வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி

விகடன்,காம் : ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா.< அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று சொல்லி இருந்தார். அவரை சென்னையில் சந்தித்தோம்.
‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போகிறீர்களா?” ‘‘அ.தி.மு.க தலைமை இட்ட கட்டளையை ஏற்று நான் செய்த பணிகளைப் பாராட்டித்தான் எம்.பி. பதவியை முதல்வர் அம்மா எனக்குத் தந்தார். கட்சியில் நாடார் சமூகத்துக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்றுதான் கட்சிப் பதவிகளையும் கொடுத்தார். அவர்களுக்கு முழு விசுவாசமாகச் செயல்பட்டேன். கட்சியில் எனக்கு எதிராகப் பிரச்னை கிளம்பியபோது, அம்மாவைப் பார்த்து மனுக் கொடுக்கக் கண்ணீரோடு பல நாட்கள் போயஸ் கார்டன் வாசலில் நின்றேன். ஆனால், எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன், அம்மா என்னை அழைத்து ‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்’ என்று சொன்னால், கண்டிப்பாக அவரது உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். வேறு யாரும் என்னை மிரட்டிப் பணியவைக்க முடியாது.’’


‘‘நீங்கள் மேயராக இருந்த தூத்துக்குடி மாநகராட்சியை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு என ஒதுக்கி இருக்கிறார்களே?’’

‘‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சிதான் இதற்குக் காரணம். என் மீதான கோபத்தில், நாடார் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தூத்துக்குடி மாநகராட்சியைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

அ.தி.மு.க. அரசு ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம், நாடார் சமூகத்தினரைப் பழிவாங்குவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைப்படி, அவர்கள் அதிகமாக வாழும் சென்னை மாநகராட்சியைத்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் நிர்வாகத் திறமை வாய்ந்த பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வேன்.”

‘‘முதல்வர் உடல்நிலைபற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றனவே?’’

‘‘முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும். மனிதராகப் பிறந்த யாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போவது இயற்கை. முதல்வர் நலமாக இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர் முகத்தைக் காட்டவில்லை. அவர் குரலைக் கேட்க முடியவில்லை. ‘முதலமைச்சர் பூரண குணமடைய வேண்டும்’ என்று எதிர்க்கட்சி முதற்கொண்டு அனைத்துக் கட்சியினரும் வேண்டியுள்ளனர். முதலமைச்சர் நலமாக இருக்கிறார் என்றால், அவரைக் காட்ட வேண்டும். இல்லை என்றால், ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று வாட்ஸ் அப் மூலம் முதலமைச்சரே பேசி வெளியிடலாம். அவரது குரலை கேட்டால்தான், அவரைப் பார்த்தால்தான் தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை வரும். உலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

‘‘முக்கியப் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகச் செய்தி வெளியிட்டு உள்ளார்களே?’’

‘‘ ‘காவிரிப் பிரச்னையில் தலைமைச்செயலாளருடன் விவாதித்தார், அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். ஒரு சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’ என்றெல்லாம் பத்திரிகை களில் செய்திகள் வருகின்றன. ஆனால், அப்படி ஆலோசனை நடந்தது என்பதற்குச் சாட்சியாக ஒரு போட்டோகூட இதுவரை  வெளியிடவில்லை. இத்தனை நாட்கள் ஆகியும் முதலைமைச்சர் நிலை ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளது. எனவேதான், தொண்டர்களும் மக்களும் கவலைப்படுகிறார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை டி.வி-யில் காண்பித்தார்கள். அவர் பேசினார். எங்கே இருந்தாலும் தலைவர் நலமாக இருக்கிறார் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், இன்று லட்சக்கணக்கானோர் முதலமைச்சர் உடல்நிலை பற்றிய முரணான தகவல்களால் வேதனையில் உள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக, அவர்களின் நிம்மதிக்காக வாட்ஸ் அப்பில் அரை நிமிடம் பேசி, அவரது குரலைத் தொண்டர்கள் கேட்டால் நிம்மதி அடைவார்கள். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை. எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பவர்தான் நம்முடைய முதலமைச்சர். ஏன் அவர் வெளியே வரவில்லை என்றால், எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அவரை யார் கவனித்துக் கொள்கிறார்கள்? காவிரிப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன. முதலமைச்சரை அமைச்சர்கள் சென்று பார்த்தார்களா? இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. உண்மையிலேயே முதலமைச்சர் மீது அனுதாபம் உடைய தொண்டர்கள் இதற்கு வழக்குத் தொடுக்கலாம். எதற்கு முதலமைச்சரை வெளியே காட்டவில்லை? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? என்று கோர்ட்டில் ஆட்கொணர்வு ரிட் மனுப் போடலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சரை இத்தனை நாட்களாகப் பார்க்க முடியவில்லை என்றால், அவர் யாருடைய கஸ்டடியில் இருக்கிறார்? யாருடைய பிடியின் கீழ் இருக்கிறார்?  முதலமைச்சருக்குப் பிடித்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் எல்லாம், முதலமைச்சர் முன்பு செல்லக்கூட அனுமதிக்கப் படவில்லை? ஏன் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது? ஒரு சிலரது கஸ்டடியில் வைத்துக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை எதற்காக? முதலமைச்சரை என்ன செய்யப் போகிறார்கள்? முதலமைச்சர் என்ன நிலையில் இருக்கிறார்? இது தொண்டர்களுக்கு உள்ள வருத்தம், கவலை.”

‘‘முதல்வர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளதே?’’

‘‘முதல்வருக்கு காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். மருத்துவமனையில் இத்தனை நாட்கள் இதற்கு முன்பு அவர் தங்கியதே இல்லை. புரட்சித் தலைவர் காலத்தில் ஒளிவுமறைவற்ற நாகரீகம் இருந்தது. ஒளிவுமறைவற்ற மருத்துவம் இருந்தது. இப்போது கொடுக்கப்படும் மருத்துவம் ஏன் இப்படி ஒளித்து வைக்கப்படுகிறது? என்ன நடக்கிறது? அந்த பயம் பொதுமக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறது. முதலமைச்சருடன் அவரது தோழி இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவர் விருப்பத்துடன்தான் வைத்துக் கொள்ளப்படுகிறாரா அல்லது கட்டாயப்படுத்தி அவரது கண்காணிப்பில் இருக்கிறாரா? என்பது என் கேள்வி. கட்டாயத்தின் பேரில் அவரது பிடியில் வேறுவழியில்லாமல் முதல்வர் இருக்கிறார் என்றால், அதை என்னால் மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவை எல்லாம் தமிழகத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளார் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டு உள்ளது.’’

‘‘முதல்வர் வெளிப்படையாகப் பேசினால்தான், அவர் பத்திரமாக இருக்கிறார் என்று சொல்லமுடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?’’

‘‘முதலமைச்சர் வெளிப்படையாக வந்து கூட பேசவேண்டாம். எத்தனையோ தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகக் கூடப் பேசலாம். முதல்வர் வாயி​ல் இருந்தே வார்த்தைகள் வந்தால்தான் இந்தச் சர்ச்சைக்கு முடிவு ஏற்படும். அவர்கள் பூரண நலத்​​தோடு திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.’’

‘‘சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை சொல்வதை நீங்கள் நம்பவில்லையா?’’

‘‘முதலமைச்சர் தமிழக மக்களுக்குப் பொதுவானவர். அவருக்கு என்ன நோய் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். மூடிமறைப்பதால் பிரச்னைகளுக்கு மேல் பிரச்னைகள்தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதை மருத்துவமனை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் எதையோ மூடிமறைக்கிறது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், முதல்வர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், நான் பிரதமரைச் சந்தித்து ‘தமிழக முதல்வர் எங்கே இருக்கிறார்? நீங்கள் கொண்டுவந்து தாருங்கள்’ என்று மனுக் கொடுக்க உள்ளேன். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனுக் கொடுப்பேன். குடியரசுத் தலைவரையும் சந்திப்பேன்.”

“அப்போலோவில்  முதல்வருக்குக் கொடுக்கப்படும் மருத்துவம் குறித்து முறையான மருத்துவ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லையே?”
“இன்னும் சிறிது நாட்கள் இதேபோல், மருத்துவ அறிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தால், முதல்வருக்கு என்ன ஆனது என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், முதல்வரைக் கண்டறிய வேண்டி ஒரு ஆட்கொணர்வு மனுவை நானே தாக்கல் செய்வேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முதல்வரைக் கண்டறிவது எனக்கு அவசியம்தான். பழைய தலைவர் என்ற விசுவாசம் அல்ல; ஒரு முதல்வர் மீது நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் அக்கறை. நானே மருத்துவமனை சென்று பார்ப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் மூலமாகப் பெறுவேன்.’’

‘‘முதல்வருக்கு என்ன மருத்துவம் செய்யப்படுகிறது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் விசாரித்தீர்களா?’’

‘‘ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உடல் நலமில்லை என்கிறபோது, அரசு மருத்துவமனையில்தான் அவர் சிகிச்சை பெற்று இருக்கவேண்டும். சிறப்பான மருத்துவமனையை தமிழகத்தில் கொண்டுவந்ததாக அவர்களே கூறினார்கள். ஆனால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்படி என்றால், தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையா? மருத்துவத்தில் தரம் இல்லையா? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று இருந்தால், அவருக்கு யார் சிகிச்சைக் கொடுக்​கிறார்கள்? என்ன நடக்கிறது? என்பது போன்ற மூடுமந்திரங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளி சேர்ந்ததும் அவருக்குக் கொடுக்கப்படும் மருத்துவம், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பற்றி விவரம் என அனைத்தும் வெளிப்படையாக இருக்கும். ஆனால், இங்கு எல்லாமே மர்மமாக உள்ளன. இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.’’

‘‘உங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ராக்கெட் ராஜா உள்ளிட்ட சிலரை போலீஸார் குறிவைத்து உள்ளார்களாமே?’’

‘‘இன்னும் மூன்றரை வருடங்கள் எனக்குப் பதவி காலம் இருக்கிறது. மக்கள் பணி, சமூகப்பணிகளைத் தொடர்ந்து செய்வேன். சமூகப் பணிகளில் எனக்கு ஆதரவு தருபவர்களுக்கு, போலீஸார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களை மிரட்டுவதும், வீட்டுக்குச் சென்று மிரட்டுவதும் நடக்கிறது. இது தொடர்ந்தால், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு எதிர்வினை ஆற்றவேண்டிய நிலை வரும்.’’

‘‘அ.தி.முக-வில் நீங்கள் இப்போது இல்லை; நாடாளுமன்றத்தில் எப்படிசெயல்படுகிறீர்கள்?’’

‘‘நான் அ.தி.மு.க-வில் இல்லை என்றாலும், என்னை அ.தி.மு.க. உறுப்பினர் என்ற நிலையில்தான் அ.தி.மு.க. வைத்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியதை முறைப்படி நாடாளு​மன்றத்துக்கு அ.தி.மு.க. சொல்லவில்லை. எனவே, கட்சிக் கொறாடாவின் கீழ்தான் நான் பணியாற்ற முடியும். அவர்கள் உத்தரவுப்படிதான் நான் பேசமுடியும். அதனால், எனக்குப் பேச வாய்ப்பில்லாத நிலை உள்ளது. அது எனக்கு வருத்தம்தான். மக்கள் பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. அ.தி.மு.க. உறுப்பினராக நான் நாடாளுமன்றத்தில் செயல்படவே வெட்கமாக உள்ளது.’’
-எஸ்.முத்துகிருஷ்ணன்.படங்கள்: கே.கார்த்திகேய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக