புதன், 21 செப்டம்பர், 2016

திருப்பனந்தாள் காசிமட இணை சுந்தரமூர்த்தி தம்பிரான் சாவில் சந்தேகம்? பிரதே பரிசோதனைக்கு கோரிக்கை

திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சாவில் சந்தேகம் உள்ளதால் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் மடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக முத்துக்குமாரசுவாமி தம்பிரான் உள்ளார். இணை அதிபரான சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (வயது 64) நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே மடத்துக்கு வந்த டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் உடலுக்கு திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் முன்னிலையில் தருமபுரம் ஆதீனம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சுவாமிநாததம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.
உடல் அடக்கம்
 இதில் குன்றக்குடி ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்வேறு மடங்களை சேர்ந்த துறவிகள், சாதுக்கள், மதுரை ஆதீனத்தின் பிரதிநிதி காளத்தி, காஞ்சி சங்கரமட பிரதிநிதி பாலாஜி உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளின் உடல் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றி பக்தர்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலம் திருப்பனந்தாள் ஆதின மடம் அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தது. அங்கு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் உடலுக்கு விபூதி பூஜை நடைபெற்றது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை
 இதற்கிடையே வக்கீல் ஏ.எஸ்.கரிகாலன் என்பவர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வளையல்காரத் தெருவில் உள்ள ஐராவத விநாயகர் கோவிலில் பூஜை செய்துவிட்டு மடத்துக்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. திருப்பனந்தாள் காசி மட இணை அதிபர் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக