகைப்படங்களை விளம்பரத்தில் பயன்படுத்தியதற்காக அவர்களின் விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தில் தங்களது ரியல் எஸ்டேட் திட்டத்தை பிரதமரின் வீடமைப்பு திட்டத்துக்கு சமர்ப்பிப்பதாக விளம்பரப்படுத்தியது. இதே பாணியை கையில் எடுத்துக்கொண்டு தற்போது, ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை பிரதமரின் டிஜிட்டில் இந்தியா திட்டத்துக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விளம்பரத்தைப் பற்றி கருத்துக் கேட்க ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முறைசாரா ஒப்பந்தம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த விளம்பரமானது, முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு அரசியல் மற்றும் விளம்பரத் துறை பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது பதவிக் காலத்தில், தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக்கொள்ள முதலில் பிரதமரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெறுவது இயல்பான ஒன்றே என்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை என்று இந்தியாவின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவும் குறிப்பாக, தனது நிறுவனத்தின் ஒரு புதிய சேவையை ஆரம்பித்த அடுத்த நாள் பிரதமரின் திட்டத்துக்கு சமர்ப்பணம் என்று வெளியிடுவது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கின்றனர்.
‘இந்த விளம்பர முறை நிச்சயமாக இயல்பான ஒன்று கிடையாது. என்னால் இதற்குமுன், இதுபோன்ற விளம்பரத்தை நினைவுகூற முடியவில்லை. விளம்பரத் துறையை பொறுத்தவரை எந்த ஒரு நெறிமுறைகளும் கிடையாது. ஆனால் சில சட்டங்கள் உள்ளன. நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தில் சின்னங்களையோ அல்லது மறைந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தலாம். ஆனால் நாட்டின் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்களின் சேவையை அரசின் திட்டங்களுக்கு சமர்ப்பணம் என்று விளம்பரப்படுத்தலாமா?’ என்று சந்தோஷ் தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிலையன்ஸ் போன்ற ஒரு மிகப்பெரிய நிறுவனம், இதுபோன்ற தனது வாழ்நாளின் மிகப்பெரிய சவாலை அறிமுகப்படுத்தியது முறையான அனுமதியில்லாமலே மேற்கொண்டிருக்கும் என்று கருதுவதாக ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியும், மேக் இன் இந்தியா திட்டத்தில் பணியாற்றியவருமான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நன்றி - தி வயர்
(http://thewire.in/63694/modi-reliance-jio-advertisement/)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக