புதன், 21 செப்டம்பர், 2016

ஆறாயிரம் பேரோடு திமுக-வில் இணைந்த மதிமுக மணிமாறன்!


minnambalam.com மதிமுக-வின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிமாறன் நேற்று, தனது ஆதரவாளர்கள் ஆறாயிரம் பேருடன் திமுக-வில் இணைந்தார். மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.மதிமுக-வில் வைகோவுக்கு நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். கட்சிக்காக தன் பணத்தை வாரியிறைக்க அஞ்சாதவர் என்று இவரைப்பற்றி குறிப்பிடுவார்கள். மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகளை அள்ளிக் கொடுத்தது, தங்கப் பேனா கொடுத்து அசத்தியது, தங்க வாள் கொடுத்து பிரமிக்க வைத்தது என்று விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி மதிமுக-வினரை வியக்கவைத்தவர் இந்த மணிமாறன்.
மல்லை சத்யா வைகோவின் வலது கரம் என்றால் மணிமாறன் இடது கரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சமீபகாலமாக வைகோவிற்கும் மணிமாறனுக்கும் கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்த கருத்துவேறுபாடுகள் அடிக்கடி எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை மணிமாறன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு, மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைந்ததும் மணிமாறனுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மதிமுக-வில் தனது செயல்பாடுகளை அவர் சுருக்கிக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் கட்சிப் பணிகளை சரிவரச் செய்யவில்லை என்றே குற்றம்சாட்டப்பட்டது. சட்டசபைத் தேர்தலின்போது வேளச்சேரி தொகுதியில் மணிமாறனை போட்டியிடுமாறு வைகோ கூறியிருக்கிறார். ஆனால் போட்டியிட்டால் தோல்வி அடைவது நிச்சயம் என்று சொல்லி அதை ஏற்கவில்லை. இதனால் கைகோவின் கோபத்தை மணிமாறன் சம்பாதித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 15ஆம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோவுக்கு கடிதம் அனுப்பி கட்சியிலிருந்து விலகினார் மணிமாறன். சட்டசபைத் தேர்தல் முடிந்தபின்னர் ஜூன் மாதம் அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைத்துக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மணிமாறன் தனது ஆதரவாளர்கள் 6 ஆயிரம் பேருடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் நேற்று இணைந்தார். வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. வேளச்சேரி எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகரன், மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய பதவிக்கு மணிமாறன் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக