ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிறுவாணி:தமிழக அரசை பாராட்டும் வைகோ!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசை வலியுறுத்தவும், சிறுவாணியில் அணை கட்ட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசிடம் வலியுறுத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இதுவரை கூட்டவில்லை. மேலும், தமிழக அரசு அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுடன் ஒரு இணக்கமான சூழல் இல்லாததால்தான், தண்ணீர் பங்கீடு பிரச்னையில் தீர்வு காணப்பட முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், நதிநீர் பிரச்னைகளை தமிழக அரசு சரியாகவே அணுகி வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறுவாணியின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதி அளித்துள்ள மத்திய அரசுதான் குற்றவாளி. சிறுவாணி அணை பிரச்னையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் யோசனை தவறானது. ஏற்கெனவே காவிரி பிரச்னையில் தீர்வுகள் காணப்படாமல் இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சிறந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர், மீத்தேன் திட்ட பிரச்னைகளை தமிழக அரசு முறையாக அணுகி வருகிறது. இப்பிரச்னைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட நிலைக்கு வரும்போதுதான் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலாம். தண்ணீர் பிரச்னைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்று திரண்டு வரவேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக