வியாழன், 22 செப்டம்பர், 2016

காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !

cauvery-issue-karnataka-violence-1வினவு.com :மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் அடுத்த பத்து நாட்களுக்குத் (13 டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்துவிடுமென்று செப்.5 அன்று உத்தரவிட்டிருந்த உச்சநீதி மன்றம், அதனை நாளொன்றுக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதம் செப். 20 வரை தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என மாற்றி செப்.12 அன்று உத்தரவிட்டது. இந்த மாற்றத்தால் முந்தைய உத்தரவைக் காட்டிலும் 3 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. “அனுகூல சத்ரு” எனக் கூறுவார்களே, அது போல, தமிழகத்திற்கு நன்மை செய்வது போலத் தோன்றும் இந்த உத்தரவுகள் உண்மையில் கர்நாடகா அரசிற்குச் சாதகமானவையே.


வெறும் 13 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடக் கூறிய உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து, கன்னட இன வெறியர்கள் பெங்களூரு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள்
செப்.5 அன்று அளித்த உத்தரவிலேயே தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு என்ன என்பதைத் தீர்மானிக்க காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகுமாறும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது. அதன்படி செப். 12 அன்று மைய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு கூடினாலும், அக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. செப். 20 அன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தின் முன் இப்பிரச்சினை வருமென்பதால், செப். 19 க்குக் கூட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறது. ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்ட இப்பிரச்சினையில் நடுவர் மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிய பின்னரும், அது அமல்படுத்தப் படாததால், அன்றாடம் சோற்றுக்குக் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனின் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
காவிரி நீரை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 இலட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி நீர்தான் தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 15 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 இலட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியே நடைபெறவில்லை. சம்பா பயிருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது என்ற நிலை இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது.
cauvery-issue-karnataka-violence-2
வெறும் 13 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடக் கூறிய உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து, கன்னட இன வெறியர்கள் பெங்களூரு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள்
மழைப்பொழிவு குறைவாக இருக்கும் காலங்களில் நீரைப் பகிர்தல் குறித்து நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறாமல் இல்லை. சராசரி மழைப் பொழிவு உள்ள காலத்தில், ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தமிழகத்திற்கு 94 டி.எம்.சி. தண்ணீரும், மழைப் பொழிவு குறைவாக இருந்தால் அந்த மாதங்களில் 68 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும் என்பது தீர்ப்பு. தமிழகத்திற்கு இம்மாதங்களில் 33 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட்டிருப்பதாகக் கூறுகிறது, கர்நாடகா. மழைப்பொழிவு குறைவு என வைத்துக்கொண்டாலும், தமிழகத்திற்கு இன்னும் 35 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால், உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது வெறும் 13 முதல் 16 டி.எம்.சி.தான்.
கர்நாடகாவில் ஜூன் 1 தொடங்கி ஆகஸ்டு 17 முடிய 448 மி.மீ. அளவிற்கு மழை பொழிந்திருக்கிறது. இது சராசரி மழை பொழிவைவிட 10 மி.மீ.தான் குறைவு. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளிலும் 57 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசு அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வாதிட்ட ஃபாலி நாரிமன் கர்நாடக அணைகளில் 80 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக விசாரணையின் போது தெரிவித்திருக்கிறார். இவையன்றி, கர்நாடக அரசு அமைத்துள்ள காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கபினி அணைக்கு மேற்கே 20 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரி இருப்பதாகக் குறிப்பிடுகிறார், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
cauvery-issue-karnataka-violence-3நடுவர் மன்றத் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய மோசடிகளும் திட்டமிட்டே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. செப். 12 அன்று கூடிய மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் சசி சங்கர் தலைமையிலான கண்காணிப்புக் குழு, கூட்டத்தை ஒத்தி வைப்பதற்குக் கீழ்க்கண்டவாறு காரணம் கூறியிருக்கிறது:
“நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு இன்னும் தரவேண்டியிருக்கும் நீரின் அளவு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டுமானால், கடந்த 29 ஆண்டுகளில் பெய்த மழை குறித்த விவரம், காவிரியிலிருந்து நான்கு மாநிலங்களும் பெற்ற நீரின் விவரம், அதனைப் பயன்படுத்திய விவரம், முறைகேடாக நீரை எடுத்தது குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையெல்லாம் பரிசீலித்துதான் முடிவு செய்ய முடியும். அதற்கு நேரம் போதாது. அத்துடன் திறந்து விட்டதாக கர்நாடகம் சொல்கின்ற நீரின் அளவும், தங்களுக்கு வந்து சேர்ந்ததாக தமிழகம் சொல்கின்ற நீரின் அளவும் வேறுபடுகின்றன. எனவே இவை குறித்த தரவுகளை திரட்டுவதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும். நீர்வரத்தின் அடிப்படையில்தான் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, காவிரிக்கான நீர் வரத்தின் அளவு என்ன என்பதைத் திரட்டுவதற்கான ஒரு வலைப்பின்னலையும் உருவாக்க வேண்டியிருக்கிறது.”
cauvery-issue-tnj-protst
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மை எரித்து, தஞ்சாவூர் நகரில் நடந்த போராட்டம்
தீர்ப்பை எந்தக் காலத்திலும் அமல்படுத்தாமல் இருப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களே இவை. உலகத்தில்லேயே முதன்முறையாக நதி நீர்ச்சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை இப்போதுதான் உருவாக்க இருப்பது போன்ற தோரணையில் கூறப்பட்டிருக்கும் மேற்கண்ட கருத்தின் பொருள், நடுவர் மன்றத் தீர்ப்பை எந்தக் காலத்திலும் அமல்படுத்த முடியாது என்பதுதான். காவிரி மேலாண்மை வாரியம் ஒருவேளை அமைக்கப்பட்டு விட்டாலும், அதன் முடிவுகளுக்கும் இதே கதிதான் நேரும்.
சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த முடியாது என்பதைக் கன்னட வெறியர்கள், தமிழகப் பேருந்துகளை, சரக்குந்துகளைக் கொளுத்துவதன் வாயிலாகத் தெரிவிக்கிறார்கள். அடுக்கடுக்காக வழக்குகளைப் போட்டு இழுத்தடிப்பதன் மூலம் கர்நாடக அரசும் இதைத்தான் சொல்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை மாநில அரசு அமலாக்க மறுக்கும்போது, அதனை அமல்படுத்த வைக்க வேண்டிய மோடி அரசு, தனது மவுனத்தின் மூலம் கூறவரும் கருத்தும் இதுதான்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைக்கும், காவிரிப் பிரச்சினையில் மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. காங்கிரசு பா.ஜ.க., கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கின்ற வாய்ப்பு கர்நாடகத்தில் இருப்பதும், தமிழகத்தில் இல்லாதிருப்பதும்தான் தமிழகத்துக்கு எதிரான இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் என்று இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது மிகவும் மேலோட்டமானது. இந்த தேசியக் கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெற இயலாமலிருப்பதற்குக் காரணமான, “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்கம் சார்ந்த கருத்தியல்கள் மீது இவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புதான், இவர்களுடைய தமிழ் வெறுப்புக்கு மிக முக்கியமான காரணம். இத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.
cauvery-issue-caption-1கர்நாடகத்தில் இப்போது நடைபெற்று வரும் சம்பவங்கள், சேதுக்கால்வாய் திட்டத்தை விரைவாக அமல்படுத்தக் கோரி நடத்த்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தை நினைவுபடுத்துகின்றன. அன்றைய முழு அடைப்பை தி.மு.க. ஆட்சி ஆதரித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரும்படி நடுவண் அரசுக்கு உத்தரவிடுவோம் என மிரட்டினார்கள். இதோ, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து கர்நாடக அரசின் ஆதரவோடு அம்மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுப் பேருந்துகளும் லாரிகளும் கொளுத்தப்படுகின்றன. உடனே நாளொன்றுக்கு 15,000 கன அடி என்பதை 12,000 ஆக நீதிமன்றம் மாற்றுகிறதேயன்றி, கர்நாடக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.
கூடங்குளம் அணு உலை தமிழகத்துக்கு விளைவிக்கக் கூடிய தீங்குக்கு எதிராக மக்கள் போராடிய போது, அந்த எதிர்ப்பை மீறி அணுஉலையைத் தமிழகத்தின் மீது திணித்தது உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட மறுக்கும் உச்ச நீதிமன்றம், கெயில் வழக்கில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை முடியுமுன்பே, அத்தேர்வை எதிர்த்து வந்த தமிழகத்தின் மீது, அதனைத் திணித்து உத்தரவிடுகிறது. தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அதிஉயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததை ரத்து செய்கிறது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் தனது தீர்ப்பைக் கடுகளவும் மதிக்காமல் நடந்து கொள்ளும் கர்நாடக அரசுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அறிவுரை கூறுகிறது உச்ச நீதிமன்றம்.
இவற்றுக்கும் மேலாக, மேகேதாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயலுவதைத் தடை செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 2016, ஜூலை 19 தொடங்கி தொடர்ச்சியாக விசாரிக்கப் போவதாக 2015, மார்ச் 28 அன்று அறிவித்த உச்சநீதி மன்றம், தற்பொழுது அந்த விசாரணையை அக்.12-க்குத் தள்ளிவைத்து விட்டதாக அறிவிக்கிறது. இந்த இழுத்தடிப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக ஆணவத்தோடு அறிவிக்கிறார், கர்நாடக முதல்வர் சித்தராமையா.
தேசிய ஒருமைப்பாடு என்பது நிபந்தனைக்குட்பட்ட ஒரு அரசியல் ஒப்பந்தம். அது ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. காவிரி, பாலாறு, சிறுவாணி, முல்லைப் பெரியாறு ஆகிய ஆற்றுநீர் உரிமைகளில் தொடங்கி, கூடங்குளம், நீட் தேர்வு, கெயில் வரையிலான அனைத்திலும் அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறித்துவிட்டது. எனவே, இந்த ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்கு தமிழகம் அடிபணிய வேண்டிய அவசியமில்லை.
cauvery-issue-caption-2தமிழக மக்கள் தமது உரிமையைத் தமிழக அரசின் வழியாக நிலைநாட்டிக் கொள்ள முடியாது. காவிரித் தாயென தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதா, டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்த பிறகுதான் கும்பகர்ண உறக்கம் கலைந்து எழுந்து 50 டி.எம்.சி. தண்ணீர் கேட்டு மனுச் செய்தார். கொள்ளையடித்துக் கல்லா கட்டுவதைத் தவிர வேறு சிந்தனை இல்லாத இக்கும்பலிடம் மாநில உரிமை, விவசாயிகளின் நலன் போன்றவை குறித்த அக்கறை இருக்குமென எதிர்பார்ப்பது அறிவீனம்.
மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தமிழக்த்தின் மீது செலுத்தி வரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்கு நாம் கட்டுப்பட மறுப்பதன் மூலம்தான் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும். வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடைபெறும் உறியடி விழாவில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் உறிகளைத் தொங்க விடக்கூடாது என்று பாதுகாப்புக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை மதிக்க முடியது எனறு பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் இந்த ஆண்டு விழா நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலை என்ன? வீர விளையாட்டு என்று சல்லிக்கட்டுக்காக மீசை முறுக்கும் வீரர்களுக்குக்கூட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறுகின்ற துணிவு இல்லை.
உச்சநீதி மன்ற உத்தரவை மீறி நடப்பதற்குத் தமிழக ஓட்டுக்கட்சிகள் தயங்கலாம். ஆனால், தமிழக மக்கள் அவைகளின் வழியொற்றி முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியைத் திணிப்பதில் தீவிரமாக இருந்த வட இந்திய அரசியல்வாதிகளிடம், இந்தி இந்தியா வேண்டுமா, அல்லது முழு இந்தியா வேண்டுமா என்ற கேள்வியை இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுப்பிய பின்னர்தான் அவர்களது திமிர் ஒடுங்கியது.
ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம் என்ற முழக்கம்தான் பிழைப்புவாதிகள் முதல் இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகள் வரையிலான அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கும்.
– அழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக